மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க தன்னால் முடிந்த வரை முயற்சிகளை மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நேர்காணலின் முழு விபரம் வருமாறு :
கே : உங்களது தாய்க் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஆரம்பகாலத்திலிருந்து செயற்பட்டு வந்த நீங்கள் சில காலம் அக்கட்சியிலிருந்து வெளியேறியிருந்தீர்கள். ஆனால் தற்போது மீண்டும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளீர்கள். உங்களது மீள் வருகையை அக் கட்சி எவ்வாறு பார்க்கின்றது?
ப : நான் மீண்டும் எனது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டமையை, கட்சியின் தலைவர், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் ஒரு முக்கியமான அம்சமாகவே கருதினார்கள். அவர்கள் என்னை அன்போடு வரவேற்றார்கள்.
நான் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்து, என்னை ‘தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து’, எனவும் எனது மீள் வருகையால் ‘கட்சியினுடைய போராளிகளுக்கு புதிய உத்வேகம்’ ஏற்பட்டிருப்பதாகவும் கட்சியைச் சேர்ந்த அனைவரும் நடைபெற்ற அனைத்து கூட்டங்களிலும் உரையாற்றினார்கள்.
அதன் பிரதிபலனாகவே எமது கட்சி தற்போது 5 பாராளுமன்ற ஆசனங்களை வென்றிருக்கின்றது. அதில் நானும் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். இது எனது கட்சிக்கு கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகின்றேன்.
கே : ஸ்ரீ.மு.கா. கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் சிலர், தாம் வகித்த பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்களே உண்மையில் கட்சிக்கும் அவர்களுக்குமிடையில் என்ன நடந்தது?
ப : கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என எமது கட்சி தீர்மானித்தபோது, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் வேறு ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரித்திருந்தார்கள். அதனையடுத்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் சஜித் பிரேமதாசவின் கட்சியுடன் இணைந்தே ஸ்ரீ.மு.கா. கட்சியும் போட்டியிட்டது. இதன்போது, கட்சிக்கு வேலை செய்ய வேண்டும், கட்சியினுடைய வேட்பாளர்களேயே ஆதரிக்க வேண்டும் என கட்சி தெளிவாகக் கூறியிருந்தது.
எனினும், நடைபெற்று முடிந்த இரண்டு தேர்தல்களிலும், கட்சியின் உயர்வுபீட உறுப்பினர் பதவியில் இருந்த சிலர் கட்சியையும் கட்சியினுடைய வேட்பாளர்களையும் ஆதரிக்காது, கட்சிக்கு எதிராக போட்டியிட்ட வேறு வேட்பாளர்களையே ஆதரித்திருந்தனர்.
இவ்வாறு கட்சிக்கு எதிராக வேலை செய்தவர்களே நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். இன்னும் அவர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தவில்லை. இவர்களை இடைநிறுத்த வேண்டும் என கட்சிக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பாக நடைபெறவிருந்த கட்சியின் உயர்பீடக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. அக் கூட்டம் மீண்டும் ஜனவரி மாதம் நடைபெறும். கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில்தான் மேலும் ஆராயப்படும்.
கே : கட்சியில் உயர் பீட உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள், தாம் வகித்த பதவிகளிலிருந்து திடீரென நீக்கப்படுவதனால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படாதா?
ப : கட்சிக்கு பின்னடைவு எனப் பார்ப்பதற்கும் மேலாக கட்சியின் ஒழுக்கம் மற்றும் கட்சியினுடைய கட்டுப்பாடு முக்கியமாகும். காலங் காலமாக கட்சியுடன் இருக்கின்றவர்கள் கட்சிக்கு எதிர்மாறாக நடந்துகொள்கின்றார்கள். அவ்வாறானவர்களை தொடர்ந்தும் கட்சியில் வைத்துக் கொண்டிருப்பதனால் சில பிரச்சினைகளும், தர்ம சங்கடங்களும் ஏற்படும். அதேநேரம் கட்சிக்கும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடாது. எனவே, இவற்றைக் கருத்திற்கொண்டே கட்சி தீர்மானங்களை மேற்கொள்ளும்.
கே: நீங்கள் கடந்த காலத்தில், ஆளுநர் மற்றும் அமைச்சராக இருந்து மக்களுக்கு பல சேவைகளைச் செய்திருந்தாலும், முஸ்லிம் மக்கள் வாழும் பல கிராமங்களில் இன்னும் பல அபிவிருத்தித் தேவைகள் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றார்களே?
ப : ஆம். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக நான் அதிகம் கவனம் செலுத்தியுள்ளேன். அதன்படி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை என்னால் முடிந்த வரை தீர்த்து வைப்பதற்கு நான் முயற்சிகளை எடுப்பேன். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
ஆனால், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக என்னால் அதிகளவு கவனம் செலுத்த முடியாது. ஏனெனில், அதிகாரம், நிர்வாகம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
எனினும், முஸ்லிம் மக்களின் பொதுவான பிரச்சினைகளாக இருந்தால் அது தொடர்பாக உரிய அமைச்சர்களுடன் கதைத்து அவற்றை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க முடியும்.
கே : கடந்த காலங்களைவிட இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ.மு.கா கட்சிக்கு குறைந்தளவிலான பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு வாக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக நினைக்கின்றீர்களா?
ப : தற்போது நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சிக்கு வாக்குச் சரிவு ஏற்பட்டிருப்பது என்பது உண்மைதான். ஆனால், ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில், 5 ஆசனங்களை பெற்றிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு தற்போது இரண்டு ஆசனங்களே கிடைத்துள்ளன. அதேபோன்று 140 ஆசனங்களை கைப்பற்றியிருந்த பொதுஜன பெரமுன இம்முறை தேர்தலில் வெறுமனே 3 ஆசனங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
அத்துடன், 70 தொடக்கம் 80 ஆசனங்களை பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, தற்போது 40 ஆசனங்களை மட்டுமே வென்றிருக்கின்றது. அதன்படி இது அனைவருக்கும் ஏற்பட்டுள்ள இழப்பாகும்.
நாட்டில் மாற்றமொன்று ஏற்படவேண்டுமென முழு இளைஞர்களும் அணி திரண்டார்கள். “அரசியலில் இது ஒரு சுனாமி” என்கின்றனர். இந்த சூழ்நிலையிலும் எங்களுடைய கட்சிக்கு 5 கிடைத்துள்ளன. இது எமக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றி மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையாக நான் கருக்கின்றேன்.
கே : தேசிய மக்கள் சக்தியின் அலை முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தாக்கம் செலுத்தியுள்ளது என கருதலாமா?
ஆம். தாக்கம் செலுத்தியுள்ளமை உண்மைதான். மிகக் கடுமையான தாக்கத்தை செலுத்தியது. கிட்டத்தட்ட மொத்த முஸ்லிம் மக்களின் வாக்குகளில் 70 சதவீதமான வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கே கிடைத்துள்ளதாக கருதுகிறோம்.
1989 ஆம் ஆண்டு முதல், தேர்தலில் போட்டியிட ஆரம்பித்த காலத்திலிருந்து கல்முனை தொகுதி, சம்மாந்துறை தொகுதி, பொத்துவில் தொகுதி போன்றவை எமது கட்டுப்பாட்டிலேயே இருந்தன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த தொகுதிகளைகூட நாம் இழந்தோம். எனவே, தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் பிரதேசங்களிலும் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி இருக்கின்றது.
எவ்வாறாயினும், உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அனைத்து பிரதேசங்களிலும் போட்டியிட்டு எனது கட்சியினுடைய ஆதிக்கத்தை நாம் மீண்டும் கைப்பற்றுவோம்.
கே : தற்போதைய புதிய ஜனாதிபதி, புதிய அரசாங்கம் தொடர்பாக உங்களின் பார்வை எவ்வாறு அமைந்துள்ளது?
ப : நாம் புதிய ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்திருக்கின்றோம். இந்த அரசாங்கம் சரியாக முன்னோக்கி பயணிக்குமானால், 5 ஆண்டு காலமும் ஆட்சியிலிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எவ்வாறு பிரச்சினைகளை கையாளப்போகின்றார்கள் என்பதுதான் முக்கியமாகும்.
இனங்களுக்கு இடையே முரண்பாடு ஏற்படக்கூடாது, அதிகார பரவலாக்கம், மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருக்கின்றார்கள்.
புதிய அரசாங்கத்தின் ஆட்சி சிறப்பாக இடம்பெறுவதற்கு எமது ஒத்துழைப்பையும் நாம் வழங்குவோம். ஆனால், இந்த ஆட்சியில் பொருட்களின் விலைகளை குறைப்பது, அரசு ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகள் போன்றனவற்றை எவ்வாறு கையாளப்போகின்றார்கள் என்பது தெரியவில்லை.
கே : மீண்டும் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு புதிய அரசாங்கத்திடம் தெரிவிக்கவில்லையா?
ப : இவ்விடயம் தொடர்பாக கூறி இருக்கின்றோம்.
அரசாங்கமும் தெரிவித்திருக்கின்றதே… ஏன் ஜனாதிபதி அநு ரகுமார திசாநாயக்கவும் இந்தியா சென்றிருந்தபோது, சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும் எனவும் அதற்கு கால அவகாசம் தேவை எனவும் குறிப்பிட்டிருக்கின்றாரே…
எதிர்வரும் செப்டெம்பரில் மாகாணசபை தேர்தல் நடைபெறும் என, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் அனைவருக்கும் தெரிவித்திருக்கின்றார். அதற்கும் மேலாக 13 ஆவது சட்டம் எதைச் சொல்லுகின்றதோ அதையே நடைமுறைப்படுத்துவோம் எனவும் அவர் கூறியிருக்கின்றார். அதற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்.
கே : கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு கணக்காளரை நியமிப்பது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?
ப : இந்த விடயத்தில் முஸ்லிம் பிரதேசத்துக்கும், தமிழ் பிரதேசத்துக்கும் எந்த ஒரு விளைவுகளையும் ஏற்படுத்தாது, யாருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தாது செயற்படவேண்டும். அல்லது இரு சமூகங்களும் ஏற்றுக்கொண்டு ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.
கல்முனை வடக்கு என்று ஒரு தனியான பிரதேச செயலகம் இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால் அது முஸ்லிம் பிரதேசங்களையும் கொண்டு வருவதுதான் தற்போது இருக்கின்ற பிரச்சினையாகும். ஆகவே, நிரந்தரமான ஒரு தீர்வு வரும் எனில் அந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்.
கே: தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை தொடர்பாக உங்கள் பார்வை என்ன?
ப : தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை, கிழக்கு மாகாணத்தில் பலப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில், 13 ஆவது திருத்தச் சட்டம், இனப்பிரச்சினைக்கான தீர்வு,
கல்முனை வடக்கு பிரதேச செயலகம், உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டுமெனில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுபட்டே ஆக வேண்டும். அந்த ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் பாடுபட வேண்டும்.
கே : நீங்கள் மிக நீண்டகாலமாக அரசியலில் அங்கம் வகிக்கின்றீர்கள். வருடாந்தம் மட்டக்களப்பில் பெய்யும் மழை வீழ்ச்சியால் பாரிய சேதம் ஏற்படுகின்றது. தூர்ந்துபோயுள்ள குளங்களைப் புனரமைப்புச் செய்தால் மழை நீரை தேக்கி வைக்கலாம் அல்லவா?
ப : உன்னிச்சைக் குளம், உறுகாமத்து குளம் மற்றும் கித்துள்வெவ போன்ற குளங்களை புனரமைக்கும் பாரிய வேலைத் திட்டங்களை நாம் கொண்டு வந்திருக்கின்றோம்.
அதற்கான நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றோம். ஆனால், நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக ஒவ்வொரு வருடமும் இந்த விடயம் இழுபறி நிலையிலேயே உள்ளது. எனினும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னும் நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
கே : இறுதியாக கூறுங்கள் உங்களுடைய ஆதரவாளர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?
ப : மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் மாத்திரமே நமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். குறிப்பாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கட்டி எழுப்புவதற்காக சர்வதேச நாடுகள் தயாராக உள்ளன. சர்வதேச சமூகத்தை கொண்டு எமது மாவட்டத்தில் காணப்படும் விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை மேய்ச்சல்தரை போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
நாம் இரு சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே எமது மக்களுக்கு விடுக்கும் கோரிக்கையாகும். இப்பொழுது நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் நியாயமாக சிந்திப்பவர்கள். இனவாதம் அற்ற கருத்துக்களை உடையவர்கள். நாங்கள் இனரீதியாக இன்றி மாவட்ட ரீதியாக ஒன்றுபட்டு செயற்பட முடியும் என நம்புகின்றேன்.
நேர்கண்டவர் வ.சக்திவேல்