இலங்கை தமிழரசுக் கட்சின் அரசியல் குழு தலைவராகவும், பெரும் தலைவராகவும் மாவை சேனாதிராஜா இருப்பார். கட்சியின் இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவாரென, இலங்கை தமிழரசுக் கட்சின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் நேற்று தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று (28) நடைபெற்ற கடசியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பல விடயங்கள் இருந்தாலும் கூட முதலாவதாக தலைவர் விடயம் குறித்து பேசப்பட்டது. இதன்போது அடுத்த மாநாடு கூடும் வரைக்குமான காலத்தில் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் பணியாற்றுவாரெனவும் தலைவர் மாவை சேனாதிராஜா அரசியல் குழுத் தலைவராகவும் செயற்பாடுவாரெனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதுமட்டுமன்றி, மாவை சேனாதிராஜா பெரும் தலைவராகவும் இருப்பார் என்றும் கூறப்பட்டது. அரசியல் யாப்புக்களுக்கு அப்பாற்பட்ட பதவிகளிலிருப்பது அர்த்தமில்லை எனவும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது. வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
வவுனியா விசேட நிருபர்