இறைவன் தந்த அழகுக்கு
இயல்பாய் இருப்பதை அறிவாயா
குறைவாய் உனை நீ நினைப்பதனால்
குதூகலம் விலகிடும் உணர்வாயா!
ரசனைகள் இங்கு பலவுண்டு
ரசிக்கத் தெரிந்தோரும் பலருண்டு
கறுப்பையும் அழகாய் கொள்வோரும்
கணிசமாய் இருப்பதைக் காண்பாயா!
உனக்குள் உன்னைத் தொலைப்பதனால்
தனக்குள் தாழ்வை வளர்ப்பதனால்
கணக்குகள் இங்கு பிழையாகும்
கண்ணீரே வாழ்வில் மழையாகும்!
உன்னை உயர்த்தி நீ பாரு
உனக்குள் தெம்பு உருவாகும்
கண்ணைத் திறந்து நடப்பதுதான்
கால்களுக்குகந்த வழியாகும்!
கறுப்பில் வெறுப்பைக் கொண்டு நீ
காசினியில் ஒருபோதும் நடவாதே
விருப்பில் வெண்மை சேர்ந்திடவே
விரயமாய் பணத்தை இறைக்காதே!
சருமத்தை வெண்மையாய் மாற்றிடவே
சந்தையில் உலாவுது கிறீமும்தான்
சகபாடியாய் மாத்திரையும் சேர்ந்துதான்
சர்ச்சையைத் தருகுது உண்மைதான்!
ஒவ்வாத்தன்மையும் உபாதைகளும்
ஒருங்கே சேரலாம் பாரு
ஒருக்காலும் இருக்குமா பிரயோசனம்
மறுக்காமல் இதை நீ கேளு!
இயற்கையோடு செயற்கை
போட்டியிட்டால்
இயல்பாய் எல்லாம் தலைகீழ்தான்
இதமாய் அழகைப் பெறுவதற்கு
இவ்வழி பிழைத்திடும் கேளாய் நீ!
தற்காலிக அழகைப் பெற்றிடவே
தருவித்திடும் மருந்து முறையல்ல
அக்கால மனிதரில் அழகொளிர
இக்கால மருந்து பயன்படல்ல!
வெண்மை நிறமெல்லாம் அழகல்ல
கறுப்பு நிறமெல்லாம் அருவருப்பல்ல
வெண்மையை ஒதுக்கிய கறுப்பினிலும்
வெகு அழகு மிகைத்திடும் பார்த்திடு!
அழகை விரும்புவது பிழையல்ல
அதற்காய் விரயம் சரியல்ல
கிறீமும் மாத்திரையும் கலப்பதனால்
கிஞ்சித்தும் அழகு நிலைத்திடாது!
நாளடைவில் எல்லாம் மாயைதான்
நாகரிகம் தந்திடும் நோயைத்தான்
நாணமாய் அமைந்திடும் வாழ்க்கைதான்
நாசமாய் போயிடும் வேட்கைதான்!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
ஆன்றோர் கூறிய வாக்கு அது
உள்ளம் சீராய் அமைந்தாலே
எல்லாம் வசீகரம் ஆகிவிடும்!