இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை கைதான கணவன், மனைவி ஆகியோர் எதிர்வரும் (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான இத்தம்பதியினர், நேற்றுமுன்தினம் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பிரிவெல்த் குளோபல் நிதி நிறுவனத்தை நடத்திய இச்சந்தேக நபர்கள் அதிக இலாபத்தை பெற்றுத்தருவதாகக் கூறி, 160 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளனர். இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதனடிப்படையில் கொழும்பு-05 ஐ வசிப்பிடமாகக் கொண்ட 49 வயதான அஹமட் சரிம் மொஹமட் சியாப், அவரது 43 வயதான மனைவி பாத்திமா பர்சானா மெர்கப் ஆகியோரே கைதாகியிருந்தனர்.
இவர்களது 14 வயது பிள்ளை 2021 இல் படகு மூலம் சட்டவி ரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இச்சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதால்,இவர்களுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது. சந்தேக நபர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் சிவப்பு எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சந்தேகநபர்கள் இந்தியாவின் வேதநாயகம் பிரதேசத்தில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளால் கைதான இவர்கள், மூன்று வருடங்கள் அங்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
கொழும்பு 05 பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் அவரது 14 வயது மகனும் நேற்றுமுன்தினம் பிற்பகல் எயார் இந்தியா விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத் தை வந்தடைந்தபோது கைது செய்யப்பட்டனர்.
அவரது 43 வயதான மனைவி மற்றுமொரு விமானத்தில் இரவு வந்திறங்கிய போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய நிதி நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை எனவும் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் சம்மாந்துறை, கல்முனை, அம்பாறை ஆகிய பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து வர்த்தகத்தை ஆரம்பித்ததாகவும் நட்டம் ஏற்பட்டதையடுத்து நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி மோசடி தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.