முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் அரசாங்க காலப்பகுதியில் சட்டத்துறை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை விசாரணை செய்து தற்போதைய அரசாங்கம் வெளிக்கொணர வேண்டுமென, இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம், மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே சாணக்கியன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் கடந்த ஆட்சிக்காலத்தில் ஜோசப் ஐயாவின் படுகொலைக்கு நீதிகிடைக்குமென்ற எந்த நம்பிக்கையையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை.
அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுறை சந்திரகாந்தன், கோட்டாபயவின் காலப்பகுதியில் விடுதலை செய்யப்பட்டார். பிள்ளையானுடன் இருந்த அசாத் மௌலானா என்பவர் சுவிஸ் அல்லது பிரான்ஸ் சென்று அங்கிருந்து பல்வேறு உண்மைகளை கூறியுள்ளார்.
இது தொடர்பாக சர்வதேச தொலைக்காட்சி ஒன்று தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. பிள்ளையானை விடுதலை செய்வதற்காக சட்ட மாஅதிபர் திணைக்களம் சிலரை இடமாற்றிய விடயங்களும் அந்த காணொளியில் சொல்லப்பட்டது. அன்று நீதி அமைச்சராக இருந்த அலி சப்ரியின் வழிகாட்டலிலேதான் இவை நடைபெற்றதாகவும் சொல்லப்பட்டது. பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டதால், கோட்டபாய ஆட்சியில் எங்களுக்கு நீதிகிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
கடந்த காலத்தில் நடந்த பல விடயங்கள் தொடர்பில் செயற்படுவோம் எனவும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் உட்பட சில படுகொலைகளை ஆராய உள்ளதாகவும் இந்த அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனால், அந்த விசாரணை பட்டியலில் ஜோசப் பரராஜசிங்கத்தின் பெயர் உள்வாங்கப்படவில்லை. நாட்டின் சட்டத்துறைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மையை தற்போதுள்ள அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும். அசாத் மௌலானா சொன்ன விடயங்களை வைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
குற்றப் புலனாய்வுத் துறை, பிள்ளையானை விடுதலை செய்வதற்காக முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மீண்டும் ஒரு விசாரணையை ஆரம்பிக்க வேண்டும். ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்து தொடர்புபட்டவர்களை கைது செய்ய வேண்டும்.
ஜோசப்பரராஜசிங்கம் ஐயாவின் படுகொலைக்கு மட்டுமல்லாமல் வடக்கு, கிழக்கில் நடந்த அனைத்து படுகொலைகளுக்கும் நீதியை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் செயற்படவேண்டுமென்றும் சாணக்கியன் எம்.பி கோரிக்கை முன்வைத்துள்ளார்.