தினகரன் பிராந்திய நிருபரான தமிழ்ச் செல்வனை தாக்கி கடத்துவதற்கு முயற்சி செய்த சந்தேக நபர் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் “ஏ09” வீதியில் கடந்த (26) இடம்பெற்றது. கறுப்பு நிற வாகனத்தில் வந்தவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தமிழ்ச்செல்வன் தெரிவிக்கையில், இருவர் என்னைத் தாக்கினர்.
இதனால்,நெஞ்சுக்கு மேல் இன்னும் வலிக்கிறது. ஆனால் கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்களின் செயற்பாடுகள் நெஞ்சுக்குள் அதிக வலியை ஏற்படுத்தியுள்ளது என மிக வேதனையுடன் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் மற்றும் கடத்தல் முயற்சி குறித்து உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து ஊடக அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு சென்றுள்ளதாகவும், சமூக சீர்கேடுகளை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர் ஒருவரின் செயற்பாடுகளை முடக்க நினைப்பது ஏற்புடையதல்ல என்றும் சில ஊடகவியலாளர்கள் முகநூலில் பதிவிட்டுள்ளர்.