2004 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதல் முறையாக ஆட்சியமைத்த சமயத்தில் மன்மோகன் சிங்கும் முதல் முறையாக பிரதமராகினார். மக்கள் நலன் சார்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் இந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதில் மிக முக்கியமானது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எனும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம். மக்களிடம் காங்கிரஸ் அரசுக்கு நற்பெயரை பெற்றுக்கொடுத்த இந்தத் திட்டத்தை பரந்துபட்டு விஸ்தரிக்க மன்மோகன் சிங் முடிவெடுத்தார். பத்திரிகைகளால் பாராட்டப்பட்ட இந்த முடிவுக்கான மொத்த பாராட்டையும் நேரு குடும்பமே எடுத்துக் கொண்டது. ராகுல் காந்தி மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகு அவரின் ஆலோசனையின்படிதான் பிரதமர் அந்தத் திட்டத்தை அறிவித்தார் என செய்தி பரப்பப்பட்டது. அப்போதும் மன்மோகன் சிங்கின் பதில் என்ன தெரியுமா? மௌனம் மட்டுமே..!
குழந்தைப் பருவம்!
பொருளாதார நிபுணத்துவத்துடன் கலந்த அவருடைய மௌனம்தான் அவருக்கு பிரதமர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது. மௌனம்தான் அவரின் ஆயுதம். மௌனம்தான் அவரின் அடையாளம். அதே மௌனம்தான் அவரை நார் நாராகக் கிழித்துத் தொங்கவிடவும் அனுமதித்தது. அவர் மௌனத்தின் ஒளியால் மிளிரவும் செய்திருக்கிறார், சுட்டெரிக்கவும் பட்டிருக்கிறார்.
மௌனத்தின் குழந்தையான இந்த மன்மோகன் சிங் பிரிவினைக்கு உட்படாத இந்தியாவின் பஞ்சாபில் காஹ் எனும் குக்கிராமத்தில் பிறந்தவர். முறையான குடிநீர் வசதி இல்லாத, மின் வசதி இல்லாத அடிப்படைத் தேவைகளுக்கே மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கும் கிராமம். அங்கேதான் 1932 இல் செப்டெம்பர் 26 ஆம் திகதி மன்மோகன் சிங் பிறந்தார். இளம் வயதிலேயே தனது தாயை இழந்தார். தந்தைதான் ஒரே ஆதரவு. அவரும் தன் பணி நிமித்தமாக பல நாட்கள் வெளியூர்களுக்கு பயணிக்கக்கூடியவர். இதனால் உறவினர்களின் அரவணைப்பிலேயே வாழ்கிறார்.
தன்னுடைய தேவைகளை வாய்விட்டு கேட்கும் அளவுக்கான சுதந்திரம் அவருக்கு குழந்தைப் பருவத்தில் வாய்க்கவில்லை. அதுவே அவரை கூச்ச சுபாவம் மிக்கவராக, எதையும் வெளிப்படையாக படபடவென பேசாத மெளனியாக மாற்றியது. சென் ஜோன்ஸ் கல்லூரி விடுதியில் ஒவ்வொரு நாளின் விடியலையும் முதலாக தரிசிக்கக் கூடியவர் மன்மோகன் சிங்தானாம். ஏனெனில், அவருக்கு தலைப்பாகையை கழற்ற எப்போதுமே கூச்சமாக இருக்குமாம். அதனால் மற்ற மாணவர்கள் எழுந்திருப்பதற்கு முன்பாகவே எழுந்து வெதுவெதுப்பான தண்ணீர் இல்லையென்றாலும் குளிர்ந்த தண்ணீரில் குளித்துவிட்டு ஓடி வந்துவிடுவாராம். அந்தச் சிறுவன்தான் பின்னாளில் பிரதமராக தேசியக்கொடியை ஏற்றி கோடிக்கணக்கான மக்களுக்கு தேசத்தின் வழிப்போக்கை உணர்த்தும் வகையில் மணிக்கணக்கில் உரையாற்றினார் என்றால் நம்ப முடிகிறதா?
சுற்றத்தார் கொடுக்காத அரவணப்பை மன்மோகனுக்கு கல்வி கொடுத்தது. அதனால் படிப்பின் மீது அவருக்கும் ஏகப்பிரியம். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வரை சென்று வர்த்தகம் பயின்றார். திரும்பி வந்து தான் படித்த பஞ்சாப் பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகவும் பணியாற்றினார். அயலக உறவு குறித்தும் சக நாடுகளுடனான பொருளாதார பந்தம் குறித்தும் அப்போதே அவருக்கு தெளிவான பார்வை இருந்தது. இதனால் அவருக்கு ஐ.நா.வில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது.
United Nations Conference on Trade and Development என்ற அமைப்பில் தேர்ந்த பொருளியல் அறிஞர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
‘சில சமயங்களில் நாம் முட்டாள்த்தனமான முடிவுகளையும் எடுத்துதான் ஆகவேண்டும்.’ எனச் சொல்லி மன்மோகன் மீண்டும் இந்தியா கிளம்பி வந்தார். அவரின் திறமைக்கான அதிகாரத்தின் வாயிற்கதவுகள் இந்த முட்டாள்த்தனமான முடிவுக்குப் பின்தான் திறக்க ஆரம்பித்தன. 70 களின் தொடக்கத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டார். இதன்பிறகு அரசு இயந்திரத்துக்குள் மன்மோகன் சிங்கின் வளர்ச்சி படுவேகமாக இருந்தது. பல்வேறு துறைகளின் ஆலோசகர், திட்டக்குழுவில் முக்கியப் பதவி, ரிசர்வ் பேங்க் ஆளுநர் என அதிகாரத்தின் உச்சிகளை பணிவின் துணைகொண்டு எட்டினார்.
காஹ் எனும் வளர்ச்சியின் காற்றுபுகாத குக்கிராமத்தில் பிறந்த மன்மோகன் சிங் இதன்பிறகு நிகழ்த்தியதுதான் வரலாறு. 90 களின் ஆரம்பக்கட்டம். ராஜீவ் காந்தி உயிரிழந்து காங்கிரஸ் தேர்தலில் வென்றிருந்தது. காங்கிரஸை போலவே இந்தியாவும் குழப்பத்தில் சிக்கிக் கொண்டிருந்தது. வளைகுடா போரினால் ஏற்பட்ட விளைவுகள், அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட சுணக்கம் என இந்திய பொருளாதாரத்தின் மீது பெருத்த அடி விழுந்திருந்தது. சுதந்திரமடைந்து அரைநூற்றாண்டை தொடுவதற்குள் தேசத்தின் பொருளாதார கட்டமைப்பு சுக்குநூறாக நொறுங்கி விழும் நிலை. நேருவின் குடும்பத்தில் அடுத்த பிரதமருக்கான தேர்ச்சியை யாரும் பெறாத நிலையில் பி.வி.நரசிம்ம ராவை பிரதமராக்கியிருந்தார்கள்.
பொருளாதார நிலைமையை சீராக்க ஒரு மேதமை வாய்ந்த நபரை நிதியமைச்சராக கொண்டு வர நரசிம்ம ராவ் விரும்பினார். ஐ.ஜி படேலை அழைத்தார். 1977 முதல் 1982 வரை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் அவர். நரசிம்மராவின் அழைப்புக்கு அவர் இசைவு தெரிவிக்கவில்லை. அடுத்ததாக நரசிம்ம ராவ் அழைத்தது மன்மோகன் சிங்கைதான். அப்போது அவர் பல்கலைக்கழகங்களின் மானியக் குழுவின் தலைவர். மன்மோகன் சிங் சவாலுக்கு தயாரானார்.
சோனியாவின் நம்பிக்கை!
பி.வி.நரசிம்ம ராவை அரசியல் குருவாக கொண்டிருந்தாலும் தனது பொருளாதார மேதமையால் சோனியா காந்திக்கும் நெருக்கமானவராக மாறினார் மன்மோகன் சிங். 1998 இல் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை சோனியா ஏற்கிறார். அந்தக் காலக்கட்டத்தில்தான் ராஜீவ் காந்தியின் பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைகளுக்கான பொறுப்பையும் மன்மோகனுக்கே கொடுத்திருந்தார் சோனியா. இந்த சமயத்தில் முன்பு குறிப்பிட்ட அந்த தெற்கு டெல்லி தொகுதியில் மன்மோகன் சிங் தோல்வியைத் தழுவுகிறார். மக்களும் கட்சிக்காரர்களும் கைவிட்ட போதும் சோனியா காந்தி மன்மோகன் சிங்கை கைவிடவில்லை. அவரை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். சோனியா காந்தி மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட, மன்மோகன் சிங் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார்.
மன்மோகன் சிங்
‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பிரசாரத்துடன் பெருத்த நம்பிக்கையோடு ஆறு மாதத்துக்கு முன்பாகவே ஆட்சியை கலைத்து தேர்தலை சந்தித்தார் வாஜ்பாய். ஆனால், வாஜ்பாய் எதிர்பார்த்த வெற்றி பா.ஜ.கவுக்கு கிடைக்கவில்லை. காங்கிரஸூம் பெரும்பான்மை பெறவில்லை. 14 கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியை கட்டமைத்து காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. ஆயினும் யார் பிரதமராவது என்பதில் சிக்கல். காங்கிரஸ்காரர்களுக்கு சோனியாதான் பிரதமராக வேண்டும்.
சோனியாவுக்கும் அந்த விருப்பம் இருந்தது. ஆனால், ஒரு இத்தாலி நாட்டுப் பெண் இந்தியாவை ஆள்வதா என எதிர்க்கட்சிகள் கச்சைக் கட்டின.
மன்மோகனை ‘Accidental PM’ என விமர்சிப்பார்கள். ஆனால், அதை அவர் விமர்சனமாக கருதவில்லை. அவரே தன்னை ஒரு தற்செயல் பிரதமராகத்தான் நினைத்துக் கொண்டிருந்தார். கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பில் இயன்றவரை மக்களுக்கு எதையாவது செய்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தை மட்டுமே கொண்டிருந்தார்.
மன்மோகனின் பத்திரிகையாளர் சந்திப்புகள்!பேசத்தெரியாத பிரதமர், எதோ எதேச்சையாக பிரதமராகிவிட்டார், அவர் பொம்மை பிரதமர் என்றுதான் எதிர்க்கட்சிகள் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால், உண்மையில் அவர் பேச வேண்டிய இடங்களில் அதிகம் பேசியிருக்கிறார்.
பத்திரிகையாளர்களின் பேனாக்களையும் மைக்குகளையும் பார்த்து அவர் அஞ்சியிருக்கவில்லை. எந்த கேள்வியாக இருந்தாலும் எதிர்கொள்ளத் தயாராகவே இருந்திருக்கிறார்.
ஆட்சியமைத்து சில மாதங்களிலேயே ஒரு பெரிய பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கு 52 கேள்விகளுக்கு பதில் கூறியிருந்தார்.
பிரதமர் பதவியிலிருந்து இறங்கிய பிறகும் ஒரு மாநிலங்களவை உறுப்பினராக 92 வயது வரைக்கும் சளைக்காமல் இயங்கிக் கொண்டிருந்தார்.
ஆளும் பா.ஜ.க அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக காத்திரமான விமர்சனங்களை முன் வைத்தார். பதாகைகளை ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்டார்.
ஒரு பண்பட்ட அரசியலாளராக கடைசி வரை இயங்கிவிட்டே ஓய்ந்தார்.
ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன்பாக மன்மோகன் சிங்கிடம் அவரின் ஊடக ஆலோசகர் சஞ்சய் பாரு, ‘நீங்கள் வேண்டுமானால் குளித்து ப்ரெஷ் ஆகி வாருங்களேன்!’ எனக் கூறியிருக்கிறார். அதற்கு மன்மோகன் சிங், ‘சிங்கம் எப்போவாச்சு பல் துலக்கியிருக்கா?’ எனக் கேட்டு சிரித்திருக்கிறார்.
அ, கனகசூரியர்