போதைப்பொருள் பாவனை மற்றும் மது பாவனை காரணமாக சமூகத்தில் பல்வேறுப் பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.
குறிப்பாக, குடும்ப வன்முறைகள், தற்கொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள், சிறுவர் துஷ்பிரயோகம், கொலை, கொள்ளை என சிறு பிரச்சினைகள் முதல் பாரதூரமான பிரச்சனைகள் வரை இதனால் தலைவிரித்து தாண்டவம் ஆடுகின்றன. போரினாலும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் கிளிநொச்சி மாவட்டத்தில், ஒரு இலட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து 895 பேர் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்குள் 16க்கும் மேற்பட்ட மதுபான சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதற்குரிய அனுமதிகள் எவ்வாறு அடுத்தடுத்து வழங்கப்பட்டன? என்ற சந்தேகங்கள் பலரிடமும் எழுகின்ற போதும் அதற்கான பதில்களை யாரும் வழங்குவதற்கு தயாராக இல்லை.
மிக குறுகிய காலத்தில் கிளிநொச்சியில் 16 மதுபானசாலைகள் திறப்பதற்கு யார் யார் காரணம்?
இவ்வாறு அடுத்தடுத்து மதுபானசாலைகள் திறக்கும்போது ஏன் மாவட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது அரசியல் கட்சிகளோ போலிகளாக பெயரளவில் இயங்கி வரும் அமைப்புகளோ இதுவரை போராட்டம் எதையும் செய்யாமல் மௌனமாக இருக்கிறார்கள்?
மதுபான சாலைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தபட்டு, மதுபான சாலைகள் உருவாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. ஏன் இங்கு தடுக்க முடியாது போனது?
கிளிநொச்சியில் முழங்காவிலில் பகுதியில் மதுபானசாலை திறக்கப்பட முயற்சித்த போது, மக்கள் அதற்கு எதிராக வழக்கு தொடுத்து அதனை மூடினார்கள்.
மன்னாரில் திறக்கப்பட்ட மதுபானசாலை மக்களின் எதிர்ப்பால் மூடப்பட்டது.
ஆனால், கிளிநொச்சியில் இவ்வளவு மதுபான சாலைகளும் திறக்கப்படும்போது எதிர்க்கப்படவில்லை.
அதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள், கல்வியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரிடமும் காணப்படுகின்றது.
ஆனால், இன்றுவரை அந்த மதுபான சாலைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
பொருளாதார ரீதியாகவும் வறுமையினாலும் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்த மாவட்டத்தில் மேலும் மக்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கும் இளம் சமூகத்தை சீர்குலைப்பதற்குமாகவே இதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று பலரும் குறிப்பிடுகின்றனர்.
இளம் தலைமுறையை மதுவுக்கு அடிமையாக்குவதற்கு மதுபான சாலைகள் யாவும் பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள் என்பவற்றை எந்த விதத்திலும் கருத்திற்கொள்ளாது திறக்கப்பட்டுள்ளதால். அதற்கு எதிர்ப்புகள் இல்லாமையால் இளைஞர்கள் தவறான பாதைக்குள் செல்ல முனைவார்கள்.
இந்த மாவட்டமானது வறுமையில் போசாக்கின்மையில் முன்னிலை வகிக்கின்றது.
கல்வியில், அபிவிருத்தியில் பின்னிலை வகிக்கின்றது.
இவ்வாறு கிளிநொச்சியானது பாதகமான நிலையில் காணப்படுகின்றன.
ஆனால், 1 இலட்சத்து 49 ஆயித்து 985 பேருக்கு 29 மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
மதுபான சாலைகளின் எண்ணிக்கையில் கிளிநொச்சி முன்னிலை வகிக்கிறது.
கடந்த வருடம் வழங்கப்பட்ட 16 மதுபான சாலைகளை விட, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் பியர் வகைகளை விற்பனை செய்யும் மதுபான நிலையங்கள் 11 காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜது பாஸ்கரன்