மேற்காசிய அரசியலில் சிரியா மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்க்கை சிரியா மக்கள் மத்தியில் மட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப்படுகிறது. ஏறக்குறைய 54 வருட சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததாகவும் கிளர்ச்சி குழுக்களின் செல்வாக்கு வளர்ந்துள்ளதாகவும் அது மதச்சார்பற்ற ஜனநாயக ஆட்சியை மலரச் செய்யும் என்றும் எல்லாத் தரப்புகளாலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான எதிர்பார்க்கையை ஏற்படுத்தும் விதத்தில் சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைமை ஏற்றுள்ள அலமெட் அல்ஷிரா புதிய எண்ணங்களையும் நவீன அரச கட்டமைப்பின் சிந்தனைகளையும் முதன்மைப்படுத்தி வருகிறார். மறுபக்கத்தில் முன்னாள் ஆட்சியாளர் அல் அஸாத்தின் ஆட்சி ஏற்படுத்திய கொடுமைகளையும் அழிவுகளையும் அம்பலப்படுத்தி வருகின்றார். இக்கட்டுரை அமெரிக்க இராஜதந்திரக் குழுவின் சிரியாவுக்கான விஜயமும் அதனால் ஏற்பட்டுள்ள அதிர்வுகளையும் தேடுவதாக உள்ளது.
20.12.2024 அமெரிக்காவின் இராஜதந்திர குழு சிரியாவின் தலைநகரை நோக்கி கிளர்ச்சி குழு உடனான உரையாடலுக்கு சென்றிருந்தது. எச்ரீஎஸ் என அழைக்கப்படும் குழுவையும் பயங்கரவாத அமைப்பாகவும் அதன் தலைமையும் கைது செய்ய பிரகடனம் வெளியிட்ட அமெரிக்கா, தற்போது அத்தகைய கிளர்ச்சிக் குழுவோடு உரையாடலை மேற்கொண்டுள்ளது. அது மட்டுமல்லாது அக்குழுவினருக்கு பொருளாதார உதவிகளையும் சலுகைகளையும் அறிவித்ததோடு இராஜதந்திர ரீதியான உறவை பலப்படுத்தும் விதத்தில் அமெரிக்காவின் இராஜதந்திர குழுவினர் சிரியாவின் கிளர்ச்சி குழுவோடு உரையாடல்களை முதன்மைப்படுத்தி உள்ளனர். உரையாடல்களின் விளைவுகளை விரிவாக நோக்குவது அவசியமானது.
முதலாவது அமெரிக்க இராஜதந்திர குழுவினர் சிரியாவின் கிளர்ச்சி குழுவினர்களுடன் மேற்கொண்ட உரையாடலில் மூன்று பிரதான விடயங்களை முதன்மைப்படுத்தி இருந்தனர். குறிப்பாக ஐஎஸ்ஐஎஸ் என அழைக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத குழு சிரியாவின் ஆட்சி முறையில் எத்தகைய பங்கெடுப்பையும் பெற்று விடக்கூடாது என்பதில் அமெரிக்க தூதுக் குழுவினர் கவனம் கொண்டிருந்தனர். அதற்கான உத்தரவாதங்களையும் சிரியா கிளர்ச்சி குழுவினரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். அவ்வாறே சிரியாவினுடைய நலன்களும் பிராந்தியத்தினுடைய நலன்களும் அமெரிக்காவினுடைய நலன்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி உரையாடுவதற்கான களத்தை திறந்திருப்பதோடு அதற்கான அடிப்படைகள் சிலவற்றையும் விவாதித்துள்ளனர். மேலும் அவர்களது உரையாடலில் பயங்கரவாதத்தை முதன்மைப்படுத்தும் எத்தகைய ஆட்சி செய்முறைகளையும் அத்தகைய பயங்கரவாத குழுக்களையும் குறிப்பாக ஈரானின் ஆதரவு பெற்ற குழுக்களையும் முற்றாகவே நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர். இதற்குப் பின்னால் ஆழமான அரசியல் மேற்காசிய பிராந்தியத்தில் நிகழும் வாய்ப்பு எழுந்துள்ளது.
இரண்டாவது அமெரிக்க தூதுக் குழுவினர் முன்வைத்த அம்சங்களில் ஐஎஸ்ஐஎஸ் மீதான அமெரிக்காவின் கவனம் குவிந்திருப்பதைக் காட்டுகின்றது. அதற்கான அடிப்படை செப்டெம்பர் 11 தாக்குதைலயும் அதன் பின்னால் உள்ள அரசியலையும் கருத்தில் கொள்வதாக அமைந்திருக்க முடியும். ஆனால் ஈரான் குறித்தும் பயங்கரவாத குழுக்கள் குறித்தும் அமெரிக்காவின் அவதானம் என்பது பிராந்திய அரசியலை தமது பிடிக்குள் வைத்துக் கொள்வதற்கான நகர்வாகவே தெரிகிறது. ரஷ்யா – உக்ரைன் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் போரையும் கையாளுகின்ற விதத்தில் ஈரான் பற்றிய கொள்கையை சிரியாவின் புதிய ஆட்சி முதன்மைப்படுத்த வேண்டும் என்பதில் அமெரிக்க தூதுக் குழுவினர் கவனம் கொண்டிருந்தனர். அமெரிக்க- – இஸ்ரேலியக் கூட்டு அடைந்திருக்கும் பிரதான வெற்றி சிரியாவை தமது ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்துள்ளமையாகும். இது இஸ்ரேலின் எல்லையோரத்தில் அமைந்துள்ள சிரியாவை இஸ்ரேலுக்கு ஆதரவாக மாற்றுவதாகவே தெரிகிறது. அதாவது இஸ்ரேலின் ஆதரவு கொண்ட இன்னொரு அரசின் வடிவமாகவே சிரியாவின் கிளர்ச்சி குழுக்களின் எழுச்சியை அமெரிக்கா கருதுகின்றது.
மூன்றாவது சிரியாவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் என்பது அல் அஸாத்துக்கு மட்டுமல்ல ரஷ்யாவுக்கும் தோல்விகரமான ஒரு அரசியலாகவே காணப்படுகிறது. ரஷ்யாவின் கவனத்தை உக்ரேன் பக்கம் முதன்மைப்படுத்தியதன் மூலம் அமெரிக்கா இந்த வெற்றியை தனதாக்கியுள்ளது. உக்ரைன் போர் மாஸ்கோவை நோக்கி நகரத் தொடங்கி இருப்பது விளாடிமிர் புட்டினுக்கு அதிக நெருக்கடியை கொடுத்திருக்கிறது. இதனால் சிரியா மீதான கவனத்தை ரஷ்யாவினால் முதன்மைப்படுத்த முடியவில்லை. உக்ரையின் – ரஷ்ய போரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரும் அமெரிக்காவுக்கு கிடைத்த வாய்ப்புகளாகவே தெரிகின்றது. இந்த வாய்ப்பு சிரியாவின் புதிய ஆட்சியின் எழுச்சியாகும். இத்தகைய அறுவடையை மேற்கொண்டதன் மூலம் மேற்காசிய அரசியலில் இஸ்ரேல் மேற்குலகக் கூட்டில் உபாயம் வெற்றி கண்டுள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சிரியாவின் தலைநகரில் மையம் கொண்டுள்ளன. இதற்கான வலியை யூதர்களும் உக்ரைனியர்களுமே கொடுத்துள்ளனர். அதன் பயன்களை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் அனுபவிக்க ஆரம்பித்துள்ளன.
நான்காவது சிரியாவின் புதிய ஆட்சி அமெரிக்க நட்புடனான ஆட்சியாக மாறுவதற்கு சில அடிப்படைகளை கொண்டிருக்கின்றது. குறிப்பாக சிறிய கிளர்ச்சிக் குழுவின் தலைமை தலிபான்கள் போன்று அல்லாமல் ஜனநாயகம், சுதந்திரம், பெண் விடுதலை போன்ற பல அம்சங்களை முன்னிறுத்தி உரையாடல்களை வெளிப்படுத்தி வருகின்றது. இவை அனைத்தும் மேற்கு நாடுகளின் சுலோகங்களே.
அல் அஸாத்தும் ரஷ்யாவும் வகித்த சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுபட்டு தாராள ஜனநாயக முகத்தை சூடிக்கொண்டு மேற்குலகத்தின் ஆட்சிக்குள் சிரியா சிக்கியுள்ளது. கிளர்ச்சிக் குழுக்களை புதிய ஆட்சியாளர்களாக மக்கள் கருதத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவுகைள அடுத்து வரும் தசாப்தங்களில் அந்த மக்கள் உணரக்கூடியதாக இருக்கும். ரஷ்யாவின் பிடிக்குள் இருந்து விடுபட்ட சிரியா அமெரிக்காவின் பிடிக்குள் அகப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பிடி சர்வாதிகாரமானதும் மனித உரிமை மீறலானதும் கொலை கலாசாரத்தைக் கொண்டதும் அடிமைத்தனத்தின் அடையாளமாக இருந்ததென்பது பொது அடிப்படையே. அமெரிக்காவின் ஆட்சியில் சுரண்டலும், வறுமையும், அடிமைத்தனமும், சூறையாடலும் எல்லை மீறுகின்ற போது போர்கள் மூளும் என அதன் தாராளமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை சிரியா மக்கள் மீள எதிர்கொள்ள தயாராகின்றனர். புதிய ஆட்சி என்பது அத்தகைய தயார்படுத்தலுக்கான முகவர்களாக காணப்படுகிறது.
மேற்குலகம் அடிப்படையில் இஸ்லாத்தின் சிந்தனைகளுக்கும் கொள்கைகளுக்கும் மத வழிபாடுகளுக்கும் எதிரானது. நாகரிகங்களின் மோதலே மேற்குலக இஸ்லாமியர்களுக்கு இடையில் நிகழும் போர்களாகும். இதனையே மேற்குலகம் மேற்காசியாவில் ஏற்படுத்த முனைகிறது. கிளர்ச்சிக் குழுவின் வருகைக்குப் பின்னால் மேற்குலகத்தின் இருப்பும் தெளிவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
எனவே புதிய ஆட்சியும் முடிந்து போன ஆட்சியும் மாறுபாடற்ற சுதந்திரம் இல்லாத ஆட்சியின் அடையாளங்களாகவே காணப்படுகின்றது. ரஷ்யா- – அல் அஸாத்தின் வீழ்ச்சி அமெரிக்கா – அல்ஷூராவின் ஆட்சியாக மாறி உள்ளது.
இதனால் மேற்கு ஆசியாவின் பிடி மேற்குலகத்தின் கரங்களில் வலுவான ஒரு நிலைக்குள் நகருகின்றது. இஸ்ரேல் – மேற்குலக கூட்டு பெரும் வெற்றி ஒன்றை அடைந்துள்ளது.