ரவிச்சந்தர் அஷ்வின், அனில் கும்ப்ளேவின் வழிவந்த இந்தியாவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் தோன்றிய சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்றும் குறிப்பிடலாம்.டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் அவர், அனில் கும்ப்ளேவுக்கு அடுத்து இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவராகவும் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை பெற்று முத்தையா முரளிதரன் எட்ட முடியாத தூரத்தில் முதலிடத்தில் இருந்தாலும் கும்ப்ளேவுக்கும் அஷ்வினுக்கும் இருக்கும் தூரம் 87 விக்கெட்டுகள்தான்.டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது அதிக விக்கெட்டுகளாக அனில் கும்ப்ளே 610 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதோடு அஷ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 38 வயதாகும் அவருக்கு குறைந்ததது இன்னும் இரண்டு ஆண்டுகளாவது டெஸ்ட் ஆட முடியும். இந்தியாவின் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவராக முதலிடத்தைப் பிடிப்பது என்பது கூட அதிக சவாலாக இருந்திருக்காது. ‘என்னுடைய சாதனையை அவர் முறியடித்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால், திடீரென அதிர்ச்சியான முடிவை அறிவித்திருக்கிறார். உங்கள் வாழ்க்கையை இன்று சர்வதேச அளவில் முடித்துக் கொண்டதில் நான் சற்று ஏமாற்றமடைந்தேன்’ என்று கும்ப்ளேவே வருத்தம் அடைகிறார். உண்மையில் அஷ்வின் கூட இப்படி திடீரென்று ஓய்வு முடிவை எடுக்க வேண்டி வரும் என்று நினைத்திருக்க மாட்டார். 14 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடி இருக்கும் அவர் அணியில் தனக்கான இடம் நழுவிப்போவதை நன்றாக உணர்ந்தார். இந்தப் பின்னணியிலேயே அவுஸ்திரேலிய சுற்றின் பாதி நடுவிலேயே இப்படி திடுதிடுப்பென்று ஓய்வை அறிவித்திருக்கிறார். 2023இல் லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் அஷ்வின் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இந்தியாவின் முதன்மை டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளர் என்ற இடத்தில் இறக்கம் கண்ட தருணமாக அதனை குறிப்படலாம். இந்தத் தருணம் அஷ்வினின் மனதில் ஆறாத காயமாக மாறியது. இதுகுறித்து அவர்; பேசுகையில், ‘ஏன் துடுப்பாட்ட வீரராக இருந்து பந்துவீச்சாளராக மாறினோம் என்ற வருத்தம் ஏற்படுகிறது. எந்த துடுப்பாட்ட வீரரையும் ஆடுகளத்திற்கு ஏற்ப இருக்கையில் அமரவைக்க மாட்டார்கள். நன்றாக சோபிக்கிறார்களா, என்று மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் பந்து வீச்சாளர்களை, குறிப்பாக சுழல் வீரர்களை மட்டும் மிக சாதாரணமாக இருக்கையில் அமரவைத்து விடுவார்கள்’ என்று ஆதங்கப்படுகிறார். 2018–19 தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பின் இந்திய அணியில் அஷ்வினின் பந்துவீச்சு அபாரமாக முன்னேற்றம் அடைந்தது. அதேபோன்று துடுப்பாட்டத்திலும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால் வெளிநாடுகளில் விளையாடும் போதும் முதன்மை சுழல் வீரராக இருக்க வேண்டும் என்பதே அஷ்வினின் விருப்பமாக இருந்தது. ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முன்னிலை பந்துவீச்சாளராக இருப்பதால், அஷ்வினின் விருப்பத்தில் எந்த தவறும் கிடையாது. அதேபோன்று அவுஸ்திரேலியாவில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அஷ்வின் நன்றாக அறிவார். கடந்த முறையே அதனை நிரூபிக்கவும் செய்துள்ளார்.ஆனால் இம்முறை பேர்த் டெஸ்ட் போட்டியில் வொஷிங்டன் சுந்தருக்கு தான் முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்பின் பகலிரவு டெஸ்ட் போட்டியில் அஷ்வினை ரோஹித் ஷர்மா மற்றும் காம்பீர் இருவரும் வற்புறுத்தியே விளையாட வைத்திருக்கின்றனர். கடைசியாக கப்பா டெஸ்டில் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டதால், மீண்டும் அஷ்வின் மனதளவில் ஓய்வு பெற தயாராகியுள்ளார்.இருப்பினும், அடுத்த 2 போட்டிகளிலும் தனது தேவை இருக்கிறதா என்று தலைவர்; ரோஹித் ஷர்மா மற்றும் கம்பீர் இருவரிடமும் கேட்டு அறிந்து கொண்டுள்ளார். ஏனென்றால் மெல்போர்ன் மற்றும் சிட்னி இரு ஆடுகளங்களும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். அப்போதும் இந்திய அணியின் முதல் நிலை சுழல் வீரர்களான ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரையும் திட்டத்தில் வைத்திருந்திருக்கின்றனர்.இதனால் தனது தேவை இல்லையென்றால், இங்கே இருக்க விருப்பமில்லை என்று நேரடியாகவே கூறி ஓய்வை அறிவித்திருக்கிறார். ஏனென்றால் ஒரு டெஸ்ட் தொடரின் பாதியில் ஒரு வீரர் ஓய்வை அறிவிக்கும்போது, அந்த அணிக்கு என்ன சிக்கல் உருவாகும் என்பதை அஷ்வின் நன்றாகவே அறிவார். கடந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் என்ன நடந்ததோ, அது மீண்டும் நடந்துள்ளது. அஷ்வினின் திறமைக்கு அவமரியாதை ஏற்பட்டதன் காரணமாகவே உடனடியாக எந்த முன் திட்டமிடலும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் இந்திய அணி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டு, ஓய்வை அறிவித்திருக்கிறார். ஓய்வை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கூட அஷ்வின் பேசும் போது, ‘எனக்குள் இன்னும் அதிக கிரிக்கெட் மிச்சம் இருக்கிறது. அதனை கழக மட்டப் போட்டிகளில் வெளிப்படுத்துவேன்’ என்று தெரிவித்தார். இதன் மூலமாக அஷ்வினின் முடிவுக்கு பின் இருக்கும் காரணத்தை அறிந்து கொள்ள முடியும். என்றாலும் இப்படி அதிருப்தியுடன் வெளியேறும் முதல் வீரராக அஷ்வின் இல்லை. கிரிக்கெட் வரலாறு நெடுகிலும் இவ்வாறு உச்சத்தைத் தொட்ட வீரர்கள் சொல்லாமல்கொள்ளாமல் வெளியேறுவதை காலம் காலமாக பார்த்து வருகிறோம். புதிய திறமைகள் வரும்போது இவ்வாறான நிலைமை ஏற்படுவது இயல்பானது என்று ஆறுதல் அடைய வேண்டியதுதான்.
அவசரம் காட்டிய அஷ்வின்
25
previous post