2024ஆம் ஆண்டு அரசியல் கட்சிகள் பலவற்றுக்குப் பாடம் புகட்டிய ஆண்டாக அமைந்தது. குறிப்பாக இவ்வருடம் நடைபெற்ற இரண்டு தேர்தல்கள் பல பாரம்பரியமான கட்சிகள் தம்மைத் தாமே மீள் மதிப்பீடு செய்வதற்கான தேவையை உருவாக்கிச் சென்றுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல், அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்தல் என இரண்டிலும் மக்கள் வழங்கிய தீர்ப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. விசேடமாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்த கட்சிகள் தொடர்பில் மக்களின் நிலைப்பாடு தெளிவாகப் புலப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாகப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பலரும் வீடுகளில் முடங்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். இது வடக்கு, கிழக்கில் மாத்திரமன்றி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படும் ஒன்றாக இருக்கின்றது.
இருந்தபோதும், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் அரசியல் கட்சிகளுக்குச் சிறந்த பாடத்தைக் கற்பித்துள்ளனர் என்றுதான் கூற வேண்டும். தேசியம் என்பதற்கு அப்பால் தமக்கு அன்றாட வாழ்வில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன, அவற்றுக்குத் தீர்வு அவசியம் என்ற செய்தியை மக்கள் தமது வாக்குகளின் மூலம் சொல்லாமல் சொல்லியுள்ளனர்.
மக்களின் தீர்ப்பு தெளிவாக இருக்கும் நிலையில், தமக்கு வீழ்ந்த பாரிய அடியிலிருந்து மீண்டெழுந்து மக்கள் மத்தியில் எவ்வாறு செல்வது என்பது தொடர்பில் பல அரசியல் கட்சிகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. கடந்தகாலத் தவறுகளைத் திருத்துவதற்கும், மக்கள் பற்றி அதிகம் சிந்திப்பதற்கும் கட்சிகளுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதும், இம்முறை தேர்தல்களினால் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகத் தெரியவில்லை. இதன் ஒரு வெளிப்பாடாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தைக் குறிப்பிட முடியும். கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் ஏற்கனவே சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள தமிழரசுக் கட்சி இப்பிரச்சினையிலிருந்து மீளமுடியாமல் மீண்டும் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றது.
கடந்த 14ஆம் திகதி வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடியது. அன்றைய கூட்டத்திற்கு யார் தலைமை தாங்குவது என்பது தொடர்பான சர்ச்சையுடனேயே அது ஆரம்பித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், உரிய முறையில் தேர்தல் நடைபெறவில்லையெனக் கூறி அத்தெரிவு கைவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதுவரை தலைவராக இருந்த மாவை சேனாதிராஜாவே அப்பதவியை வகித்தார். இவ்வாறான பின்னணியில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற விடயத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதாக மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், வவுனியாவில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு மாவை சேனாதிராஜா முதலில் வருகை தந்திருக்கவில்லை. இதனால், கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்கு சிரேஷ்ட உறுப்பினர் சிவஞானத்தைத் தெரிவு செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் தமிழரசுக் கட்சியினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லையென்றும், அவரே குறித்த கூட்டத்திற்குத் தலைமை தாங்க வேண்டும் என்றும் ஒரு சிலர் வலியுறுத்தியுள்ளனர். இதனால் அன்றைய கூட்டத்தில் உறுப்பினர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தர்க்கம் இடம்பெற்றுள்ளது. இதனால் கூட்டம் உரிய நேரத்திற்கு ஆரம்பிக்கப்படவுமில்லை.
பின்னர், மாவை சேனாதிராஜா கூட்டத்திற்கு வருகை தந்துள்ளார். தலைவர் பதவியில் அவர் தொடர்ந்தும் இல்லையென்பதால் கூட்டத்திற்குத் தலைமை தாங்கக் கூடாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், அதனைப் பொருட்படுத்தாது அவர் மேடையின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்ததாகத் தெரியவருகின்றது. எதிர்ப்புக்கு மத்தியிலும் கூட்டம் தொடர்ந்துள்ளது.
எனினும், கட்சியின் தலைவர் யார் என்பது தெரியாமலேயே அடுத்த கூட்டத்திற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இதற்கிடையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜாவே நீடிக்கின்றார் என்று பிரகடனம் ஒன்றை உத்தரவாக வழங்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா நீடிக்க முடியுமா என்பது தொடர்பாக எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை இன்னமும் தொடர்ந்து வருகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற விடயத்தில் அக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவில் ஏற்பட்ட அதிருப்தியால் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்துசென்று தனியாகப் போட்டியிட்டனர். இவ்வாறான பின்னணியில் மீண்டும் தலைமைத்துவம் குறித்த சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது தமிழரசுக் கட்சி.
இலங்கைத் தமிழரசுக் கட்சியானது ஒரு சில தனிநபர்களை மையமாகக் கொண்ட கட்சி அல்ல. இருந்தபோதும், தமிழரசுக் கட்சி தொடர்பான அரசியல் என்பது ஒரு சிலரை மையமாகக் கொண்டே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் குறிப்பிட்ட ஒரு அரசியல்வாதிக்கு எதிராகக் கட்சியில் இருப்பவர்களே செயற்படுவதைக் காணமுடிகின்றது. இவ்வாண்டு நடைபெற்ற தேர்தலிலும் அவ்வாறான போக்கைக் காணமுடிந்தது. தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் தாம் வெற்றிபெறுவதைவிட குறித்த தமிழரசுக் கட்சியின் அரசியல்வாதியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
இதுபோன்ற செயற்பாடுகள் காரணமாகவே இதுவரை வடக்கு, கிழக்கில் அதிக செல்வாக்கைப் பெற்றிருக்காத தேசிய மக்கள் சக்தியினால் அதிக ஆசனங்களைப் பெறமுடிந்தது. அநுர குமார மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் மீது கொண்டிருந்த அதிருப்தியும் இதற்கு மற்றுமொரு காரணமாகும். எனவே, இந்தக் கள யதார்த்தத்தை உணர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சிகள் தமக்கிடையிலான முரண்பாடுகளைக் களைந்து மக்களுக்காகப் பணியாற்ற முன்வர வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களின் ஆதங்கமாக உள்ளது.
பி.ஹர்ஷன்