அனைத்து மதங்களுடைய தத்துவங்களையும் ஏற்றுக்கொண்டு அனைத்தையும் ஒரே தொகுப்பாகப் பார்க்க வேண்டும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார். எமக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கே: பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி, ஏனைய மதங்களுடன் இணைந்து எவ்வாறு வாழ்வது என்பது பற்றி விளக்கமளிக்க முடியுமா?
பதில்: எமது அமைச்சின் பெயர் புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் என்பதாகும். இதில் புத்தசாசனம் என்பது முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய மதங்கள் என்ற வார்த்தையைக் கூறாது விட்டால் நான் தனிப்பட்ட ரீதியில் மகிழ்ச்சியடைவேன். ஏனென்றால் ஏனைய மதங்கள் எனக் கூறும் போது, அது அவர்களைக் குறைத்துக் கூறுவது போன்றதாக இருக்கலாம் என நான் எண்ணுகின்றேன். இது சமூகத்தில் உள்ள ஒரு உணர்வு. ஆனால் நான் அப்படி அதனைப் பார்க்கவில்லை.
பௌத்தம் முதன்மையான மதமாக இருந்தாலும், நாம் மட்டும் அல்ல, அது அரசியலமைப்பிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பௌத்தம் இந்நாட்டின் பிரதான மதம் என்று அடிக்கடி கூறுவதை வழக்கமாகக் கொண்டவர் கர்தினால். அவர் அவ்வாறு கூறுவது எமக்கு நிம்மதியைத் தருகின்றது. இதனாலேயே பாதிப் பிரச்சினை தீர்ந்து விட்டது என்ற எண்ணம் தோன்றுகின்றது. எனவே, பௌத்தம் மற்றும் பிற மதங்களை நாம் தத்துவங்களாக ஏற்றுக் கொள்கிறோம். இவை இரண்டையும் ஒரே தொகுப்பாகக் கருத வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
கே: மதிப்புகள் அடிப்படையிலான நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான பின்னணி எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும்?
பதில்: மதிப்புகள் மற்றும் பொருளாதாரம் என்பன இரண்டும் வெவ்வேறு வழிகள் போன்று தோன்றுகின்றன. இவை இரண்டையும் நாம் வெவ்வேறாக ஏற்றுக்கொண்டதுதான் நம் நாட்டில் அதிக குழப்பத்தை ஏற்படுத்தியது என்பது என் கருத்து. மதிப்புகள் நிறைந்த பொருளாதாரத்தை நாம் கொண்டிருக்க வேண்டும். மதிப்புகளை வளர்ப்பதற்கு தனித்தனியாக செயல்படுவதும், தனித் திட்டங்களை உருவாக்குவதும், பொருளாதாரத்தை உயர்த்த தனித் திட்டங்களை உருவாக்குவதும் குறுகிய பாதை ஆகும். பொருளாதாரக் கோபுரம், கலாசாரக் கோபுரம் இரண்டும் ஒன்றாக எழ வேண்டும். அதற்காக கடினமாக உழைக்காததன் விளைவை இன்று அனுபவித்து வருகிறோம்.
எனவே, மதிப்புகள் மற்றும் அணுகுமுறைகளை தனித்தனியாக உருவாக்க முடியாது.
இதன் காரணமாகவே, கடந்த காலங்களில் எமது அரசியல் கட்டமைப்பின் பிரசாரங்களில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட ஒரு சொற்றொடர் இந்த நாட்டில் அரசியல்வாதிகள் குறைந்த கல்வி அல்லது கல்வியறிவின்மை என்பதாக அமைந்தது. அத்துடன் அரசியல்வாதிகள் வறுமையுடன் நீண்ட காலமாக விளையாடி வந்துள்ளனர். வறுமைக்கும் குறைந்த கல்விக்கும் தொடர்பு உள்ளது. குறைந்த கல்வி என்ற பிரிவில் மதிப்புகளை மீண்டும் காண்கிறோம். இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இதன் மூலம் நாம் பொருளாதார ரீதியில் முன்னேறும்போது மதிப்புகள் அதிகரிக்கும் என்று நான் கூறவில்லை. அது நடக்காது. இவை இரண்டும் ஒன்றாகச் செல்ல வேண்டும் என்பதே எங்கள் கருத்து.
இந்த அராசங்கத்தில் பல கட்சிகள் ஒன்றிணைந்துள்ளமை உண்மையாகும். நாம் ஒன்றாக முன்னேற வேண்டும். மனித வாழ்க்கையை இரண்டு பகுதிகளாக எடுத்துக் கொண்டால், அவற்றை கலாசார பாதி என்றும் பொருளாதார பாதி என்றும் சொல்லலாம். இந்த இரண்டு பகுதிகளும் இணைந்தால்தான் முழுமையான குடிமகன் பிறக்கிறான். அதில் மிகுந்த நம்பிக்கையுடன் இந்தச் செயற்பாடுகளைச் செய்ய முயற்சிக்கின்றோம்.
கே: புனித ஸ்தலங்களைப் பாதுகாக்கவும், மதகுருமார்களின் வளர்ச்சிக்காகவும் எவ்வாறான திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது?
பதில்: புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சுப் பொறுப்பொன்று எனக்கு வழங்கப்படவில்லை. பல தசாப்தங்களாக வெவ்வேறு பெயர்களால் மாற்றப்பட்டாலும், இந்த அமைச்சின் விடயதானங்கள் குறித்த நோக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. வழிபாட்டுத் தலங்களின் வளர்ச்சிக்கும், மதகுருமார்களின் மேம்பாட்டிற்கும் திட்டங்கள் உள்ளன. புதிய திட்டங்களையும் மனதில் கொண்டுள்ளோம்.
கூடுதலாக, கடந்த காலத்திலிருந்து மாறாத சில துறைகள் உள்ளன. நான் எமது அமைச்சுக்கு வந்தபோது, 22 நிறுவனங்கள் இதன் கீழ் காணப்பட்டதுடன், மேலும் 4 நிறுவனங்கள் தற்பொழுது இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் நோக்கத்தை அங்கீகரிப்பது முக்கியம்.
தொல்லியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பன எங்களின் கீழ் உள்ள இரண்டு நிறுவனங்களாகும். நீங்கள் கூறிய புனிதத் தலங்கள் தொல்லியல்துறை மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் கீழ் உள்ளன. புண்ணிய ஸ்தலங்கள் என்று சொன்னாலே நம் புராதன பாரம்பரியம் நினைவுக்கு வரும். கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் தொடர்பான புனித இடங்கள் நம் நினைவுக்கு வருவதில்லை. இதுவும் இந்தப் பிரிவைச் சேர்ந்ததுதான். இவை தொடர்பான நல்ல திட்டமும் என்னை முன்னோக்கி கொண்டு செல்கிறது. சில சமயங்களில் தொலைந்து போன விஷயங்களை மீண்டும் புரிந்து கொண்டு, அவை நல்ல திட்டத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படும்.
மதத்தலைவர்கள் தொடர்பான வளர்ச்சித்துறைக்கு நல்ல வேலைத்திட்டம் உள்ளது. பௌத்த அமைச்சு அமைந்துள்ள கட்டடத்தில் எனது பிரதி அமைச்சர் இருக்கிறார். ஒரு சமயத் தலைவர் தொலைதூரத்தில் இருந்து வருகை தரும்போது, அவரை வரவேற்பதற்கும், தானம் அளிப்பதற்குமான முறையும் உண்டு. அதிலிருந்து அமைச்சின் கீழ் அவர்களின் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன.
மேலும், எதிர்வரும் 25ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடவுள்ளோம். தைப்பொங்கல் ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. அதன் பிறகு வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இவை அனைத்திற்கும் நமது அமைச்சகத்தின் ஏற்பாடுகள் மற்றும் திட்டங்கள் உள்ளன.
கே: நமது தனித்துவமான கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான திட்டங்கள் எவை?
பதில்: நாம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். எமது அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்துக்கான முன்மொழிவுகளைத் தயார்செய்து வருகின்றது. எமது அமைச்சின் கீழ் உள்ள 26 நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் பற்றிய பரிந்துரைகளைத் தயாரித்து வருகின்றோம். நீங்கள் சொன்னது போல் நிறைய தலையீடுகள் உள்ளன. முந்திய திட்டத்துடன் கூடுதலாக, ஒரு புதிய திட்டம் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மக்கள் சக்தியாக நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒரு கலாசார தேசியக் கொள்கையை அரசாங்கமாக முன்வைத்தோம். நம் நாட்டில் 220 கலாசார மையங்கள் உள்ளன. நாடு முழுவதும் பல்கலாசார மையங்களை உருவாக்கி அதில் ஒரு புதிய பகுதியைச் சேர்த்து வருகின்றோம்.
தலைநகருக்கு வரும் கலைஞர்களுக்கு தங்குவதற்கு இடம் இல்லை. எங்களின் கலாசார திட்டத்தில் தனித்துவமான முன்மொழிவு உள்ளது, வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் அனைத்தையும் உள்ளடக்க முடியுமா என்பதைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்.