- 14 கோடி 20 இலட்சம் ரூபா உபகரணங்கள் மாயம்
- தேசிய கணக்காய்வு அலுவலகம் கண்டுபிடிப்பு
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பாவனைக்காக பெறப்பட்ட 1,420 இலட்சம் ரூபாபெறுமதியான கமராக்கள், மடிகணினிகள் மற்றும் ஏனைய ஊடக உபகரணங்கள் என்பவை, ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு மீள ஒப்படைக்கப்படவில்லையென தேசிய கணக்காய்வு அலுவலகம் கண்டுபிடித்துள்ளது.
2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கிடையே கொள்முதல் செய்யப்பட்டிருந்த கெமரா உபகரணங்கள் மற்றும் மடிகணினிகள் உட்பட 3,406 உபகரணங்கள் ஊடகப்பிரிவிலிருந்து மாயமாகியுள்ளன. 2014 முதல் 2020 ஜனவரி வரை 16,22,73,185.00 ரூபா பெறுமதியான பொருட்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் சேமிப்பு முகாமைத்துவ அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.
அங்கு, 2014 இல் 04 உபகரணங்களும், 2015 இல் 558 உபகரணங்களும், 2016 இல் 660 உபகரணங்களும், 2017 இல் 602 உபகரணங்களும், 2018 இல் 1,262 உபகரணங்களும், 2019 இல் 313 உபகரணங்களும், 2020 இல் 07 உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
22.02.2021 ஆம் திகதியிட்ட கணக்காய்வு அறிக்கையில், ஜனாதிபதி ஊடகப் பிரிவு தொடர்பான 03 உபகரணங்களுக்கான பதிவு புத்தகங்கள் மட்டுமே கணக்காய்வுக்காக சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாகவும், மேற்படி விடயங்கள் அந்த புத்தகங்களில் உள்ளடக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவருடனான பௌதீக பரிசோதனையின் போது ஊடகப்பிரிவில் 219 இலட்சம் ரூபா (21,888,958) பெறுமதியான 133 பொருட்கள் கிடைக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி 350 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கணக்காய்வில் தகவலைக் கோரியபோது, 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியிட்ட கடிதம் எண். PMD/ENG/VIDEO/21/02/II இன் படி, 2015 முதல் 2019 வரை வாங்கிய உபகரணங்களின் தகவல் அடங்கிய பதிவேடு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வருடாந்த உபகரண கணக்கெடுப்பில் கூட இவை குறிப்பிடப்படவில்லை. அத்துடன் ஒருவர் எடுத்துச் சென்ற 21 பொருட்கள் திரும்பக் கிடைக்கவில்லை என்றும், அதில் ஒன்று 25 இலட்சம் ரூபாபெறுமதியான இரண்டு கெமராக்களாகும்.மேலும் ஒருவருக்கு வழங்கப்பட்ட 03 பொருட்கள் திரும்பக் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.