நாட்டில் ஏற்படுத்தப்பட்ட செயற்கை அரிசித் தட்டுப்பாட்டை தீர்க்கும் நோக்கில் துரித நடவடிக்கை மேற்கொண்ட அரசாங்கம், இதுவரை 67,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியதால், புறக்கோட்டை அரசி வியாபாரிகள் இவற்றை இறக்குமதி செய்துள்ளனர்.
அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் வழங்கியிருந்த அனுமதி காலம் நேற்று முன்தினம் (20) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இக் காலப்பகுதியில் 67,000 மெற்றிக் தொன் அரசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இதில் 28,500 மெற்றிக் தொன் பச்சை அரிசியும் 38,500 மெற்றிக் தொன் நாட்டரிசியும் இறக்குமதிசெய்யப்பட்டுள்ளன.
இந்த அரிசிக்கான இறக்குமதி வரியாக ஒரு கிலோவுக்கு 65 ரூபா வீதம் இலங்கை சுங்கம் அறவிட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள 67,000 மெற்றிக் தொன் அரிசியூடாக 4.3 பில்லியன் ரூபா வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கடந்த புதன்கிழமை மொத்த கொள்கலன்களில் கொழும்பில் ஐந்தாம் குறுக்குத் தெருவுக்கு கொண்டு வரப்பட்டது.இதன் பின்னர், அன்றைய தினம் நாடு முழுவதும் இந்த அரசி கொள்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த அரிசி இறக்குமதியாளர்களில் பலர் கற்கள் மற்றும் மணல் இல்லாத ஸ்வர்ண நாடு என்ற அரிசி வகையை இறக்குமதி செய்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசியின் மொத்த விலை ரூ. 228/= மற்றும் நாட்டரிசி மொத்த விலை ரூ. 215/= இந்த அரிசி தலா 25 கிலோ அச்சிடப்பட்ட சாக்குகளில் அடைக்கப்படுகிறது. எதிர்வரும் இரண்டு நாட்களில் நாடளாவிய ரீதியில் அரிசி தட்டுப்பாடு தவிர்க்கப்படுமென அரிசி இறக்குமதியாளர் தெரிவிக்கின்றனர். கொள்கலன்களுக்கு தட்டுப்பாடு இல்லாவிட்டாலும் அரிசியை வழங்குவதற்குத் தேவையான அளவு இறக்குமதி கையிருப்பு உள்ளதாக இறக்குமதியாளர் தெரிவிக்கின்றனர். புறக்கோட்டையில் அரிசி விநியோகிக்கப்படும் ஐந்தாம் குறுக்குத் தெருவில் இறக்குமதி அரிசி கொள்கலன்களால் நிரம்பியிருந்ததைக் காண முடிந்தது.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் மொத்த கொள்கலன்களை வாங்கி தங்கள் கிராமங்களுக்கு வியாபாரிகள் கொண்டு செல்வதைக் காண முடிந்தது.
அரிசி இறக்குமதியால் உள்ளூர் அரிசி மாஃபியா வீழ்ச்சியடைந்தது.
இதையடுத்து புறக்கோட்டையிலுள்ள மொத்த விற்பனை சந்தைக்கு வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து உள்ளூர் நாட்டு அரிசி மற்றும் சிவப்பு பச்சை அரிசி வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.