தனியார் பஸ்களில், கட்டணத்தை செலுத்துவதற்கு ஏதுவாக பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டைகள் வழங்கப்படவுள்ளன. மிக விரைவில் இவை, அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த இலத்திரனியல் அட்டையை பயன்படுத்தும் போது, தனியார் பஸ் உரிமையாளர் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை மற்றும் பஸ் ஊழியர் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும். கப்பம் கோரும் கும்பல்களாலேயே இவர்கள் இப்பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்கின்றனர். இப்புதிய முறை மூலம் கப்பம் கொடுப்பதை தவிர்க்க முடியும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். தனியார் பஸ்களில் இருந்து மாதமொன்றுக்கு சுமார் 25 கோடி ரூபா கப்பம் வசூலிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலைமையை தடுப்பதற்கு தற்போது பொலிஸார் அதிகபட்ச பங்களிப்பை வழங்கி வருவதாக தெரிவித்த கெமுனு விஜேரத்ன, தற்போது நாளாந்தம் 13,000 – 14,000 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.