காலநிலை மாற்றம் நமது பூமியின் உயிர் வாழும் சுவாத்தியத்தை பாதித்து மனித உயிரின ஆரோக்கிய வாழ்வுக் காலத்தை மிகவும் குறைக்கிறது. இதனை ஏற்படுத்தும் அல்லது தூண்டும் பச்சை இல்ல வாயு உமிழ்வுகளை குறைக்க இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் ஒவ்வொரு நாடும் காலநிலை மாற்றத்தை இதனால் ஏற்பட்ட, ஏற்படவிருக்கும் காலநிலை மாற்ற தாக்க விளைவுகளை தணிக்க அவசியமான இப் போராட்டத்தில் பங்காளியாகி ஒருமித்து இருக்க வேண்டும். இதனையே ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற சமாவாய அங்கத்துவ நாடுகளின் உச்சிமாநாடு பிரகடனம் – 29 (UNFCOP29) பிரதிபலிக்கின்றது, இதன் அடிப்படைச் செய்தி என்னவென்றால், நமது பொதுவான மனிதநேய அபிலாசையான காலநிலை மாற்ற தணிப்பு முயற்சிகளின் முன்னரங்குகளில் ஒவ்வொரு நாடும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையாக நிற்கமுடியும், மோதல்கள் மலிந்து பரவி எழும்புவதற்கு மத்தியில், இந்த இலட்சியம் முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானது. பிளவுகளை நீக்கி, நிரந்தர அமைதிக்கான பாதைகளைக் கண்டறிய இது ஒரு தனித்துவமான வாய்ப்பு.
மோதல்கள் பச்சை இல்ல வாயு உமிழ்வுகளின் வெளியேற்றத்தை அதிகரிப்தோடு மண், நீர் மற்றும் வளி சுற்றாடல் தரத்தை சிதைவடையச்செய்கின்றது. இது காலநிலை மாற்றத்தை மோசமாக்குகிறது மற்றும் கிரகத்தைப் பாதுகாப்பதற்கான நமது முயற்சிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. காலநிலை பேச்சுக்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், முன்னரைவிட அனைவரின் கவனத்துடனும் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்படவேண்டும். இதனையொட்டி நவம்பர் 11-– 22. 2024 இல் அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற COP29 ஒப்பந்தம் மனித ஒற்றுமையின் வரலாறாக இருக்கும். அனைவருக்கும் பாதுகாப்பான, வளமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக ஒன்றுபடுவோம். அமைதி மற்றும் காலநிலை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் மட்டுமே எதிர்கால சந்ததியினருக்கு வாழக்கூடிய பூவுலகின் சுவாத்தியத்தன்மையை உறுதி செய்ய முடியும். இது இன்றைய சந்ததியினரின் பொறுப்பும் கடமையும் ஆகும். இதனை மறுதலித்தால் வேறொரு சந்ததி இல்லாமல் போகும், இயற்கைப் பேரிடர்களும் மானிட அழிவுகளும் குறிகாட்டிகளாக எமக்கு இந்த சாவுமணியை கூறாமல் கூறுகின்றது.
கடந்த தசாப்தத்தில் ஒவ்வொரு ஆண்டு போன்றே 2024 மிகவும் வெப்பமான ஆண்டாக பதிவுசெய்யப்படுள்ளது, இதன் பிரதிபலனாக காலநிலை மாற்ற நெருக்கடி இனி இலங்கை போன்ற தீவு நாடுகளுக்கு கடுமையான பேரிடர்களை ஏற்படுத்தும். இந் நிதர்சனத்துக்கு காரணமான உலகளாவிய பச்சை இல்ல வாயு உமிழ்வு முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது. பனிப்பாறைகள் ஆபத்தான விகிதத்தில் உருகுகின்றன. கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் வெப்பம் துரிதப்படுத்தப்படுகிறது, மேலும் தீவிர வானிலை இப்போது வழக்கமாக உள்ளது. இலங்கை, உலகளாவிய உமிழ்வுகளில் ஒரு பகுதியை மட்டுமே பங்களித்து வந்தாலும், மோசமான அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கும் முன்னணிப்பட்டியலில் காணப்படுகின்றது. உயரும் கடல் மட்டம், வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் நீடித்த வறட்சி ஆகியவை வாழ்வாதாரம், உணவு உற்பத்தி மற்றும் தேசிய பொருளாதாரத்தை அச்சுறுத்துகின்றன. இந்த ஆண்டு மட்டும் பல மாவட்டங்களில் மக்களுக்கு கடுமையான வெள்ளம், மண்சரிவு குறிப்பிடத்தக்க அழிவை ஏற்படுத்தி தேசிய உணவு உற்பத்தியையும் பாதித்தது.
இந்தப் பாதையைத் மீள சரிசெய்வதற்கு மானிடத்திற்கு காணப்படும் கால அவகாசநேரம் ஓடிக்கொண்டிருக்கிறது, அதனால்தான் 29 ஆவது மாநாடு (COP 29) மிகவும் முக்கியமானது. வருடாந்திர கூட்டம் உலக காலநிலை சவால்களை மதிப்பிடவும், உமிழ்வு குறைப்பு இலக்குகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவும், காலநிலை தாக்கங்களை சமாளிக்கவும் தழுவல் நடவடிக்கைகளை விவாதிக்கவும் அனுமதிக்கிறது. இந்த ஆண்டு பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கிய கட்டமாக செல்வந்த நாடுகள் அதாவது பச்சை இல்ல வாயுக்களின் பாரிய வரலாற்று உமிழ்ப்பாளர்கள் தயக்கத்தில் இருந்து விடுபட்டு கணிசமான நிதி பங்களிப்புகளுக்கு உறுதியளிக்கிறார்கள். தகவலமைப்பு, இழப்பு மற்றும் சேத நிதி மற்றும் பொது நிதிக் கூறு ஆகியவற்றுக்கு இடையே பிரித்து, ஆண்டுக்கு $1 டிரில்லியன் திரட்டுவதை இலக்காகக் கொண்ட காலநிலை நிதிக்கான புதிய கூட்டு அளவுகோல் மையமாக இருந்தது. இது சேத நிதிக்கு நிதியளிப்பது, உட்கட்டமைப்பு சேதம் மற்றும் பேரழிவுகளுக்குப் பிறகு சமூக இடப்பெயர்வு மற்றும் மெதுவாகத் தாக்கும் காலநிலை பாதிப்புகள் போன்ற உடனடி விளைவுகளைச் சமாளிக்க உதவும். COP29 இன் மற்றொரு முக்கிய வளர்ச்சியானது, பாரிஸ் உடன்படிக்கை வரவு பொறிமுறையின் மூலம் உலகளாவிய காபன் சந்தையை வலுப்படுத்துவதற்கான தரநிலைகளின் ஒப்புதல் ஆகும். இந்த கட்டமைப்பு சரிபார்க்கக்கூடிய உமிழ்வு குறைப்பு திட்டங்களை ஆதரிக்கிறது, நிதியை ஈர்க்கிறது மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்கிறது. இந்த உலகளாவிய காலநிலை நிதிப் பொறிமுறைகளில் இருந்து பயனடைவதற்கு, இலங்கை பல முக்கியமான முனைகளில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் இலங்கை தேசிய அளவில் காலநிலை மாற்றத் திட்டத்தை புதுப்பித்து இற்றைப்படுத்தி தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDCs) புதுப்பிக்க வேண்டும். இது நாட்டின் மீட்சிக்கு முக்கியமான முன்னுரிமை திட்டங்களுக்கு வழிகாட்ட வெளிப்புற நிதியுதவிக்கான அணுகலைத் தூண்டும் சகல அபிவிருத்திப்பிரிவுகளின் முன்னுரிமை இலக்குகளையும் நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்களின் ஒருங்கிணைப்பையும் உள்ளடக்கியது. இதனடிப்படையில் பசுமை காலநிலை நிதியம் அல்லது உலகளாவிய சுற்றாடல் வசதி போன்ற தற்போதைய நிதிகளுக்கான அணுகலை இலங்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதேவேளை இழப்பு மற்றும் சேத நிதி போன்ற புதிய வழிமுறைகளையும் பெற வேண்டும்.
மனித ஆரோக்கியத்தைப் பாதுகாக்க போதுமான காலநிலை நடவடிக்கைக்கு நிதி ஒரு முன்நிபந்தனையாகும். வெப்ப அலைகள் மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகள், காட்டுத்தீ, இடப்பெயர்ச்சி, தொற்றுநோய்கள், உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பின்மை, மோசமான தொற்று நோய் பரவுதல் உள்ளிட்ட திடீர் மற்றும் மெதுவாகத் தொடங்கும் ஆபத்துகளால் காலநிலை மாற்றமானது தீங்கு, நோய் மற்றும் இறப்புகளை உண்டாக்குகிறது. உடல் ஆரோக்கியத்தில் இந்த தாக்கங்களுக்கு மேலதிகமாக, காலநிலை மாற்றம் புதிய மனநல பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது மற்றும் ஏற்கனவே இருக்கும் மற்றும் கடுமையான மனநல பிரச்சினைகளுடன் வாழும் மக்களை மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகிறது.
சர்வதேச சுகாதாரம் மற்றும் காலநிலை சமூகத்தின் உறுப்பினர்கள் COP29 இல் உள்ள உறுப்பு நாடுகள் மக்கள் மற்றும் பூவுலகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் போதுமான இலட்சிய காலநிலை நடவடிக்கைக்கு உறுதியளிக்கவும் அழைப்பு விடுக்கின்றனர். காலநிலை தூண்டப்பட்ட பொது சுகாதார பாதிப்புகள் காரணமாக, சுகாதார அமைப்பு உட்கட்டமைப்பும் ஆபத்தில் உள்ளது. இதற்கிடையில், பரந்த காலநிலை நிதி மற்றும் சுகாதார நிதி ஆகியவை மக்கள் மற்றும் பூவுலகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான அளவுகளை விட மிகக் குறைவு.
காலநிலை நெருக்கடியின் உடல்நல பாதிப்புகளில் இருந்து யாரும் விடுபடவில்லை என்றாலும், இந்த ஆபத்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான குறைந்த திறன் கொண்ட பாதிக்கப்படக்கூடிய மற்றும் கட்டமைப்பு ரீதியாக பின்தங்கிய மக்கள் மீது சுமை அதிகமாக விழுகிறது. இந்த அடிக்கடி குறுக்குவெட்டு குழுக்களில் பூகோள தெற்கில் உள்ள சமூகங்கள், பழங்குடி மக்கள், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர், பெண்கள், குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள், முதியவர்கள், உடல் மற்றும் உளவியல் குறைபாடுகள் உள்ளவர்கள், வறுமையில் வாழும் மக்கள் மற்றும் கடலோர வாழ்மக்கள் உள்ளனர்.
ம. சிவகுமார் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவு) மத்திய சுற்றாடல் அதிகாரசபை