இலங்கையில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் கடந்த வாரம் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் ஆகும். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொண்ட வெளிநாட்டு உத்தியோகபூர்வ முதலாவது விஜயம் இதுவென்பது ஒருபுறமிருக்க, அவர் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்குப் பயணமானதே பலரதும் கவனத்தை ஈர்த்திருந்தது.
இலங்கையும் இந்தியாவும் வரலாற்றுக் காலம் தொட்டு நெருங்கிய நட்புறவு நாடுகளென்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது. ஆனால் சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையை ஆட்சி செய்து வந்த பாரம்பரிய தேசியக் கட்சிகள் இந்தியாவுடன் கடைப்பிடித்து வந்த இராஜதந்திரக் கொள்கைகளை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தொடருமா என்பதையிட்டு பொதுவெளியில் பலவிதமான வாதப்பிரதிவாதங்கள் நிலவி வந்தன.
ஜே.வி.பியில் இருந்து உருவான தேசிய மக்கள் சக்தியானது இடதுசாரிக் கோட்பாடுகளை பின்புலமாகக் கொண்டதென்பது வெளிப்படையான உண்மை. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் பொருளாதார வல்லரசாகத் திகழுகின்ற இந்தியாவுடன் தேசிய மக்கள் சக்தி அரசானது நட்புறவைப் பேணுமா என்பதில் வலுவான சந்தேகங்கள் நிலவின.
தேசிய மக்கள் சக்தி அரசானது இந்தியாவைப் புறந்தள்ளியவாறு, சீனாவுடன் நெருக்கத்தைப் பேணக் கூடுமென்றும் பலரும் கருத்துகளைப் பதிவிட்டிருந்தனர். அதேசமயம் இரு தசாப்த காலத்துக்கு முன்னர் இந்தியா மீது ஜே.வி.பி கொண்டிருந்த புரிதல் ஆரோக்கியமாக இருந்ததுமில்லை.
இவ்வாறான பின்புலங்களை வைத்துத்தான் தேசிய மக்கள் சக்தி அரசுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான எதிர்கால உறவு குறித்து பலரும் ஊகங்களை முன்வைத்திருந்தனர். அவ்வாறான ஊகங்களில் நியாயங்கள் இல்லாமலுமில்லை.
ஆனால் அனைத்து ஊகங்களுமே தவறானவையென்பது பின்னர்தான் புரிந்தது. ஜனாதிபதி அநுரவின் இவ்விஜயத்தின் போது, இந்திய தேசம் அவருக்கு வழங்கியிருந்த கௌரவமும், முக்கியத்துவமும் சர்வதேசத்தையே வியக்க வைத்திருந்தது.
இந்தியாவின் உண்மையான நண்பன் இலங்கை என்பதையும், இந்த நட்புறவுக்கான பின்னணியில் எவ்விதமான உள்நோக்கங்களும் கிடையாதென்பதையும் ஜனாதிபதி அநுரவின் இவ்விஜயத்தின் போது வெளிப்படையாகப் புரிய வைத்துள்ளது புதுடில்லி.
‘அயல் நாட்டுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையில் இருந்து இந்தியா விலகப் போவதில்லை என்பதுதான் நரேந்திர மோடி அரசின் உறுதியான கொள்கையாக உள்ளது.
அதேசமயம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இந்தியாவுடன் சிநேகபூர்வ உறவைத் தொடருமென்பதை இலங்கை ஜனாதிபதியும் தெளிவாகவே வெளிப்படுத்தியிருக்கின்றார். முக்கியமாக வர்த்தக, பொருளாதார விடயங்களில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அநுரகுமார விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதற்கான ஒப்பந்தங்களும் இவ்விஜயத்தின் போது கைச்சாத்தாகியுள்ளன.
உலகில் எந்தவொரு நாடும் தனிமையாக இயங்க முடியாது. உலக ஒழுங்குடன் இசைந்தவாறு இயங்கினாலேயே பொருளாதாரத்துறையில் அபிவிருத்தியடைய முடியும். இலங்கை மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய யதார்த்தம் இது.