இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) – தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையுடன் (NGJA) இணைந்து ஏற்பாடு செய்துள்ள 31ஆவது FACETS இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியானது 2025 ஜனவரி 04–06 ஆம் திகதிக்கு இடையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
புதிய வருடத்தை ஆரம்பிக்கும் வகையில், உலகெங்கிலும் உள்ள முக்கிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், பட்டை தீட்டுவோர் மற்றும் இரத்தினக்கல் சேகரிப்பாளர்களை ஒன்றிணைக்கின்ற தொழில்துறையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக FACETS 2025 மாறியுள்ளது. 75 இற்கும் மேற்பட்ட வகையான வண்ண இரத்தினக் கற்களின் தாயகமாகவும், முதன்மையான இரத்தினக் கற்களின் மூலாதார நாடாகவும் உள்ள இலங்கையின் நீண்ட வரலாற்றின் ஒரு ஈர்ப்புமிக்க கொண்டாட்டமாக, பல வருடங்களாக இடம்பெற்று வரும் FACETS கண்காட்சி விளங்குகின்றது. உள்ளூர் ஆபரண வர்த்தகர்கள் மற்றும் வணிகர்களின் பங்கை முன்னிலைப்படுத்தும் இந்த நிகழ்வானது, செழுமையான பாரம்பரியம் மற்றும் புத்தாக்கமான நவீனத்துவத்தின் தனித்துவமான கலவையுடன் இலங்கையின் கைவினைத்திறனை உலகிற்கு வெளிப்படுத்துகிறது.
FACETS Sri Lanka 2025 கண்காட்சியானது இரத்தினபுரி, எலஹர, பேருவளை, எஹலியகொட, காலி, பெல்மதுளை, கஹவத்தை, கொழும்பு போன்ற இத்தொழில்துறையின் முக்கிய இடங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளது. இத்தொழில்துறையில் உள்ள தலைவர்களுக்கு உலகெங்கிலும் உள்ள தொழில் வல்லுநர்களுடன் இணைந்து இயங்குவதற்கும் தொடர்பை ஏற்படுத்துவதற்கும் ஒரு தளமாக செயல்படுவதன் மூலம், ஏற்றுமதியில் 1 பில்லியன் டொலர்களை அடையும் இலக்கை நோக்கி இத்தொழில்துறையை இயக்குவதற்கு FACETS கண்காட்சி பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.