மேற்காசிய பிராந்தியம் இஸ்ரேல் தாக்குதலினால் கொதிநிலையை தக்க வைத்துக் கொள்ளும் பிராந்தியமாக மாறிவருகின்றது. இஸ்ரேல் – ஹமாஸ் போரானது படிப்படியாக விரிவடைந்து சிரியாவினுடைய எல்லைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. சிரியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் கிளர்ச்சி குழுவின் நகர்வுகளும் முக்கியமான அரசியல் இராணுவ உத்திகளை வகுத்துள்ளது. சிரியா மீதான இஸ்ரேலின் தாக்குதலும் அதனால ஏற்படக்கூடிய மாற்றங்களையும் நோக்கி இக்கட்டுரை கட்டமைக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷீர் அல் அஸாத் நாட்டை விட்டு தப்பி ஓடியதும் கிளர்ச்சி குழு சிரியாவின் தலைநகரை கைப்பற்றியதும் பிராந்திய அரசியல் சூழலை மாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. அபு முகமது ஜிலானி தலைமையிலான கிளர்ச்சிக் குழு அதிக மாற்றங்களை சிரிய நாட்டிலும் பிராந்திய அரசியலிலும் ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் சிரியாவின் ஆட்சியாளரான அஸாத்தின் சர்வாதிகார ஆட்சி, அங்கு ஏற்பட்ட அடக்குமுறைகளை அம்பலப்படுத்தும் விதத்தில் கிளர்ச்சி குழுவின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. அது மட்டுமின்றி சிரியாவின் இதர பாகங்களில் தனித்துவமான இதர கிளர்ச்சி குழுக்கள் போரிட்டுக் கொண்டும் பிரதேசங்களை கைப்பற்றிக் கொண்டும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுக் கொண்டும் இருகின்றது. மறுபக்கத்தில் இஸ்ரேல் பாரிய தாக்குதலை சிரியா மீது நிகழ்த்தி வருகின்றது. இத்தாக்குதலின் மூலம் சிரியா நாட்டிலுள்ள விமானப்படைத்தளங்கள், ஏவுகணை தளங்கள், இராணுவ இலக்குகள், ஆயுத தளபாடங்கள் என்பன அழிக்கப்படுவதாகவும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் முற்றாகவே சிதைக்கப்படுவதாகவும் தெரிய வருகிறது. கடந்த இரு (11 மற்றும் 12. 12.2024 இல்) நாட்களில் 480 க்கும் மேற்பட்ட தடவைகள் இஸ்ரேல் விமானத் தாக்குதலை சிரியா மீது நிகழ்த்தியுள்ளது. இஸ்ரேலின் எல்லையோரத்தில் சிரியாவினுடைய நிலப்பரப்புக்குள் விஸ்தரிப்புகளை மேற்கொள்வதாக ஐக்கிய நாடு சபை குற்றம் சாட்டியுள்ளது. இதுவரையில் 15க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் அழிக்கப்பட்டதோடு நீண்ட தூர ஏவுகணைத் தளங்கள் இஸ்ரேலினால் அழிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது. இவ்வாறு இஸ்ரேல்; சிரியா மீது நிகழ்த்துகின்ற தாக்குதலானது இஸ்ரேல் குறிப்பிடுவது போல் சாதாரணமான விடயமாக கொள்ள முடியுமா என்ற கேள்வி மேற்காசிய அரசியலை அவதானிக்கின்ற போது எழுகின்றது. அத்தகைய காரணங்களை விளங்கிக் கொள்வது அவசியமானது.
முதலாவது இந்தத் தாக்குதலை சிரியா மீது நிகழ்த்துவதற்கு அடிப்படைக் காரணம் என இஸ்ரேல் குறிப்பிடுவது இரசாயன ஆயுதங்களும் ஏனைய சிரியாவின் ஆயுதங்களும் தீவிரவாத குழுக்களிடம் சென்று விடும் என்பதை தடுப்பதே. அதுவே பிரதான நோக்கம் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சரும் அத்தகைய செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலின் பிரதான நோக்கம் ஆயுத தளபாடங்கள் தீவிரவாத குழுக்களிடம் சென்று விடாமல் தடுப்பதென்பது சிரியாவில் பலமான அரசாங்கத்தை நிறுவுவதற்கு முயலுதலே பொருத்தமான நடவடிக்கையாகும். அதனை விடுத்து ஏற்கனவே அஸாத் ஏற்படுத்திய அழிவிலுள்ள மக்களை அச்சுறுத்தும் விதத்தில் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டு போலியான காரணத்தை இஸ்ரேல் கொடுக்க முனைகிறது.
இரண்டாவது இஸ்ரேல் குறிப்பிடுவது நியாயமானதாக இருந்தாலும் இஸ்ரேலைப் பொறுத்தவரை எல்லையோர நாடான சிரியா பலவீனமாக இருத்தல் என்பது பிராந்தியத்தின் பலவீனங்களை கொண்டதாக இருப்பதற்குரியதென கருதுகிறது. இஸ்ரேலின் புவிசார் அரசியல் லெபனான், சிரியா, எகிப்து போன்ற நாடுகளால் சூழப்பட்டிருப்பதும் அந்த நாடுகள் பலவீனமான இராணுவ கட்டமைப்பை கொண்டிருப்பதும் இஸ்ரேலுக்கு பாதுகாப்பானதாக அமையும் என்ற எதிர்பார்க்கை காணப்படுகிறது. அவ்வாறான ஒரு சூழலுக்குள்ளேயே எல்லையோர நாடுகளை பலவீனப்படுத்தும் நோக்கோடு லெபனான் மீது நடத்திய தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தியதோடு சிரியா மீது அத்தகைய போரை நகர்த்தி வருகின்றது. ஏறக்குறைய ஜோர்தான், சிரியா, லெபனான், எகிப்து போன்ற நாடுகள் பலவீனப்படுகிற போது இஸ்ரேலின் இருப்பு உத்தரவாதப்படுத்தப்படவும் பாதுகாக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக அமையும்.
மூன்றாவது இஸ்ரேலைப் பொறுத்தவரை தனது மக்களை மட்டுமன்றி தனது நிலத்தையும் அதன் இருப்பையும் பாதுகாக்கும் விதத்தில் எல்லையோரங்களை விஸ்தரிப்பது அவசியமானதாக காணப்படுகிறது. ஹமாஸ் போன்ற அமைப்புக்களது இனியொரு தாக்குதலைத் தடுப்பதற்கு எல்லை விஸ்தரிப்பு அவசியமானதென கருதுகிறது. எல்லைகளை நோக்கி இஸ்ரேலிய இராணுவம் நகருகின்ற போது யூதர்களுடைய இருப்பும் குடியிருப்பும் பாதுகாக்கப்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அதற்கு அமைவாகவே எல்லையோர நாடுகளை கைப்பற்றுவதும் அவற்றினுடைய எல்லை பகுதிகளில் இஸ்ரேலின் பாதுகாப்பு அரண்களை வலுப்படுத்துவதும் என்பது அதன் பிரதான உத்தியாக காணப்படுகிறது. ஒரு அகண்ட இஸ்ரேலின் இருப்பை நோக்கி தற்போதைய இஸ்ரேலின் ஆட்சி செயல்பட்டு வருகின்றது.
நான்காவது இஸ்ரேலின் தாக்குதல் மூலம் சிரியாவினுடைய ஆயுத தளபாடங்கள் அழிக்கப்படுதல் என்பது ரஷ்யாவின் ஆயுதங்களையும் தளபாடங்களையும் அழிப்பதற்கானதாகவோ அல்லது அதற்கு ஒப்பானதாகவே கணிப்பிடப்படுகிறது. அமெரிக்க இஸ்ரேலிய கூட்டு தாக்குதல் ரஷ்யாவின் மீதான அதன் ஆயுதங்கள் மீதான தாக்குதலாகவே அளவீடு செய்யப்படும். சிரியாவினுடைய ட்யூபஸ் துறைமுகத்தை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அதனை பாதுகாப்பதற்கு அஸாத்துடைய ஆட்சியை முதன்மைப்படுத்தியது.
அதற்கான ஆயுதத்தாளபாடங்களை சிரியாவுக்கு வழங்கியதும் குறிப்பிடக்கூடிய அம்சமாகும். அத்தகைய ஆயுத தளபாடங்கள் இஸ்ரேலின் பாதுகாப்புக்கும் அதன் விமான தாக்குதல்களுக்கும் எச்சரிக்கை விடுவதாக கடந்த காலத்தில் அமைந்திருந்தது. ரஷ்யாவின் ஆயுததளபாடங்களால் சிரிய எல்லைகள் இஸ்ரேலை அச்சுறுத்தப்பட்டன. அதனால் இத்தகைய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சிரியாவில் குவிக்கப்பட்டிருக்கும் ரஷ்யாவினுடைய ஆயுத தளபாடங்களை அழிப்பது இஸ்ரேல் – அமெரிக்க கூட்டின் பிரதான உத்தியாக தென்படுகின்றது.
ஐந்தாவது, சிரியா மீதான தாக்குதல் என்பது ஈரானை அச்சத்துக்கு உள்ளாக்குவதோடு பலவீனப்படுத்துகின்ற செய்முறையை இஸ்ரேல் வெளிப்படுத்துகின்றது. இஸ்ரேல்; மேற்காசியாவினுடைய கட்டுப்பாட்டை தனது பிடிக்குள் வைத்துக் கொள்வதற்கு சவால் மிக்க நாடாக ஈரானை கருதுகின்றது. ஆனால் ஈரானுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்வதில் சிரியாவும் அதன் ஆட்சியும் வலுவான பாதுகாப்பு அரணாக காணப்பட்டது. அதனை தகர்ப்பது என்பது ஈரானின் இருப்புக்கும் அதன் வளர்ச்சிக்கும் எப்போதும் நெருக்கடி மிக்க ஒன்றாகவே காணப்படுகிறது. அதனை நோக்கியே இஸ்ரேல் – சிரியா மீதான தாக்குதலை விஸ்தரித்திருக்துள்ளது. ஈரானை இலக்கு வைத்து நேரடியான தாக்குதலை நிகழ்த்த முடியாது. சிரியாவை தாக்குவதன் மூலம் ஈரானுக்கு எச்சரிக்கை கொடுக்கக் கூடிய விதத்தில் செயற்படுவதாக காட்டிக்கொள்கின்றது.
ஆறாவது இஸ்ரேல் – அமெரிக்க கூட்டு மேற்காசிய அரசியலை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருகின்றது. மேற்காசியா பொருளாதார வளம் மிக்க தேசமாக இருப்பது அதன் மீது ரஷ்யா, ஈரான், சீனா போன்ற நாடுகள் ஆதிக்கம் செய்வதை தடுப்பதும், சிரியா மீதான தாக்குதலை முதன்மைப்படுத்துவதற்கான காரணமாக விளங்குகிறது. இத்தகைய தாக்குதலானது ரஷ்யாவை பலவீனப்படுத்துவது மட்டுமின்றி ஈரானையும் அதன் கூட்டு நாடுகளான சீனாவையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவது என்பது ஒட்டுமொத்த உலக அரசியல் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒன்றாக காணப்படுகின்றது. இஸ்ரேலிய – அமெரிக்க கூட்டினுடைய தாக்குதல் சிரியாவை மையப்படுத்தி நகருகின்றது.
எனவே பிராந்திய அரசியலையும் உலகளாவிய அரசியலையும் இலக்காகக் கொண்டு சிரியா மீதான இஸ்ரேலியத் தாக்குதல் விஸ்தாரிக்கப்பட்டு இருக்கின்றது. இது தாக்குதல் மூலம் அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமன்றி மேற்குல நாடுகள் முழுவதும் அரசியலும் இராணுவ ரீதியான உத்திகளும் பிராந்தியத்தை கடந்து உலக அரசியலில் மேற்கின் ஆதிக்கத்தை தக்கவைப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதனை நோக்கிய சிரியா மீதான தாக்குதல் அதீதமானதாக மாறிவருகின்றது. கிளச்சி குழுக்களும் அது சார்ந்திருக்கக் கூடிய அமைப்புக்களுமே இஸ்ரேலுக்கு அதிக நெருக்கடியை கொடுத்து வருவதனால் அவற்றின் மீதான தாக்குதலை ஆயுதங்கள் கைப்பற்றப்படாமல் தடுப்பதற்கான வழிமுறை ஊடாக நகர்த்தப்பட்ட போதும் அது ஒட்டுமொத்தமான உலக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது.