2034 FIFA உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதற்கான உரிமையை சவூதி அரேபியா உத்தியோக பூர்வமாக பெற்றுக் கொண்டதாக கடந்த புதன் கிழமை அறிவிக்கப்பட்டது. FIFA வரலாற்றில், இது வரை நடைபெற்ற ஏலங்களில் அதிக ஆதரவுடன் சவூதி அரேபியா இந்த வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த வெற்றியானது அந்நாட்டின் விஷன் 2030 திட்டத்தின் இலக்குகளில் முக்கிய அடைவாக கருதப்படுகிறது.
“Growing. Together” எனும் மகுட வாசகத்துடன் சவூதி அரேபியா FIFA ஏலத்திற்கான தனது விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. 48 அணிகள் கொண்ட உலகக் கிண்ணப் போட்டி முழுவதுமாக ஒரே நாட்டில் நடைபெறவுள்ளது இதுவே முதன் முறையாகும். ரியாத், ஜித்தா, அல்-கொபார், அபா மற்றும் நியோம் போன்ற ஐந்து முக்கிய நகரங்களில் 15 மேம்பட்ட மைதானங்கள் இதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கலாசார பரிமாற்றம் மற்றும் முன்னோடியான உட்கட்டமைப்புகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்திய இந்த FIFA இற்கான திட்டம், நாட்டின் உயர்மட்ட வளர்ச்சியையும் பொருளாதார பலத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
FIFA ஆய்வுக் குழு, 2024 ஒக்டோபரில் சவூதி அரேபியாவில் போட்டிகளை நடத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த குழு, மைதானங்கள், போக்குவரத்து வசதிகள் மற்றும் தங்குமிடங்கள் உள்ளிட்ட பல அம்சங்களை மெச்சிப் பாராட்டியது. உலகம் முழுவதும் இருந்து வரும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இடமளிக்க இந்த வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. FIFA நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய சவூதி அரேபிய அரசாங்கத்தின் முயற்சி இந்த வெற்றியில் முக்கிய பாத்திரம் வகித்தது.
2034 உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதானது, விளையாட்டு மற்றும் கலாசாரத் துறைகளில் சவூதியின் உலகளாவிய தாக்கத்தை அதிகரிக்க அந்நாட்டின் முயற்சிகளில் முக்கியமான ஒரு படியாகும். முன்னரே, சவூதி பல்வேறு உச்ச அளவிலான கால்பந்தாட்டத் தொடர்கள் மற்றும் போட்டிகளை நடத்தி உலக மக்களிடம் தங்கள் ஆளுமை மற்றும் இயலுமையை நிரூபித்துள்ளனர். இந்த வெற்றி, உலகளாவிய விளையாட்டுக்களுக்கான மையமாக சவூதி அரேபியாவின் நிலையை மேலும் உறுதிசெய்கிறது.
இந்த வெற்றியின் மூலம், சவூதி அரேபியா உலகக் கிண்ணத்தை நடத்தும் நாடுகள் என்ற அரிய பட்டியலில் இணைகிறது. இந்த நிகழ்வு கால்பந்து விளையாட்டுக்கு மட்டுமின்றி, நாட்டின் பாரம்பரியம், நவீனத்துவம் மற்றும் உலக ஒற்றுமை குறித்த தத்துவத்தை வெளிப்படுத்தும் வண்ணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2034 உலகக் கிண்ணம், சர்வதேச கால்பந்து நிகழ்ச்சிகளுக்கான தரத்தைக் மேலும் உயர்த்துமென்றும் வேறொரு பரிமாணத்துக்கு கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதற்கு, இந்நிகழ்வு உலகின் வேகமாக வளர்ந்துவரும் முக்கிய நாடுகளில் ஒன்றான சவூதியில் நடைபெற உள்ளது.
காலித் ரிஸ்வான்