பத்தாவது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெற்று சுமார் ஒரு மாதத்தின் பின்னரே பாராளுமன்றம் உறுப்பினர்களால் முழுமை யடைந்துள்ளது. தேர்தல் முடிவடைந்து கடந்த ஒரு சில தினங்கள் வரையில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் எதிர்க்கட்சிகள் தத்தளித்துக் கொண்டும், தமக்குள் முட்டிமோதிக் கொண்டும் இருந்தன.
புதிய ஜனநாயக முன்னணி நீண்ட இழுபறிக்குப் பின்னர் வெற்றிடமாக இருந்த மற்றுமொரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைத்து விட்டது.
இருந்தபோதும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் இழுபறி நிலையைச் சந்தித்திருந்த பின்னணியில் கடந்த வியாழக்கிழமை ஒரு வழியாக தீர்மானமொன்றுக்கு வந்து பங்காளிக் கட்சிகளின் சார்பில் மூவரையும், தமது கட்சியின் சார்பில் ஒருவரையும் நியமிப்பதற்கு இணக்கம் கண்டிருந்தது. இதனால் தேசியப் பட்டியல் பிரச்சினைக்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் பதவிகள் இரண்டும் நிரப்பப்பட்டாலும் அந்த நியமனங்கள் கட்சிக்குள் முரண்பாட்டை அதிகரித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலேயே புதிய ஜனநாயகக் கட்சி இம்முறையும் பொதுத்தேர்தலில் களமிறங்கியது. ரணில் போட்டியிடாத போதும் அவரின் தலைமையின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியும் அவர்களுடன் இணைந்துகொண்ட முன்னாள் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அடங்கிய குழுவும் இக்கூட்டணியில் போட்டியிடத் தீர்மானித்தன.
பாரம்பரிய அரசியல் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி தனது யானைச் சின்னத்தை முதன் முறையாகப் பொதுத்தேர்தலில் கைவிட்டிருந்தது. இதற்கு அமைய கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சிலிண்டர் சின்னத்தைப் புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக் கொண்டது.
சிறிமத் அத்துலத் முதலியால் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய லலித் முன்னணி என்ற கட்சியே பின்னாளில் 2009ஆம் ஆண்டு ‘புதிய ஜனநாயக முன்னணி’ எனப் பெயர் மாற்றப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான ரவி கருணாநாயக்கவிடம் இதன் உரிமம் காணப்படுகின்றது. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவும், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவும் அன்னம் சின்னத்தில் புதிய ஜனநாயகக் கட்சியிலேயே போட்டியிட்டிருந்தனர்.
இவ்வாறான பின்னணியைக் கொண்ட புதிய ஜனநாயக முன்னணி இம்முறை பொதுத்தேர்தலில் 4 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதுடன் 2 தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியும் கிடைத்தது. இதில் முதலாவது தேசியப் பட்டியல் பதவிக்கு கட்சியின் உறுப்புரிமையைக் கொண்டுள்ள ரவி கருணாநாயக்க கட்சியின் செயலாளர் ஊடாகத் தனது பெயரைத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்தார்.
தேர்தலுக்கு முன்னர் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டுக்கு அமைய தமது கட்சிக்கு இத்தேசியப் பட்டியல் ஆசனம் உரித்தானது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஷர்மிலா பெரேரா அறிவித்திருந்தார். எனினும், ரவி கருணாநாயக்கவின் நியமனம் பற்றி ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அல்லது பங்காளிக் கட்சிகளுக்கோ அறிவிக்கப்படவில்லையென விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் எஞ்சியிருந்த ஓர் வெற்றிடத்திற்கு மாத்தறையில் போட்டியிட்டு தோல்வியடைந்த கஞ்சன விஜேசேகரவை நியமிக்க வேண்டும் என ரமேஷ் பத்திரன தலைமையிலான ஏனைய அனைவரும் இணக்கம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் லசந்த அழகியவண்ண, நிமல் லான்சா உள்ளிட்ட தரப்பினர் குறித்த தேசியப் பட்டியல் சுதந்திரக் கட்சிக்குச் செல்ல வேண்டும் என்பதால் பைசல் முஸ்தபா நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த நிலையிலேயே புதிய ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பைசர் முஸ்தபாவின் பெயர் அனுப்பி, அப்பெயர் வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டு விட்டது. இந்தச் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி திருடப்பட்டு விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.
அது மாத்திரமன்றி, கஞ்சன விஜேசேகரவின் பெயரைப் பிரேரித்திருந்த ரமேஸ் பத்திரன தலைமையிலான மறுதரப்பினரும் இவ்விடயத்தில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ரவி கருணாநாயக்கவின் நியமனம் குறித்து விசாரிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமித்திருந்த நிலையில், பைசரின் நியமனத்துக்கும் குழு நியமிக்கப்படும் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதுஇவ்விதமிருக்க, ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைத்த ஐந்து தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு இதுவரை ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் என்ற ரீதியில் அவர் தனது பெயரைத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்து விட்டார்.
எஞ்சிய நான்கு ஆசனங்களைப் பகிர்ந்து கொள்வதில் கூட்டணிக் கட்சிகளுக்குள் ஏறத்தாழ ஒரு மாதமாக இழுபறி நிலை காணப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொள்ளாமல் நால்வரின் பெயர்களை பரிந்துரைப்பதற்கு எதிராக தடையுத்தரவொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூக் ஹக்கீம் தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதியான நிசாம் காரியப்பரை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றுக்கு பெயரிடாமல் தேசியப் பட்டியல் தயாரிப்பதைத் தடுத்து மாவட்ட நீதிமன்ற நீதவான் இந்த தடையுத்தரவை பிறப்பித்திருந்தார்.
கடந்த வியாழக்கிழமை காலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை ஐக்கிய மக்கள் சக்தி மாலையே அறிவித்து விட்டது.
இதற்கமைய, கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிட்ட பங்காளிக் கட்சிகளான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பரையும், தேசிய மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளர் மொஹமட் இஸ்மாயில் முத்து முஹம்மது ஆகியோரினது பெயர்களையும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சுஜீவ சேனசிங்கவின் பெயரையும் ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இதனால் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் இழுபறி முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இது திருப்தியை ஏற்படுத்தியிருக்குமா என்பது கேள்விக்குறியே. இரான் விக்ரமரத்ன, ஹிருனிகா பிரேமச்சத்திர, இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், டலஸ் அழகப்பெரும போன்றவர்களின் பெயர்களும் தேசியப் பட்டியல் விடயத்தில் அடிபட்டிருந்தன. இதனால் இவ்விடயத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருந்தாலும் கட்சிக்குள் குழப்பம் நிலவுவதாகவே தெரிகின்றது.
பி.ஹர்ஷன்