Home » அரசுக்கு யாழ். மக்கள் தந்த மூன்று வரங்கள்!
கம்பவாரிதி பதில்கள்

அரசுக்கு யாழ். மக்கள் தந்த மூன்று வரங்கள்!

by Damith Pushpika
December 15, 2024 6:33 am 0 comment

கேள்வி: இன்றைய நிலையில், நீங்கள் சுமந்திரனாக இருந்தால் என்ன செய்வீர்கள்? ஸ்ரீதரனாக இருந்தால் என்ன செய்வீர்கள்? காரணம் கூறி விளக்குக!

பதில்: நான், நானாக இருக்கத்தான் விரும்புவேன் என்பதுதான் முதற்பதில். ஆனாலும் நீங்கள் கேட்டபடியால், இக்கேள்விக்குப் பதில் சொல்கிறேன்.

சுமந்திரனாக இருந்தால் இந்நேரம் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருப்பேன். காரணம், எனது பெறுமதி தெரியாதவர்களுக்காகப் பணி செய்தால், என் பணியும் இழிவு செய்யப்படும், நானும் இழிவு செய்யப்படுவேன் என்பதுவே!

ஸ்ரீதரனாக இருந்திருந்தால் – ஒன்று, உடன்படாத கட்சியை விட்டு விலகியிருப்பேன், அல்லது கட்சியை ஒன்றுபடுத்தி இருப்பேன். இரண்டும் செய்யாமல் உட்பகை வளர்ப்பதில் என் காலத்தைவீணாக்கமாட்டேன்.

கேள்வி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் காண, நடிகர் விஜய் நேரில் வரவில்லையாமே?

பதில்: மக்கள் வெள்ளம்போல் வந்தபோது மகிழ்ந்தவர், மக்களுக்குள் வெள்ளம் வந்தபோது உடன் இருந்திருக்க வேண்டும். அதுதான் நியாயம்.

கேள்வி: புதிய அரசாங்கம் மாவீரர் தினத்தை சுதந்திரமாகக் கொண்டாட அனுமதித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: பாராட்ட தகுந்த பெரிய விசயம்தான்! முன்னைய அரசாங்கங்கள் இனவாதத்தால் ஊதிப் பெருப்பித்து வைத்திருந்த சாதாரண விடயத்தை, பருத்திருக்கும் பலூனை ஒரு குண்டூசியால் குத்தி உடைத்து எறிவது போல், மிகச் சாதாரணமாக ‘அனுமதி’ எனும் ஊசியால் குத்தி உடைத்தெறிந்து விட்டது இந்த அரசாங்கம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அனுமதியால் பேரினவாதிகள் துன்பப்படுகிறார்களோ இல்லையோ, நம்மவர்கள் சிலர்தான் பெரும் துன்பப்படுவதாய்த் தெரிகிறது.

இனத்திற்காய் ஒன்றுமே செய்யாமல் இருந்துகொண்டு, பாராளுமன்றப் பதவிகளால் தாம் வாழ, மாவீரர் தினத்தை பயன்படுத்தி வந்த பல தலைவர்கள் பாடுதான் பெரும் சங்கடமாய்ப் போய்விட்டது.

ஏதோ ஒரு தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலு தீவிரவாதிகளைப் பிடிக்க வந்த பொலிஸ்காரரிடம் ‘நானும் ஒரு தீவிரவாதிதான் என்னையும் ஜீப்பில் ஏற்றுங்கள்’ என்று கெஞ்சுவார்.

அது போலத்தான், எத்தனையோ தியாகங்கள் செய்து இறந்த போராளிகளின் நினைவேந்தலில், வெறுமனே ஒரு விளக்கை மட்டும் ஏற்றிவிட்டு இறந்த போராளிகளைவிட, தாங்கள்தான் உயர்ந்த தியாகிகள் என்பதாய் காட்டிவந்த நம் தலைவர்களுக்கு, திடீரென அரசாங்கம் ‘கேற்’றை திறந்துவிட, என்ன செய்வதென்று தெரியாமல்ப் போயிற்று.

அதனால், என்னென்னவோ சொல்லி, செய்து வலியக் கொழுவப் பார்க்கிறார்கள். அவர்களைப் பார்க்கத்தான் பரிதாபமாக இருக்கிறது.

கேள்வி: வர்ணாச்சிரம தர்மம்தான் சாதிகளைக் கொணர்ந்து, மக்களைப் பிரித்தது என்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் சொல்லி வருகிறார்கள். அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: அதெல்லாம் பழைய கதை. இப்போது, சாதிகளை வைத்து மக்களைப் பிரிக்கும் செயலை, அங்குள்ள அரசியல்வாதிகள்தான் செய்து வருகிறார்கள். முடிந்தால், இக்கட்சிகள் முதலில், சாதி அடையாளங்களை விட்டு வெளியே வரட்டும். அதன் பிறகு, வர்ணா சிரமதர்மத்தை குற்றம் சாட்டலாம்.

கேள்வி: இலங்கை அரசவைக்குள் குரங்கு புகுந்து விட்டதாமே?

பதில்: உண்மைதான்! அரசவைக்குள் புகுந்ததோடு மட்டும் அது நிற்கவில்லை. அந்த அரசவையையும் சிதைத்து, இலங்கையையும் சிதைத்த பிறகுதான் அது ஓய்ந்தது. நான் இராவணனின் அவைக்குள் புகுந்த அனுமானைப் பற்றித்தான் சொல்லுகிறேன். நீங்களும் அந்தக் குரங்கைப் பற்றித்தானே கேட்டீர்கள்?

கேள்வி : அமெரிக்க டொலருக்கு எதிராக, புதிய நாணயத்தை அறிமுகம் செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ‘ட்ரம்ப்’ எச்சரித்திருப்பது பற்றி…

பதில்: வேகமாக வளர்ந்துவரும் நாடுகளின் முதல் எழுத்துக்களைக் கொண்டு குறிப்பிடப்படும் சுருக்கப்பெயரே பிரிக்ஸ் (BRICS) என்பதாகும். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகியவையே அந்த ஐந்து நாடுகள் ஆகும்.

இம்முறை தென்னாபிரிக்காவில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் அமெரிக்க ​ெடாலரை முறியடிப்பதற்காய் ‘பிரிக்ஸ் நாணயத்தை’ அறிமுகப்படுத்த 44 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இம்மாநாட்டில் இம்முறை ரஷ்ய அதிபர் ‘விளாடிமிர் புட்டின்’ கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் இம்முயற்சியில் ரஷ்யாவின் அழுத்தமே அதிகமாய் இருப்பதாய்க் கருதப்படுகிறது. அறிமுகப்படுத்தப்படும் BRICS நாணயத்தை 44 நாடுகள் எதிர்காலத்தில் பயன்படுத்தும் என்று அது நம்புகிறது. இப்போதைக்கு இம்முயற்சி நூறு சதவீத வெற்றி அளிப்பதில் ஐயம் இருப்பதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ரஷ்யா கெட்டித்தனமாய் அமெரிக்காவுக்குச் ‘செக்’ வைத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. அமெரிக்காவால் அழுத்தத்திற்கு ஆளாகும் நாடுகள், துணிந்து ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் கைகோர்த்திருக்கின்றன. ‘ட்ரம்ப்’பிற்கு இது புதியதோர் தலையிடிதான்.

“பிரிக்ஸ்’ மாநாட்டின் இந்த புதிய நாணயத்தாள் அறிமுக அறிவிப்பால், ‘ட்ரம்ப்’ கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார். மற்றைய நாடுகளுக்கு அவர் விடுத்திருக்கும் எச்சரிக்கை அதனைக் காட்டுகின்றது. இந்தியா, சீனா போன்ற நாடுகளின் முடிவில்தான் இம்முயற்சியின் வெற்றி தங்கியிருக்கப்போகிறது.

அரசியலில் ‘காசேதான் கடவுளடா’ என்ற உண்மை வெளிப்படையானது. புதிய நாணயத்தாள் “பிரிக்ஸ்’ அமைப்பால் அறிமுகப்படுத்தப்படுமானால், அமெரிக்கா சங்கடப்படப்போவது நிச்சயம். மூன்றாம் உலக யுத்தத்திற்கான, ஆயத்தம் தொடங்கி விட்டதன் அடையாளமாகவே, இப்பிரச்சினையைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

கேள்வி: சிக்கன நடவடிக்கை, இராணுவப் பிரதேசங்கள் விடுவிப்பு, மாவீரர் தினத்திற்கான அனுமதி என்பதான ஜனாதிபதியின் முன்னெடுப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: துணிந்த, பாராட்டுக்குரிய விடயங்கள்தான் என்பதில் எந்தவித ஐயத்திற்கும் இடமில்லை. ஆனால், இவையெல்லாம் பல ஆண்டுகளாக புரையோடிக் கிடக்கும் இனப்பிரச்சினைப் புண்னுக்கான மருந்துகளாகா என்பது மட்டும் நிச்சயம்.

தாழிதத்தில் போட்ட கறிவேற்பிலை போல, மேற்சொன்ன விடயங்கள் வாசம் கிளப்பி, ஈர்ப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அவை வாசத்திற்கு உதவுமே தவிர, பசிதீர்க்க உதவப் போவதில்லை.

பசிதீர்க்க கறிகள் சமைத்தாக வேண்டும் அதுதான் செய்யப்பட வேண்டிய முதல் வேலை. இப்போதைக்கு அடுப்பில் சட்டியேனும் ஏற்றப்பட்டதாய்த் தெரியவில்லை. தீர்வுத் திட்டம் எனும் சட்டியை, மக்கள்மன்று எனும் அடுப்பில் ஏற்றி, அதனுள், அனைத்து இனத்தாரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சட்ட வரைபுகள் எனும், காய்கறிகளைப் போட்டு, கறி, அரை அவியலாப் போகமாலும், அடிப்பிடித்து விடாமலும் இருக்கத்தக்கதாக பக்குவமாய் இறக்கப்பட்ட பிறகுதான், தாழிதத்தின் பயன்பாடுபற்றி பாராட்டுரைக்கலாம்.

வெறும் தாழிதத்தைப் பாராட்டி என்ன பயன்? துணிவோடு செயற்பட்டு வரும் ஜனாதிபதி விரைவாக கறி சமைத்து, அனைவரது பசியையும் தீர்த்து வைப்பார் என நம்புவோமாக!

கேள்வி: ஜே.வி.பி கட்சிக்கு, நமது யாழ் மக்கள் மூன்று தேர்தல் ‘சீற்று’களை அள்ளிக் கொடுத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: கைகேயிக்கு, தசரதன் இரண்டு வரங்களைக் கொடுத்ததாக இராமாயணம் சொல்கிறது. நமது யாழ் மக்கள் தசரதனுக்கு ஒரு படிமேலே போய் ஜே.வி.பி.க்கு மூன்று வரங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

வரையறை இல்லாமல் கொடுக்கப்படும் வரங்கள் எல்லாமே, துன்பத்தை விளைவிக்க வாய்ப்பிருக்கிறது. தசரதனும் கைகேயியை நம்பித்தான் வரங்கள் கொடுத்தான். கைகேயியும் நல்லவளாய் இருந்துதான் வரங்களைப் பெற்றுக் கொண்டாள்.

இடையில் வந்த கூனியாற்தான், எல்லாம் தலைகீழாய் மாறிப்போயிற்று. வரம் கொடுக்கும் போது, கைகேயி தீயவளாய் மாறுவாள் என தசரதன் கிஞ்சித்தும் நினைக்கவில்லை. வரத்தைப் பெற்றபோது, கைகேயியும் இந்த வரங்களை, தான் இப்படித்தான் பயன்படுத்தப்போகிறேன் என நினைத்திருக்கமாட்டாள். இடையில் வந்த கூனி, செய்த சூழ்ச்சி அத்தனை பேர் நம்பிக்கையையும் அசைத்துப் போட்டுவிட்டது.

இலங்கையிலும் கூனிகளுக்கு பஞ்சமில்லை. அந்தக் கூனிகளின், வஞ்சனைகளுக்கு, ஜனாதிபதியாகிய கைகேயி அசைந்து கொடுக்காமல் இருக்க வேண்டும். அசைத்து கொடுத்தாளோ, வரம் கொடுத்த தசரதனான நம்மக்கள் வான் ஏக, நம் புதிய தலைமுறை, இராமன்கள் மீண்டும் கான் ஏக வேண்டி வந்தாலும் வந்துவிடும்.

நமது, தசரதனார் அவசரப்பட்டு கொடுத்த வரங்களை, புதிய கையேகி சரிவரப் பயன்படுத்தினால், நாடு உய்யும். மாறி நடந்தாலோ நாடு ‘பிய்யும்’ என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கேள்வி: சிக்கன நடவடிக்கைகளால் மட்டும் ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை நிமிர்த்திவிடலாம் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: இல்லை! நாட்டை நிமிர்த்த அதுமட்டும போதாது என்றுதான் தோன்றுகின்றது. ஆனால் ஒன்று, சிக்கன நடவடிக்கைகளால் வீழ்ந்த பொருளாதாரத்தை முழுமையாய் நிமிர்த்த முடியாவிட்டாலும், மேலும் அந்த வீழ்ச்சி பாதாளம் நோக்கிச் செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை என்கிறார் திருவள்ளுவர். வருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும், அது செலவாகிப் போகும் வழியானது விரியாதிருந்தால், அரசனுக்குக்கேடில்லை என்பது இக்குறளின் பொருள்.

வள்ளுவர் இக்குறளில் வரவைவிட செலவு குறைந்தால் கேடில்லை என்கிறாரே தவிர, அதுவே ஒரு நாட்டின் வளர்ச்சிக்குப் போதும் என்று உரைக்கவில்லை என்பதனை நாம் கவனித்தாக வேண்டும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division