பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பலத்துடன் ஆட்சி யமைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவராக விளங்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முதலாவது வெளிநாட்டு விஜயம் குறித்து தற்பொழுது கவனம் செலுத்தப்படுகின்றது.
இன்று 15 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்கின்றார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முன்னெடுக்கவிருக்கும் முதலாவது வெளிநாட்டுப் பயணமே அயல் நாடான இந்தியாவுக்கான விஜயமாகும். எனவேதான் ஜனாதிபதியின் இந்திய விஜயம் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது எனலாம்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவின் அடிப்படையில் பார்க்கும் போது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிகழ்வாக இதனைக் கொள்ள முடியும். ஏனெனில் மத்திய இடதுசாரிக் கொள்கையைக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி, வலதுசாரிக் கொள்கையைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கங்களுடன் நெருக்கம் பேணி வருவது இந்தியாவின் பொதுவான நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. இந்த அரசாங்கங்களுடன் இந்தியா பல வருடங்களாக நட்புப் பாராட்டி வந்தது.
இவ்வாறான பின்னணியில், இடதுசாரி பின்புலத்தைக் கொண்ட ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இந்தியா கையாளுகின்ற முதலாவது நட்புறவு இதுவாகும்.
இந்தியா தொடர்பில் ஜே.வி.பி கடந்த காலத்தில் கொண்டிருந்த நிலைப்பாடு விமர்சனத்துக்குரிதாக இருந்துள்ளது. ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீர எழுப்பிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக ‘இந்திய விரிவாக்கம்’ என்ற விடயம் காணப்பட்டது. அதன் பின்னரும், பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஜே.வி.பி வெளிப்படுத்தியிருந்தது.
இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கிய சில சந்தர்ப்பங்களில் அதற்கு எதிரான விமர்சனங்கள் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறான கடந்த காலப் பின்னணியிலேயே இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்கு விஜயம் செய்கின்றார். ஜனாதிபதி அநுரவின் அரசுடன் நல்லுறவுகளை ஆரம்பிக்க வேண்டிய சந்தர்ப்பம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அல்லது சஜித் பிரேமதாச வெற்றி பெறுவதையே இந்தியா விரும்பியிருந்ததாக அன்றைய வேளையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்விடயத்தை தென்னிலங்கையிலுள்ள சில கட்சிகள் தமது தேர்தல் பிரசாரத்துக்கும் பயன்படுத்தியிருந்தன.
எனினும், தேசிய மக்கள் சக்தி மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை மற்றும் குறுகிய காலத்தில் அக்கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வந்ததன் களநிலவரத்தை அறிந்துகொண்ட இந்தியா, ஜனாதிபதித் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னரே அநுர குமார திசாநாயக்கவை இந்தியாவுக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
அன்றைய வேளையில் எந்தவித உயர் பதவியையும் வகிக்காத, பிரதான எதிர்க்கட்சியாக இல்லாத கட்சியொன்றின் தலைவரை இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்துக் கலந்துரையாடல் நடத்திய சம்பவமாக இது அப்போது வியப்புடன் பார்க்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது இந்தியாவின் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டிருந்ததுடன், இலங்கை குறித்த தமது நிலைப்பாட்டையும் இந்தியா வெளிப்படுத்தியிருந்தது.
இவ்வாறான பின்னணியில், இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டவுடன் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக இலங்கைக்கு வருகை தந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இந்தியாவின் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டும் என்ற இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பையும் அநுரவிடம் கையளித்திருந்தார்.
இந்த அழைப்புக்கு ஏற்ப ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று 15ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கின்றார். இந்த விஜயத்தின் போது இருதரப்பு உறவுகள் குறித்த விடயங்கள் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய மீனவர் விவகாரம்:
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்டகாலப் பிரச்சினையாகக் காணப்படும் எல்லை தாண்டிய இந்திய மீனவர் விவகாரம் குறித்து இவ்விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்தி ரசேகர் தெரவித்துள்ளார்.
எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களால் இலங்கையின் வடபகுதியிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. இது விடயத்தில் இரு தரப்பினரினதும் பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என்பதால் ஜனாதிபதியின் விஜயத்தின் போது இதுபற்றிப் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் கைதுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதால் இந்த விவகாரம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
மீனவர் பிரச்சினை என்பது இந்தியாவில் எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தீர்க்க முடியாத பிரச்சினையாக நீடித்து வருகின்றது. இலங்கையிலும் இந்தியாவிலும் ஒவ்வொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வரும்போது மறுபடியும் முதலில் இருந்து பேச்சுக்களை ஆரம்பிப்பதும், இந்தப் பேச்சுக்கள் இடைநடுவில் கைவிடப்படுவதுமே இதுவரை காலமான வரலாறாக இருந்து வந்தது.
குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும்வரை அவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது மாற்று ஏற்பாடுகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் கொள்கை அளவில் இணங்கியிருந்த போதும், இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
விசேடமாக தமிழக அரசியல் தரப்புகள் தமது தேர்தல் பிரசாரங்களில் ஒன்றாக தமிழக மீனவர் விவகாரத்தையும் பயன்படுத்துகின்றன. ஆனால் அதற்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் அசமந்தப் போக்கைக் கையாள்வதாகவே தெரிகின்றது.
இருந்தபோதும் அநுர தலைமையிலான அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுத்தால் வடபகுதி உள்ளிட்ட இலங்கையின் மீனவர் சமூகம் தமது வாழ்வாதாரத்தை எவ்வித சிக்கலும் இன்றி முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று கோரிக்ைக முன்வைக்கப்படுகின்றது.
முதலீட்டு வாய்ப்புகள்:
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற ரீதியில் அநுர குமார திசாநாயக்க தேர்தலுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்த போது, அந்நாட்டின் முக்கியமான தொழில்துறைகளுக்கு களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்டிருந்தார். குறிப்பாக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, விவசாயம் உள்ளிட்ட துறைகள் குறித்து இவ்விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டிருந்தது.
விசேடமாக இந்தியாவின் பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனமொன்றுக்கும் விஜயம் செய்திருந்தார். இந்த நிலையில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்தியா செல்லும் அநுர குமார திசாநாயக்க, இம்முறை பல்வேறு முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்துக் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
இலங்கையின் காற்றாலை மின்னுற்பத்தித் துறையில் அதானி நிறுவனத்தின் முதலீடு கடந்த காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் மன்னாரில் காற்றாலை அமைப்பதற்கு ஒப்பந்தம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றிருப்பதாக விமர்சனங்கள் பல முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறான பின்னணியில் இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் பற்றிய கலந்துரையாடல்களும் ஜனாதிபதியின் விஜயத்தில் முக்கிய இடம் பிடிக்கலாம் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
13 ஆவது திருத்தம்:
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் எனக் கூறியிருந்தது.
இந்த நிலையில் இந்தியாவின் ஆதரவுடன் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யப் போவதாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா கூறியதாக ஊடகங்கள் அறிக்கையிட்டிருந்தன. ஆனால் அச்செய்தி திரிபுபடுத்தப்பட்டதாக ரில்வின் சில்வா தரப்பிலிருந்து பின்னர் செய்தி வெளியாகியிருந்தது.
புதிய அரசியலமைப்பில் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கும் விதத்தில் புதிய கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவது பற்றியே தான் கூறியதாக ரில்வின் சில்வா விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில், அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது இது பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதால் அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை குறித்து இந்தியா கேட்டறிவதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளன.
இடதுசாரிப் பின்புலம் கொண்ட முதலாவது அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைந்திருப்பதால் பூகோள அரசியலில் புதியதொரு மாற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் போட்டி நிலவி வருகின்றது. இதனால், இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் என்பது முக்கியமானதொன்றாக அமைகின்றது.