சுமார் ஒரு மாதகால இழுபறிகளின் பின்னர் மனோ கணேசன் தேசியப் பட்டியலின் மூலம் தெரிவாகிவிட்டார். சென்ற தடவை போல இம்முறையும் நூலிலைழையில் கொழும்பு தமிழர் பிரதிநிதித்துவம் தப்பியிருக்கிறது. அதுவும் இம்முறை தேசியப் பட்டியலின் தயவால். 2001 தொடக்கம் 2024 வரை மனோ கணேசன் சுமார் 18 ஆண்டுகள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்திருக்கிறார். கொழும்பில் அதிக காலம் தமிழ் அரசியல் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து வருபவர் மனோகணேசன்.
குறைந்தது மூன்று தமிழர் பிரதிநிதிகளாவது தெரிவு செய்யப்பட வேண்டிய கொழும்பில். ஒன்றுக்கே ஊசலாடும் நிலை ஏன் தோன்றியது. கொழும்பு பிரதிநிதித்துவம் தேசியப் பட்டியலில் யாசகம் கேட்கும் நிலைக்கு கொண்டு வந்ததன் வரலாறு எங்கு தொடங்கி எங்கு வந்தடைந்திருக்கிறது என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
2024 பொதுத் தேர்தலில் 225 ஆசனங்களுக்காக 22 மாவட்டங்களிலும் மொத்தம் 8,821 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் சார்பாக 5,564 பெரும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 3,257 பெரும் இவ்வாறு போட்டியிட்டிருந்தனர்.
இதில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட மாவட்டம் கொழும்பு. கொழும்பில் 27 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் 19 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டிருந்தன. ஆக தலா 21 வேட்பாளர்கள் வீதம் மொத்த 46 பட்டியலிலும் சேர்த்து மொத்தமாக 966 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதாவது நாட்டின் மொத்த வேட்பாளர்களில் 11% வீதமானோர் கொழும்பிலேயே போட்டியிட்டிருக்கின்றனர். இந்த 966 வேட்பாளர்களில் 66 வேட்பாளர்களே தமிழர்கள் என்பதை நம்ப முடிகிறதா? இது மொத்த வேட்பாளர்களில் 6.83% வீதமே.
இதில் 19 பேர் 19 சுயேட்சைக் குழுக்களில் அடங்குபவர்கள். எஞ்சிய 47 பேர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பாக போட்டியிட்டிருக்கிறார்கள்.
இவற்றில் கொழும்பில் அதிக வாக்குகளைப் பெற்ற பிரதான ஐந்து கட்சிகள்; அவர்கள் கொழும்பில் நிறுத்திய தலா 21 வேட்பாளர்களில் தமிழ் வேட்பாளர்கள் எத்தனை பேர் எனப் பார்ப்போம்.
NPP தேசிய மக்க சக்தி (அனுர தரப்பு) – 2
SJB ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் தரப்பு) – 2
NDF புதிய ஜனநாயக முன்னணி (ரணில் தரப்பு) – 0
SLPP ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணி (மஹிந்த தரப்பு) – 0
SB சர்வஜன அதிகாரம் (திலித் ஜயவீர தரப்பு) – 0
கொழும்பின் 66 தமிழ் வேட்பாளர்களில் 13 பேர் மட்டுமே பெண்கள். (அதைத் தனித்து இன்னொரு முறை பார்ப்போம்). இன்னும் சொல்லப்போனால் கொழும்பில் மொத்த 966 வேட்பாளர்களில் 13 பேர் (1.35%) மட்டுமே தமிழ்ப் பெண்கள்.
கொழும்பின் தமிழ் பிரதிநிதித்துவம் பேணப்பட வேண்டும் என்பதற்கான தேவை உணரப்பட்டு நூறாண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் பிரதான கட்சிகள் எவையும் இதன் தேவையை உணர்ந்ததாக இல்லை என்பதை மேற்படி தரவுகளில் இருந்தும் புரிந்து கொள்ளலாம். அதனை உணர்த்துவதற்கான அரசியல் சக்திகள் எதுவும் களத்திலும் இல்லை என்பது தான் அவலம்.
இறுதியாக குடித்தொகை மதிப்பு எடுக்கப்பட்ட 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 11.5% வீதம் மட்டுமே கொழும்பின் தமிழர் சனத்தொகை என்கிறது. இதில் 1.5% வீதம் மட்டுமே இந்தியத் தமிழர் என்றும் ஏனையோர் இலங்கைத் தமிழர் என்றும் குறிப்பிடுகிறது. இந்திய வம்சாவழித் தமிழர் பலர் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தம்மை இலங்கைத் தமிழர் என்று பதிவு செய்கிற பழக்கத்தைத் தொடங்கிவிட்டார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ளலாம். அதுமட்டுமன்றி சிங்கள சமூகங்களுடன் கலந்துவிட்ட கணிசமான தமிழர் சிங்களவர்களாகக் கூட பதிவு செய்யத் தொடங்கி விட்டார்கள் என்கிற புதுப் போக்கும் அலட்சியப்படுத்துவதற்கில்லை. தற்போதைய கொழும்பின் தமிழர் சனத்தொகை நான்கு லட்சத்தை எட்டலாம் என்று ஊகிக்கலாம்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்திற்கும் வெளியில் அதற்கடுத்ததாக தமிழர்கள் அதிகமாக வாழும் மாகாணம் மேல் மாகாணம். அதிலும் கொழும்பில் அதிக தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் அதிகமானோர் இந்திய வம்சாவழிப் பின்னணியையுடைய தமிழர்கள்.
கொழும்பைப் பொறுத்தளவில் பெருமளவு இந்திய வம்சாவழி மக்களும், வடக்கு கிழக்கு பகுதியிலிருந்து போருக்கு முன்னரும், போர் காலத்திலும் இடம்பெயர்ந்த தமிழர்களும், மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களுமாக பெருமளவு தமிழர்கள் வாழ்கிறார்கள். கொழும்பு பல்லின மக்கள் வாழ்ந்து வரும் மாவட்டம்.
தமிழ் முற்போக்கு கூட்டணி
வடக்கு, கிழக்கு பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலை முன்னெடுக்கிற பல தமிழ் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் உள்ள போதும். வடக்கு, கிழக்குக்கு வெளியில் உள்ள சகல தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஒரு அமைப்பு இதுவரை காலம் இருக்கவில்லை. கடந்த காலங்களில் இ.தொ.க அதில் சிறிய அளவு பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது என்ற போதும் மலையகத்தில் தொழிற்சங்க அரசியலை செய்து கொண்டே அதற்கு வெளியில் இன்னொரு அரசியலையும் முன்னெடுப்பதில் வெற்றியடையவில்லை. ஆனால் வடக்கு, கிழக்குக்கு வெளியில் அந்தந்த தளங்களில் அரசியலை மேற்கொண்டு வந்த சக்திகள் ஓரணி திரண்டு அப்படியான ஒரு தேவையை இனங்கண்டு அதனை ஒரு வேலைத்திட்டமாக முன்னெடுப்பதற்கான கூட்டணியை நிறுவின. அதன் விளைவே தமிழ் முற்போக்கு கூட்டணி. தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணியைத் தோற்றுவித்தன. பெரும்பாலும் இந்திய வம்சாவளி பின்னணியைக் கொண்டவர்களை இலக்காகக்கொண்ட கூட்டணியாக இருந்தும் “இந்திய” அல்லது “மலையகம்” போன்ற பதங்களைக் கட்சிப் பெயரில் இணைத்துக்கொள்ளாததன் காரணம் பரந்துபட்ட அனைவரையும் இணைக்கும் நோக்கில் தான்.
மனோ கணேசன்
கொழும்பு பிரதிநிதித்துவத்துக்கான தேவை குறித்த விழிப்புணர்வும் 2000 வரை இருக்கவில்லை. இப் பிரச்சினையைச் சரியாக இனங்கண்டு அதனை ஒரு அரசியல் வேலைத்திட்டமாக முன்னெடுக்க எவருமற்ற சூழலில் தான் மனோகணேசனின் பிரவேசம் நிகழ்ந்தது. அதுவரை தமிழர்களின் வாக்கு வங்கி மோசமாகச் சிதறியே இருந்தது. பெரும்பான்மை கட்சிகளே அவர்களுக்கு இருந்த தெரிவாக இருந்தது. இ.தொ.க இந்த நிலைமையை சற்று மாற்றியிருந்தது. கண்டியைச் சேர்ந்த மனோகணேசன் கொழும்பு சூழலுக்கு புதியவரல்லர். மேல் மாகாணத்துக்கான தமிழர் அரசியல் விவகாரத்தை ஒரு கருத்தாக்கமாக விளங்கிக்கொண்டு அதற்கான இயக்கமொன்றின் தேவை குறித்தும் மனோ கணேசனின் தரப்பு கருதியது.
இந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் தான் மேல்மாகாண மக்கள் முன்னணி தொடக்கப்பட்டது. பின்னர் அது மேலக மக்கள் முன்னணியாக மாறியது. அதுவே அதற்குப் பின்னர் ஜனநாயக மக்கள் முன்னணியாகி இப்போது தமிழ் முற்போக்கு கூட்டணியோடு ஐக்கியமாகியிருக்கிறது. ஈற்றில் அக்கூட்டணி ரணிலோடும், சஜித்தோடும் கூட்டு சேர்ந்ததில் எந்த மேல்மாகாண தமிழர்களுக்கான அரசியல் இயக்கமாக ஆரம்பித்தாரோ அது கலந்து கரைந்து காணாமல் போய்விட்டது என்று கூறினால் அது மிகையல்ல.
மனோ கணேசன் 2001 இல் 54,942 விருப்பு வாக்குகளைப் பெற்று முதற் தடவை பாராளுமன்றத்துக்கு பிரவேசித்தார். 2004ஆம் ஆண்டு தேர்தலிலும் 51,508களைப் பெற்று வெற்றிபெற்றார். அதே தேர்தலில் ஐ.தே.க சார்பில் தியாகராஜா மகேஸ்வரனும் கொழும்பில் போட்டியிட்டு வெற்றியடைந்திருந்தார்.
2010 தேர்தலில் மனோகணேசன் கொழும்பு மாவட்டத்தை விட்டு கண்டியில் போட்டியிட்டு 28,033 வாக்குகளை மட்டுமே பெற்று அங்கே தோல்வியடைந்தார். தேசியப்பட்டியலின் மூலம் ஐ.தே.க. பாராளுமன்றத்துக்கு அனுப்பும் என்கிற எதிர்பார்ப்பும் அப்போது கைகூடவில்லை. இந்த மூன்று தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான “ஐக்கிய தேசிய முன்னணி (UNF-United National Front)”யிலேயே அவர் போட்டியிட்டிருந்தார்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத இக்காலகட்டத்தில் 2011 இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் மனோ கணேசனின் தலைமையில் கட்டியெழுப்பப்பட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டு 28,433 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அதே கட்சியின் சார்பில் மீண்டும் 2014 ஆம் ஆண்டு நடந்த மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிபெற்ற போதும் 28,558 வாக்குகளை மட்டுமே அவரால் பெற முடிந்தது.
ஆனால் 2015ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராக கொழும்பில் போட்டியிட்டு சுமார் 69,064 வாக்குகள் பெற்று மீண்டும் பாராளுமன்ற ஆசனத்தைக் கைப்பற்றினார் மனோ கணேசன். இதுதான் இலங்கை வரலாற்றில் ஒரு தமிழ் வேட்பாளர் கொழும்பு மாவட்டத்தில் பெற்ற அதிகூடிய வாக்குகள். அதற்கான அரசியல் முனைப்பும், கட்சியின் திட்டமிட்ட பணிகளும் நிச்சயம் காரணமாக இருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணங்களில் ஒன்று புதிய நல்லாட்சிக் கூட்டணியின் உருவாக்கமும் தான். இன்றைய தேசிய மக்கள் சக்தி அலைக்கு சற்று நிகரான அலை போல மஹிந்த ராஜபக்ஷ குடும்ப ஆட்சிக்கு எதிராக எழுந்த அலையும் ந.ஐ.தே.மு.வின் வாக்குகளை அதிகரிக்கச் செய்திருந்ததையும் கணக்கில் எடுத்தல் அவசியம்.
அடுத்ததாக 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பாக போட்டியிட்டு 62,091 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற ஆசனத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
தற்போது நடந்துமுடிந்த 2024 தேர்தலில் வெறும் 19,013 வாக்குகளை மட்டுமே பெற்று கொழும்பு மாவட்டத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். பாராளுமன்றத் தேர்தலில் அவர் இதுவரை பெற்ற வாக்குகளிலேயே குறைந்த வாக்குகள் இதுவாகும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பதவி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு வழங்கக்கூடாது என்று பரவலான எதிர்ப்புகள் இருந்த நிலையில்; இறுதியில் அவருக்கு வழங்கப்பட்டு மீண்டும் பாராளுமன்றம் செல்கிறார்.
இப்போதுள்ள கேள்வி அவர் யாரால் கைவிடப்பட்டார் என்பது தான். ஏன், எதற்காக படுதோல்வியடைந்தார்.
அகலக் கால் வைப்பு, தன் சொந்த மக்களுடன் அவர் இல்லாதது, ஊடக, சமூக வலைத்தள சுய ஊதிப்பெருப்பிப்பில் காட்டிய அக்கறையை அவரால் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்துக்கான அடித்தளத்தைப் பலப்படுத்துவதில் கிஞ்சித்தும் காட்ட முடியவில்லை. நிவாரண அரசியலில் காட்டிய அக்கறை நிரந்தர அரசியலுக்கான கொள்கைவகுப்பை செய்வதிலோ, அதற்கான மக்கள் திரட்சியை ஏற்படுத்துவதற்கான மூலோபாய, தந்திரோபாய பணிகளின் மீதோ நிச்சயம் அவர் அக்கறை காட்டவில்லை. தனக்கடுத்த தலைமையை அவர் உருவாக்க விரும்பவில்லை என்கிற குற்றச்சாட்டுடன் அவரை விட்டு நீங்கியவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழ் முற்போக்கு முன்னணியில் மலையகத்துக்கான தனது பங்களிப்பைக் காட்டிய அளவுக்கு அதே முன்னணியின் தலைமையை கொழும்பு தமிழர்களின் அரசியல் எதிர்காலத்துக்காக ஒன்றிணைப்பதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
தமிழ் உறுப்பினர்கள்
கடந்த காலங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூட மேல் மாகாண தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசையைப் புரிந்துகொள்ளாத நிலையிலேயே அரசியலில் குதித்தது. இந்திய வம்சாவழிப் பின்னணியைக் கொண்டவர்களின் வாக்கு வங்கி உண்டு என்கிற ஒற்றைப் புரிதல் மட்டுமே அவர்களிடம் இருந்தது. கடந்த காலங்களில் கொழும்பில் தெரிவான அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐ.தே.க வின் தயவின்றி தெரிவானதில்லை என்பது கவனிக்கத்தக்கது. யானைச் சின்னத்துக்கும், பச்சை நிறத்துக்கும் வாக்களித்து பழக்கப்பட்டவர்கள் மலையக மக்கள் மாத்திரமல்ல. கொழும்பு வாழ் தமிழர்களும் தான். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் செல்லச்சாமி 1989 இல் ஒரு தமிழராக கொழும்பு மாவட்டத்தில் இ.தொ.க சார்பில் போட்டியிட்டுத் தெரிவானார். அதற்கு முந்திய 1977 தேர்தலில் கொழும்பு மத்தியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருந்தார். ஆனாலும் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் உரிமை, பிரதிநிதித்துவம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்திய முதல் அரசியல்வாதி அவர் தான். இந்த இடைவெளியில் இ.தொ.கா.விலிருந்து பிரிந்து இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் எனும் கட்சியைத் தொடங்கினார். 1994இல் சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதன் பின்னர் மீண்டும் இ.தொ.க வில் இணைந்து தேசியப் பட்டியலின் மூலம் 2000ஆம் ஆண்டு பாராளுமன்றம் சென்றார். ஆனால் 2001 தேர்தலில் தோற்றார். தொடர்ந்து 2004ஆம் ஆண்டு மீண்டும் தேசியப் பட்டியல் உறுப்பினராக தெரிவாகி 2010 வரை அங்கம் வகித்தார்.
1994 பொதுத் தேர்தலில் கொழும்பிலிருந்து ஒரு தமிழர் கூட தெரிவு செய்யப்படவில்லை. பின்னர் கிடைத்த இரு தமிழ் பிரதிநிதித்துவம் கூட புலிகளின் தயவில் கிடைத்தது என வேடிக்கையாகக் கூறுவது வழக்கம். ஏனெனில் 1994 பொதுத் தேர்தல் முடிந்ததும் ஓரிரு மாதங்களில் தொட்டலங்கயில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெடித்த குண்டைத் தொடர்ந்து கொழும்பு மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற பிரதிநிதிகளான ஒஸி அபேகுணசேகர மற்றும் வீரசிங்க மல்லிமாராச்சி ஆகியோரும் கொல்லப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து; தேர்தலில் அவர்களுக்கு அடுத்ததாக அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்த பி.பி.தேவராஜ் மற்றும் ஆர்.யோகராஜன் ஆகியோர் அதிர்ஷ்டம் கிட்டியிருந்தது. இல்லையென்றால் அதுவும் இருந்திருக்காது.
யோகராஜன் 2000 ஆம் ஆண்டு தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தோல்வியடைந்தார். ஆனால் தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகியிருந்த மாரிமுத்து இராஜினாமா செய்து கொண்டதால் யோகராஜனுக்கு அந்த இடம் கிடைத்தது. 2001 தேர்தலிலும் போட்டியிட்டு தோற்றுப்போனார். ஆனால் மீண்டும் அவர் தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் தெரிவானார். அதற்கடுத்த 2004 தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2010 ஆம் ஆண்டு மீண்டும் தேசியப் பட்டியலின் மூலம் பாராளுமன்றம் சென்றார். ஆனால் 2015இல் கொழும்பு மாவட்டத்தை விட்டுவிட்டு நுவரெலியாவில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்தார். யோகராஜன் இதுவரை எந்தவொரு பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறாத ஒருவராகவே இறுதிவரை இருந்திருக்கிறார்.
சேர் பொன் அருணாச்சலத்துக்கு துரோகம்
கொழும்பு மாவட்டத்திற்கான தமிழ் பிரதிநிதித்துவ தேவை இன்று நேற்றல்ல இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே உருவாகிவிட்டது. ஆரம்பத்தில் சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், அருணாசலம் மகாதேவா, எனத் தமிழர்கள் அன்றைய சட்டசபையில் படித்த இலங்கையரைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். அவர்கள் கொழும்பை மையப்படுத்தியே அரசியல் செய்தார்கள். சரவணமுத்து, நேசம் சரவணமுத்து ஆகியோரும் பிற்காலங்களில் கொழும்பில் பிரதிநிதித்துவம் வகித்தனர்.
வரலாற்றில் நேரடி தமிழ்த் தேசியக் கட்சியான தமிழரசுக் கட்சியின் தொடக்கம் கொழும்பு தான். இந்திய வம்சாவழியினரின் பழமையான தொழிற்சங்கங்கள் உருவானது இங்கிருந்து தான். கொழும்பு வாழ் தமிழர்களே இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முதலில் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தினார்கள் என்பது வரலாறு.
1918 இல் இலங்கை தேசிய காங்கிரசை (Ceylon National Congress) அமைப்பதற்காக சேர் பொன் அருணாச்சலத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இங்கு நினைவு கொள்வது அவசியம். சேர் பொன் அருணாச்சலம் இனவாரிப் பிரதிநிதித்துவத்தை அகற்றக் கூடாது என்றும் (கொழும்பை உள்ளடக்கிய) மேல் மாகாணத்துக்கென தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்த வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டில் அவ் ஒப்பந்தத்தை மீறியதுடன்
“இலங்கை சீர்திருத்தச் சங்கத்தின் தலைவராக இருந்த போது நான் கொடுத்த வாக்குறுதி இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவராக உள்ள என்னைக் கட்டுப்படுத்தாது” என்று ஜேம்ஸ் பீரிஸ் அறிவித்தார். இதுவே முதலாவது தமிழர் – சிங்கள ஒப்பந்த மீறலாக பதிவு செய்யப்படுகிறது. சிங்களத் தலைவர்களிடம் முதலில் நம்பிக்கை இழந்துபோன சந்தர்ப்பமும் அது தான்.
ஆகவே நூற்றாண்டுக்கு முன்னர் இருந்தே கொழும்புக்கான தமிழர் பிரதிநிதித்துவ கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது என்பதும், நூறாண்டுகளாக தீர்க்கப்படாத சிக்கலாக தொடர்ந்து வருவதும் நிதர்சனம்.
70களின் பின்
கொழும்பின் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யப் பேரினவாதத்தால் நடத்தப்பட்ட சதி அன்று மட்டுமல்ல அதற்குப் பின்னரும் பல தடவைகள் மேற் கொள்ளப்பட்டன. சோல்பரி அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் தேர்தல் தொகுதி கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி எனத் துண்டாடப்பட்டன. 1977க்கு முன்னர் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவம் அமுலிலிருந்த போது சிறுபான்மை இனத்தவர்கள் பாதிக்காது இருப்பதற்காகக் கொழும்பு மத்தியானது பின்னர் பல அங்கத்தவர் தொகுதியாக (மூன்று) (Multi member contituencies) மாற்றப்பட்டதாகக் கூறப்பட்ட போதும் அதனால் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. 1947 இலிருந்து ஒரு பிரதிநிதியும் கொழும்பு மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்டதில்லை.
1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல் திட்டத்தின் மூலம் முன்னைய தொகுதிவாரி பிரதிநிதித்துவமும், பல அங்கத்தவர் தொகுதி முறையும் நீக்கப்பட்டு விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் விகிதாசார முறைமை கூட இது விடயத்தில் தமிழர்களுக்கு தீர்வையளிக்கவில்லை.
இது வரை காலம் கொழும்பில் தமிழர்களது வாக்குகள் தமிழரல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு வந்திருப்பது தெரியாததொன்றல்ல. ஆனால் சிங்களவர்களின் வாக்குகள் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இல்லை, அல்லது விதிவிலக்குகளை கணக்கிலெடுக்கவில்லை. தமிழர்களின் பிரதிநிதிகளாகத் தமிழர்களால் சிங்களவர்களே தெரிவு செய்யப்பட்டு வந்திருக்கின்றனர்.
கொழும்பு வாழ் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் மத்திய வர்க்கத்தையும், கீழ் மத்திய தரவர்க்க உழைப்பாளர்களுமாவர். அரசியல் அனாதைகளாக ஆகியுள்ள நிலையில் அவர்களின் எதிர்காலம் தமது இன அடையாளத்தை இழந்து சிங்கள இனத்துடன் கரைந்து போகும் அவல நிலை தூரத்தில் இல்லை. அவர்களுக்கான எதிர்கால அரசியல் வேலைத்திட்டம், கொள்கை, நிகழ்ச்சிநிரல், மூலோபாயங்களை தமிழ் அரசியல் வாதிகள் தவறவிட்டுவிட்டார்கள். மனோ கணேசன் போன்றோர் ஒன்றில் தாம் இந்நிகழ்ச்சி நிரலுக்குத் தலைமை தாங்கவில்லை என்று அறிவித்து விலகிநின்று மற்றவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். அல்லது வேறு நிகழ்ச்சிநிரல்களில் அகலக் கால்வைக்காமல் இதன் பாரதூரமுணர்ந்து செயற்படவேண்டும்.
கொழும்பில் தமிழர்களை ஒன்றிணைக்கும் அரசியல் பணி தொடங்கிய வேகத்திலேயே முற்றுபெற்றது துயரகரமானது. ஆனால் மக்கள் மத்தியில் அந்த தேவை குறித்த போதிய விழிப்புணர்வு இன்னமும் போதியளவு ஏற்படுத்தப்படவில்லை. இலங்கையின் அரசியலில் இனத்துவ அரசியலும், பிரதேச அரசியலும் தவிர்க்க முடியாத அங்கமாக ஆக்கப்பட்டிருக்கிறது. வாக்காளர்களும், வேட்பாளர்களும் இந்த இன, பிரதேச அடிப்படையிலேயே வழிநடத்தப்பட்டு வருகிறார்கள். எனவே அரசியல் குரலுக்கான தேவையின் நிமித்தம் தமிழர்களையும் அந்த இன அடையாள அரசியலுக்குள் நிலைநிறுத்துவது தவிர்க்க இயலாததாகியுள்ளது. எனவே அந்த நுண்ணரசியலின் வழியிலேயே போய் சமகால தமக்கான அதிகார சமநிலையை வேண்ட வேண்டியிருக்கிறது.
என். சரவணன்