நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முதன் முதலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தேசிய அரசியலில் காலடியெடுத்து வைத்து மட்டக்களப்பிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள கந்தசாமி பிரபு தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி
கேள்வி : நீங்கள் அரசியலுக்குப் புதியவர் முதலில் உங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றைத் தாருங்கள்?
பதில் : நான் கந்தசாமி பிரபு. மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவன், ஆரம்ப கல்வியினை மட்டக்களப்பு மகாஜன கல்லூரியிலும் உயர்கல்வியினை மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியிலும் கற்று பின் கணக்கியலில் உயர் தேசிய டிப்ளோமாவை பூர்த்தி செய்து தற்போது வணிக நிர்வாக முதுநிலை கல்வியினை தொடர்கின்றேன்,
பட்டதாரி பயிலுனராக பிரதேச செயலகத்திலும் கொழும்பு சமூர்த்தி தலைமையகத்தில் முகாமையாளராகவும் பணியாற்றினேன். தனியார் நிறுவனங்களில் பெற்ற முகாமைத்துவ அனுபவத்துடன் கூட்டுறவு சங்கத்தில் கிழக்கு மாகாண உதவி கணக்காளராக கடமையாற்றினேன். மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக உள்ளேன்.
கேள்வி : உள்ளுராட்சி மன்றம், மாகாணசபையில்கூட நீங்கள் அங்கம் வகிக்காமல் தேசிய கட்சி ஒன்றினூடாக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் இது எவ்வாறு சாத்தியமானது?
பதில் : நான் வேட்பாளாராக போட்டியிட்டது இது முதல் தடவை அல்ல, மூன்றாவது தடவை. 2019 உள்ளூராட்சி மற்றும் 2020 பொது தேர்தல் என்பனவற்றில் போட்டியிட்டேன்.
மட்டக்களப்பை பொறுத்தவரை பெரும்பான்மை மக்களுக்கு நானும், எங்களது கட்சியும் புதியதாக இருந்தாலும் நாம் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல, எமது கட்சி தேசிய மக்கள் சக்தி, 2019 இல் இருந்து அரசியற் செயற்பாடுகளை முன்னெடுத்த நிலையில், கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக தலை நகரிலும் நமது மாவட்டத்திலும் பல எதிர்ப்பு ஆர்ப்பட்டங்களை முன்னெடுத்திருந்தோம். அது மட்டுமல்லாது மக்களின் மத்தியில் உண்மையாக நாட்டின் அரசியலில் தேவைப்படும் மாற்றம் குறித்தும் தொடர்ந்து தெளிவு படுத்திய வண்ணம் இருந்தோம்.
அனர்த்த காலங்களிலும் மக்களுக்கு உதவி தேவைப்பட்ட காலங்களிலும் நானும் எனது தோழமை குழாமும் எப்போதும் களத்தில் நிற்கத் தயங்கியதில்லை
கேள்வி : அரசாங்கத்தில் உங்களுக்கு ஏன் அமைச்சுப் பதவியையோ, பிரதியமைச்சுப் பதவியோ, வழங்கப்படவில்லை?
பதில் : எங்கள் கட்சி நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு பொறிமுறையின் கீழ் இயங்கும் கட்சி என்பது மக்கள் அறிந்தது, அமைச்சு, பிரதி அமைச்சு பதவிகள் அனைத்தும் கட்சியில் உள்ள நிர்வாகக்கட்டமைப்புக்கு உரிய தோழர்களினால் நன்கு ஆராயப்பட்டு வழங்கப்பட்டவை. நாங்கள் அனைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் பட்டறையில் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள், மக்கள் சார்ந்த அரசியல் கொள்கை கொண்டவர்கள். எங்களை பொறுத்தவரையில் பதவி தொடர்பாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எங்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகளை நாம் சரிவர நிறைவேற்றுவோம்.
இவ்வளவு காலமும் மக்கள் பார்த்து சலித்த,அதிகாரப்போட்டிக் கலாசாரம் எங்கள் மத்தியில் இல்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு மக்கள் பிரதிநிதியாக எமது மாவட்டத்தில் பல விடயங்களில் கவனம் செலுத்த போதிய கால அவகாசம் கிடைத்துள்ளதாகவே கருதுகின்றேன்.
கேள்வி : தற்போதைய நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 6 பாராளுமன்ற உறுப்பினர்களுள் நீங்கள் மாத்திரமே அரசாங்கத்தின் கட்சிக்காரராக உள்ளீர்கள். ஏனையவர்களைவிட மக்கள் உங்களிடம் அதிக எதிர்பார்ப்பை உங்களிடம் கொண்டுள்ளார்கள். எவ்வகையான திட்டங்களை மட்டக்களப்பில் மேற்கொள்ளவுள்ளீர்கள்?
பதில் : எமது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனமான “வளமான நாடு அழகான வாழ்க்கை” விஞ்ஞாபனத்தில் உள்ள அனைத்தும் எமது மாவட்டத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது. அவ்விஞ்ஞாபன உருவாக்கத்தில் பங்கு கொண்டிருந்த அனைத்து தோழமைகளும் இன்று பாராளுமன்ற பிரதிநிதிகளாக உள்ளோம் என்பதும் மக்கள் அறிந்த விடயம்.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, உள்ளூர் உற்பத்தி மேம்பாடு, முந்திரி, பனை மற்றும் தென்னைசார் பொருட்களின் பயன்பாடு மற்றும் அதுசார் அபிவிருத்தி, உள்ளூர் நீர்ப்பாசன மற்றும் விவசாய, மீனவ, கால்நடை துறைகளில் நவீன உள்ளீடுகள் மூலம் உற்பத்தி மற்றும் களஞ்சிய தேவைப்பாடுகளின் தரத்தை அதிகரித்தல்.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் (சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு), போதைப்பொருள் பூச்சிய பிரதேசம் என்ற கருப்பொருளில் போதைப்பாவனையற்ற இளைய சமுதாயமே எமது பிரதான நோக்கம்.
சட்டவாண்மையை உறுதிப்படுத்தல், திணைக்களங்கள் அடிமட்டத்தில் இருந்து உயர்மட்டம் வரை கையூட்டு அற்ற, மக்கள் மயப்படுத்த பட்ட துரித தீர்வுகளை எடுப்பதை உறுதி செய்தல்.
கேள்வி : மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவி உங்களுக்கு வழங்கப்படாததேன்?
பதில் : எங்கள் கட்சியிலும் ஆட்சியிலும் எவ்வாறு இனவாத, மதவாத செயற்பாடுகளுக்கு இடமில்லையோ அதே போன்று பிரதேசவாத செயற்பாடுகளுக்கும் இடமில்லை, மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் ஒரு அமைச்சர் அல்லது பிரதி அமைச்சருக்கு
வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை இரண்டும் இணைந்ததாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பொறுப்பானது தோழர் அருண் ஹேமச்சந்திரவுக்கு வழங்கப்பட்டது.
கேள்வி : மாகாணசபை நடைமுறைகுறித்து உங்களுடைய கட்சிக்குள்ளேயே இருவேறு கருத்துக்கள் உள்ளனவா?
பதில் : 37 வருடங்களுக்கு மேற்பட்ட மாகாண சபை முறைமையானது பழமை வாய்ந்தது, அதைவிட தற்காலத்திற்கு பொருத்தமான முறையொன்றே சாலச்சிறந்ததாக அமையும். அது தொடர்பாக வழி முறையொன்றை கட்டமைக்கவும் கலந்துரையாடவும் தயாராக உள்ளோம். மாகாணசபை உருவாக்கப்பட்டதன் நோக்கமே வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஒரு தீர்வாக அமையும் என்பதேதான். ஆனால் அது ஒரு முழுமையான தீர்வாக அமையவில்லை என்பதே நிதர்சனம். இருந்த போதும் நாங்கள் மாகாணசபை முறைமையை இல்லாதொழிக்கவோ. அல்லது நீக்கவோ முற்படவில்லை. மாறாக இதைவிட சிறந்த முறையொன்று கட்டமைக்கப்படவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
கேள்வி : மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வருடாந்தம் எதிர்கொள்ளும் வெள்ள அனர்த்தத்திற்கு ஈடுகொடுப்பது தொடர்பில் நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?
பதில் : கடந்த கால அனர்த்த முகாமைத்துவ அறிக்கைகளை மையமாகக் கொண்டு இனிவரும் காலங்களில் திடீர் அனர்த்தங்களின் போது முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்கவும், மக்களின் பாதிப்புகளை இயன்றவரை குறைக்கவும் திட்டங்கள் தற்காலிக தீர்வாக வகுக்கப்பட்டிருந்தாலும், பிரதேசத்தில் சரியான முறையில் நீர்ப்பாசன முகாமை நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், புதிய வடிகால் அமைப்புகளை நிறுவவும், காட்டுவெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்குரிய முகாமை செயற்பாடுகளை மேற்கொள்ளவும், சிறு குளங்களை விரிவாக்கவும் ஆற்றை ஆழப்படுத்துவதன் மூலம் தாழ்நிலத் தேக்கங்களைக் குறைக்கவும் முடியும், இம்முகாமை செயற்பாடுகள் நிலத்தடி நீர், விவசாயத்தை பாதிக்காவண்ணம் அமைவதை உறுதிப்படுத்துகின்றோம்.
கேள்வி : காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி தொடர்பிலும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும், நீங்கள் எவ்வகையான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவுள்ளீர்கள்?
பதில் : அரசியல் கைதிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சகல தீர்வுகளும் முன்வைக்கப்பட்டதான “வளமான நாடு அழகான வாழ்க்கை” கொள்கை தயாரிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த வாரம் ஜனாதிபதிக்கும் இலங்கை தமிழரசு கட்சி பிரதானிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் அவர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டது, அவ்வகையில் இவற்றுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
கேள்வி : புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்குரிய தீர்வு தொடர்பில் நீங்கள் எவ்வகையான முன்னெடுப்புக்களை மேற்கொள்வீர்கள்?
பதில் : நம் நாட்டில் இவ்வளவு காலமும் நடைமுறையில் இருந்த பிரித்தாளும் ஆட்சி முறையினாலேயே தமிழ் மக்களின் இனப்பிரச்சினை, அரசியல் சுயநலத்திற்காக தோற்றுவிக்கப்பட்டது. எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இனங்களுக்கு இடையான முரண்பாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை. இனப்பரம்பலை மாற்றும் எந்தவொரு செயற்பாடும் இனி இடம்பெறாது. இலங்கையர் என்ற வகையில் அனைவரும் சமமாகவே நடத்தப்படுவர்.
கேள்வி : அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ள அனர்த்தத்திற்குப் பின்னர் மாவட்டத்தில் அதிகளவான வீதிகள், சிறிய குளங்கள், வயல் நிலங்கள் என்பனவற்றுக்கு பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றைப் புனரமைப்பது தொடர்பில் நீங்கள் ஏதாவது முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்களா?
பதில் : பெருமபான்மையான இடங்களை நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடி சேதங்களை கேட்டு அறிந்தோம். மாவட்ட ரீதியாக அனைத்து சேதங்களும் அறிக்கையிடப்பட்டு அவை அனர்த்த முகாமைத்துவ நிலையமூடாகவும், மாவட்ட செயலகமூடாகவும், மாவட்ட அபிவிருத்தி குழு கூடத்தில் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.
பாதிப்படைந்த அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க வழி செய்ததோடு, சேதமடைந்த வீதிகள், சிறிய குளங்கள், வயல் நிலங்கள் போன்றவற்றை விரைவாக கட்டமைக்கவும் திருத்த வேலைகளை செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கேள்வி : மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் இன்னும் மத்திய கிழக்கு நாடுகளிலேயே கை ஏந்தவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. மாவட்டத்தில் புதிய தொழில் முயற்சியை மேற்கொள்ளும் திட்டம் ஏதும் உள்ளதா?
பதில் : காகித ஆலை உட்பட கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும், மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை உள்ளீர்ப்பதனூடாக உள்ளூர் உற்பத்தி பொருட்களை பெறுமதி சேர்ப்பதன் மூலம் ஏற்றுமதியை மையமாகக்கொண்ட ஒரு கட்டமைப்பை உருவாக்கி தொழிற்சந்தையை விரிவாக்க முடியும். மூன்றாம் நிலை தொழிற்கல்வியோடு ஆங்கில, இதரமொழி (கொரியா,ஜப்பான்) அறிவையும் புகுத்துவதன் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கானதும் இதர நாடுகளுக்கானதுமான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். பயிற்றப்பட்ட ஒரு தொழில் வல்லுனராக செல்லும்போது அதிக வேதனம் மற்றும் தொழில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும். உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான சட்டரீதியான அனுமதிகளை காலதாமதம் இன்றியும் போதுமான பயிற்சியுடனும் பெற்றுக்கொள்ள “one window solution’ ஒன்றை நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தல் போன்றவை அவற்றுள் அடங்கும்.