பத்து மாதம் கருதாங்கி
பகலிரவு சுமைதாங்கி
முத்தெனவே பெற்றெடுத்து
முறையாகத்தான் பேணி
ஊர் போற்றும் மகவாகப்
பேர்வாங்கி வாவென்று
உரிமையுடன் தாயாரும்
தலைதடவி வழியனுப்ப
எட்டுமணி நேர வேலை
இடுப்பொடியப் பாடுபட்டு
உழைத்ததெல்லாம் பிள்ளைக்கே
உருப்படியாய்
படிப்பதற்குத்
தானென்று
சட்டையென்றும் செருப்பென்று
தரமான சப்பாத்தென்
திட்டமுடன்
செலவுசெய்து
இயன்றவரை கற்பித்தார் தந்தையும்
கல்விப் பாதையிலே
கால் பதித்தாள் பிள்ளையும்
கற்றலில் முதன்மை பெற்று
வெற்றிகள் தனதாக
வீராப்பும் பெரிதாய்
அடைந்தாள்
நுட்பமாய்த்தான் கற்ற
கல்வியிலே உயர்தேர்ச்சி
கலாசாலைத் தேர்வு களங்கண்ட
வேளையிலே
கண்களை மறைத்ததே
விடங்கொண்ட பாறை
காதலெனும்
மாயக் குளம் கால்நனைக்க
அழைக்கையிலே
ஆழமென்று அறியாது
அறிவு மயங்கியே விழுந்தவள்
மீளமுடியாத சோக வலைக்குள்
மாட்டியபடியே
பாவம்
கானலை நீரென்ற கண்மூடித்தனமான
நேசிப்பின் தோற்றம்
வாழ்க்கையில் மாற்றம்
மணவறை கண்டாள்
நடைப்பிணம் ஆனாள்
இல்லறம் என்ற
இருட்டறையில் வாசம்
சோகம் தொடராகச் சோம்பினாள்
பெண்
அபலை
அவள்
வாழ்வுத்துயர்
ஆண்டாண்டு கடந்தாலும்
ஆறாத வடுவாக
அகத்தீயும்
அணையாது பிழம்பாக
நெருடல்கள்
தாங்கிய பெண்மையின் உணர்வுகள்
நீந்திடும்
இளமைக் கால ஆனந்த நினைவுகள்
அழகாய் நீர் பாய்ச்சி துளிர்க்கச் செய்ய
அவளும் நிழலாக
கொளுத்தும் வெயிலில் மரமாக…