நாளைய உலகின் ஆலிம்களாய்
நாங்களும் வந்திட வேண்டுமென்ற
நாட்பட்ட கனவுகளை
நனவாக்கிட கற்றோரே!
புதிரில்லா எதிர்காலத்தை
பூரிப்புடனே அமைத்திட
பதரில்லா மாணவர் நாமென
பாருக்கு பக்குவமாய் சொன்னோரே!
ஆன்மிகக் கல்வியதை
அகமகிழ்வாய் கையேற்று
மாண்புமிகு உலமாக்களாய்
மகுடமமைக்க முனைந்தோரே!
வெண்ணிற ஆடையதை
வெகு அபிமானமாய் அணிந்து
மனதையும் வெண்மையாக்கி
மத்ரஸாவில் ஓதியோரே!
ஆயிரமாயிரம் கனவுகள்
அகமெங்கும் குடியிருக்க
அனர்த்தத்தின் ஆக்கிரமிப்பு – உங்கள்
ஆயுளையும் பறித்து விட்டதே ஐயகோ!
வெள்ளத்தில் இழுக்கப்பட்ட
வேதனையான சேதி கேட்டு – பலர்
உள்ளத்தில் கண்ணீரும்
கரைபுரண்டோடியதே!
சின்னஞ்சிறு பராயத்தில் – உங்கள்
சிதைக்கப்பட்ட கனவுகளால்
சிந்திடும் கண்ணீரோடு பலரில்
சேர்ந்திருப்போம் நாங்களும்தான்!
அவ்வளவுதான் விதி என்று
ஆறுதலைக் கொண்டாலும்
எள்ளளவும் வேதனை
எமைவிட்டு அகலவில்லை!
மாவடிப்பள்ளி வெள்ளமும்
மாறாத வடுவைத் தந்தது
மார்கழிமாத வரலாறும்
மாளாத பெயரைப் பெற்றது!
சீதேவிகளே…!
காப்பாளன் அல்லாஹ்வின்
காருண்யம் கிடைக்கட்டும்
மீட்பாளன் அவன்தானே
மீயுயர் சொர்க்கம் தந்திடட்டும்!
குமுறுகின்ற இதயத்தோடு
குழுவாய் நாம் பிரார்த்திப்போம்
அமருகின்ற உங்கள் சுவனம்
அமர்க்களமாய் அமையட்டும்!