தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்ததையடுத்து, கடந்த 13 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட 2,300 மெற்றிக் தொன் அரிசியில் 90 வீதத்துக்கும் அதிகமான அரிசி அன்றைய தினமே விடுவிக்கப்பட்டதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார்.
2,300 மெற்றிக் தொன் அரிசியில் 1,600 மெற்றிக் தொன் புழுங்கல் அரிசியாகும்.
மேலும், 3,500 மெற்றிக் தொன் இறக்குமதி அரிசி இன்று 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்த அரிசியை ஏற்றி வந்துள்ள கப்பல்கள் ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் அரிசியின் விலை தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இதுவரை சுமார் 75 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு சந்தைக்கு வருவதால், அரிசியின் விலை குறைந்துள்ளதோடு, சில பகுதிகளில் நெல் விலையும் குறைவடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் 5,200 மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசியின் முதல் தொகுதி இம்மாதம்19ஆம் திகதி நாட்டை வந்தடையும் என தெரிவிக்கப்படுகிறது.