சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் மறுசீரமைப்பை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ X சமூக ஊடகத்தில் இதனை தெரிவித்துள்ள நிதியமைச்சின் செயலாளர், அண்மைக்கால வரலாற்றில் மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைவாக 98% இறையாண்மைப் பத்திரதாரர்கள் பத்திரப் பரிமாற்றத்துக்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதுள்ள இறையாண்மை பத்திரங்களை மாற்றும் வழி முறையில் இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பதற்கான உத்தியோகபூர்வ அழைப்பை நவம்பர் மாதம் 26ஆம் திகதியன்று இலங்கை அரசாங்கம் வெளியிட்டது. அப்போதைய நிலைமைக்கு அமைவாக பத்திரங்களின் மதிப்பு 12.55 பில்லியன் டொலராக இருந்ததால் அதற்கேற்ப பத்திரங்கள் மறுசீரமைக்கப்படவிருந்தன. தற்போது வெளியிடப்பட்டுள்ள இறையாண்மை பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு புதிய பத்திரங்களுடன் பத்திரங்களை மாற்றிக் கொள்வதற்கு 3 வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த கால அவகாசம் கடந்த வியாழக் கிழமையுடன் (12) முடிவடைந்ததாகவும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.