முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் 1.1 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஆகக் கூடுதலான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி ஆண்டுதோறும் 326 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்புக்காக செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக வரையறுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அவ்வப்போது நியமிக்கப்பட்ட குழுவால் மதிப்பாய்வு செய்யப்படுவதுடன் தேவைக்கேற்ப பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கை சரிசெய்யப்படும். மேலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக ஆயுதப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதையும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பொது பாதுகாப்பு பணிகளில் சுமார் 24,000 பொலிஸார் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்கபாட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு பிரிவுகளுக்கு முன்னர் 2,000 க்கும் மேற்பட்ட உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது நிலவும் ஆளணி பற்றாக்குறையை கவனத்திற்கொண்டு இவர்கள் பொது பாகாப்பு பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம்தெரிவித்துள்ளது.
மேலம், அமைச்சர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக எந்த பணியாளர்களும் ஒதுக்கப்படவில்லை எனவும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.