வங்கிகளில் 03 மில்லியன் ரூபாவுக்கு மேல் நிலையான வைப்பு உள்ளவர்களும் ‘அஸ்வெசும’ சமூக நலன் கொடுப்பனவுகளை பெறுவதாக தென் மாகாண காணி ஆணையாளர் சேனக்க பள்ளியகுருகே தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்திலுள்ள சில அஸ்வெசும பயனாளிகள் நிவாரணத் தொகை பெறும் வங்கியிலேயே நிலையான வைப்புக் கணக்குகளை வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
மாத்தறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தென் மாகாண காணி ஆணையாளர் சேனக்க பள்ளியகுருகே இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
வங்கி முகாமையாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கும் இது தொடர்பான தகவல்கள் தெரியுமெனவும் அதனால் இது தொடர்பான தகவல்களை பெற முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியிடம் வினவியபோது, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளதால், இவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டுமெனவும், அதற்காக அனைத்து பயனாளிகளின் தகவல்களையும் ஆய்வு செய்வோமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறை மாவட்டத்தில் சுமார் 53,000 அஸ்வெசும பயனாளிகள் இருப்பதாகவும், அந்த அனைத்து பயனாளிகளின் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் தொடர்பாக அறிக்கை பெறப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.