Home » ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்
பதவியேற்றதன் பின்னர் முதலாவது வெளிநாட்டு விஜயம்;

ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

மூன்று நாள் விஜயத்தில் இந்திய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயரதிகாரிகளுடன் இருநாட்டு பரஸ்பர நன்மை குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை

by Damith Pushpika
December 15, 2024 6:15 am 0 comment

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (15) இந்தியா செல்கின்றார். இந்த விஜயத்தின்போது, இரு நாடுகளுக்குமிடையே 03 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதுடன், அந்த ஒப்பந்தங்களினூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு கிடைக்கவுள்ளன. இந்த உடன்படிக்கைகளுக்கு மேலதிகமாக, இலங்கைக்கு இந்தியா வழங்கிய இரண்டு கடன்களை மானியமாக மாற்றுவதற்கும் இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஒப்பந்தங்களில் ஜனாதிபதியும் கையெழுத்திடவுள்ளார்.

வடக்கு ரயில் பாதையின் சமிக்ஞை கட்டமைப்புக்காக எடுக்கப்பட்ட கடன் தொகையும் கடன்களில் உள்ளடங்குவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், சம்பூர் பிரதேசத்தில் இந்தியாவினால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி திட்டத்துக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தோ-சிலோன் எண்ணெய் குழாய் திட்டம் மற்றும் தேசிய கால்நடை சபைக்கு சொந்தமான பண்ணைகள் அல்லது மில்கோ நிறுவனத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க அரசாங்கம் ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் இந்த திட்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன்பாடுகளை மேற்கொண்டிருந்தார். இதேவேளை, இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக டெல்லியில் நடைபெறும் வர்த்தக நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி அநுர கலந்து கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் புத்த கயாவுக்கும் செல்லவுள்ளார்.

ஜனாதிபதியுடன், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி அநுரவின் இந்திய விஜயம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் விடுத்துள்ள அறிவிப்பில், இலங்கை ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பொறுப்பேற்றதன் பின்னர் முதன் முறையாக இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார். அரசு முறைப் பயணமாக இன்று15 முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர், ஜனாதிபதி தௌரவுபதி முர்முவையும் சந்திக்கவுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இச் சந்திப்பின்போது, இருதரப்பு, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தவுள்ளனர். புதுடில்லியில் நடைபெறவுள்ள தொழிற்றுறை நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division