சிரியாவின் இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் 24 வருட ஆட்சி கடந்த ஞாயிறன்று (08.12.2024) வீழ்ச்சியடைந்தது. ஹயாத் அல் தஹரீர் ஷாம் (எச்.ரி.எஸ்) கிளர்ச்சிப் படையினர் அலெப்போ, கமா, கொம்ஸ், டமஸ்கஸ் நகர்களை மிக விரைவாகக் கைப்பற்றியதைத் தொடரந்து பஷர் நாட்டை விட்டுத் தப்பியோடினார்.
பஷரினதும் அவரது குடும்பத்தினரதும் 54 ஆண்டுகால ஆட்சியில் இருந்து சிரியாவை விடுவித்துவிட்டதாக இக்கிளர்ச்சிப் படையினர் அறிவித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட வீடியோவில், “மத்திய கிழக்கில் ஒரு வரலாற்று நாள். அஸாத்தின் கொடுங்கோல் ஆட்சி சரிந்தது. ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், பெரிய அளவிலான ஆபத்துகளும் உள்ளன. எங்களுடைய எல்லையைக் கடந்து சிரியாவில் உள்ள அனைவருக்கும் நாங்கள் அமைதிக்கரம் நீட்டுகிறோம். ட்ரூஜ், குர்த், கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் என இஸ்ரேலில் அமைதியாக வாழ விரும்பும் அனைவருக்கும் ஆதரவுக்கரம் நீட்டுகிறோம்” என்றுள்ளார்.
அதேநேரம் பஷரின் ஆட்சி வீழ்ச்சியடைந்ததாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரம் முதல் சிரியாவின் இராணுவ, பாதுகாப்பு நிலைகள் மற்றும் கட்டமைப்புக்கள் மீது இஸ்ரேல் கடும் விமானத் தாக்குதல்களை தொடங்கியது. அஸாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைய முன்னர் அவ்வப்போது சிரியாவின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், அஸாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் சிரியாவின் இராணுவக் கட்டமைப்பை முழுமையாக அழிப்பதை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இஸ்ரேலிய விமானப்படை வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இத்தாக்குல்களை இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஞாயிறு முதலான 48 மணி நேர காலப்பகுதியில் 480 இற்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் அறிவித்துள்ளனர். டமஸ்கஸ், கொம்ஸ், டட்டர்ஸ், லடாக்கியா, பல்மைரா ஆகிய நகர்களிலுள்ள நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சிரியாவின் அல் மஸ்ஸா, கமிசிலி, அல் கொம்ஸ் விமானத்தளங்கள், லடாக்கியா துறைமுகம், உள்ளிட்ட துறைமுகங்கள், இராணுவ தளங்கள், வான் பாதுகாப்பு கட்டமைப்புக்கள், உளவுத்துறை தலைமையகங்கள், நீண்ட மற்றும் குறுகிய தூர ஏவுகணை களஞ்சியசாலைகள், ஆயுதக் களஞ்சியசாலைகள், ஆயுத உற்பத்தி கூடங்கள் என சிரியாவின் இராணுவ ஆற்றல்களை அழிப்பதை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களின் ஊடாக சிரியாவின் 80 சதவீத இராணுவ திறன்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் மதிப்பிட்டுள்ளது.
இத்தாக்குதல்களின் விளைவாக சிரியாவின் யுத்த விமானங்கள், யுத்த கப்பல்கள், ஹெலிக்கொப்டர்கள் அடங்கலாக இராணுவ கட்டமைப்புக்கள் சேதப்படுத்தப்பட்டும் அழிக்கப்பட்டும் உள்ளன. குறிப்பாக இத்தாக்குதல்கள் மூலம் சிரியாவின் 15 யுத்தக் கப்பல்களும் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
சிரியாவில் உள்ள இரசாயன ஆயுதங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களிடம் கிடைத்தால் அது இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக அமைய முடியும். அத்தகைய நிலை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலேயே இத்தாக்குல்களை இஸ்ரேல் மேற்கொண்டிருக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் மூலம் சிரியாவின் இராணுவ ஆயுதங்களையும் தளவாடங்களையும் கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்று இஸ்ரேலிய தரப்பினர் எதிர்பார்த்துள்ளனர்.
இதேவேளை சிரிய மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ‘இஸ்ரேல், சிரியாவின் மிக முக்கியமான இராணுவ தளங்களை அழித்துவிட்டது, இதில் சிரிய விமான நிலையங்கள், அவற்றின் களஞ்சியசாலைகள், விமானப் படைகள், ரடார்கள், இராணுவ சமிக்ஞை நிலையங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து களஞ்சியசாலைகள், ஆய்வுகூடங்கள் ஆகியவை அடங்கும். குறிப்பாக பார்சா அறிவியல் ஆய்வு மையம் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை இவ்வாறிருக்க, இஸ்ரேல் – சிரிய எல்லையில் கோலான் குன்று பகுதியுள்ள யுத்த சூனியப் பகுதியையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
1973 இல் இடம்பெற்ற அரபு – இஸ்ரேல் போரின் போது இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த அனைத்து பகுதிகளிலிருந்தும், குறிப்பாக குனிட்ரா மற்றும் பிற இடங்களை உள்ளடக்கிய சுமார் 25 சதுர கிலோமீற்றர் பரப்பில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ரஷ்யா பிரதிநிதிகள் முன்னிலையில் 1974 மே 31 ஆம் திகதி இஸ்ரேலும் சிரியாவும் கையெழுத்திட்டது. இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையில் முறுகல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த ஒப்பந்தம், ஐக்கிய நாடுகளின் விலகல் கண்காணிப்புப் படையால் (the United Nations Disengagement Observer Force – UNDOF) கண்காணிக்கப்பட்டு வருகிறது.
75 கிலோ மீற்றர் நீளத்தையும் சுமார் 10 கிலோ மீற்றர் முதல் தெற்கில் 200 மீற்றர் வரை அகலத்தையும் கொண்டுள்ள இந்த யுத்த சூனியப் பிரதேசத்தில் 1974 முதல் ஐ.நா. படையினர் 1,309 பேர் ரோந்து நடவடிக்கையுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த யுத்த சூனியப் பகுதிக்குள் சிரியாவின் பல கிராமங்கள் உள்ளன. இவ்வாறான நிலையில் அஸாத்தின் ஆட்சி வீழ்ந்ததோடு 50 வருடங்களாக நடைமுறையில் இருக்கும், அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாகக் குறிப்பிட்ட இஸ்ரேல், குறித்த யுத்த சூனியப் பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. அத்தோடு ஹெர்மோன் மலையின் சிரியப் பகுதி உட்பட கைவிடப்பட்ட சிரிய இராணுவ பகுதியையும் அது கைப்பற்றியுள்ளது.
இஸ்ரேலின் இந்நடவடிக்கையை துருக்கி, ஜோர்தான், கட்டார், சவுதி போன்ற நாடுகள் கண்டித்துள்ளதோடு, சர்வதேச சட்டங்களை மதித்து நடக்குமாறும் வலியுறுத்தியுள்ளன. குறிப்பாக கோலான் குன்று பகுதிக்கும் சிரியாவுக்கும் இடைப்பட்ட சூனியப் பகுதியில் இருந்து ஆக்கிரமிப்பைக் கைவிட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பிரான்ஸ், சிரியாவின் இறைமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதித்து செயற்படுமாறும் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலின் இத்தாக்குதல்கள் குறித்து சிரியாவின் கிளர்ச்சிப் படையினரான ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் ஆட்சேபனைகளையோ எதிர்ப்பையோ வெளிப்படுத்தவில்லை. இது பல மட்டங்களிலும் பேசுபொருளாகியுள்ளது. கிளர்ச்சிக் குழுவினர் அமைதி காப்பதன் நோக்கம் புரியாமலுள்ளது. கிளர்ச்சிக் குழுவினர் கடந்த மாதம் (நவம்பர்) 27 ஆம் திகதி அலெப்போவை கைப்பற்றியதோடு ஆரம்பமான அஸாத்தை வெளியேற்றும் போராட்டம் 11 ஆவது நாளில் டமஸ்கஸ்ஸை விட்டு பஷர் அல் அஸாத் தப்பியோடியதோடு அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்த மறுநாள்தான் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு எதிரான போராட்டத்தை கிளர்ச்சிப்படையினர் தீவிரப்படுத்தினர்.
சிரிய கிளர்ச்சிக் குழுக்கள் ஆரம்பித்த போராட்டத்தின் விளைவாக காசா உள்ளிட்ட பலஸ்தீன் மீதான உலகின் கவனம் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் காசா உள்ளிட்ட பலஸ்தீன விவகாரத்திற்கு தீர்வு காணும் முயற்சிகளும் தாமதமடையக் கூடிய அச்சுறுத்தலும் தோன்றியுள்ளது.
இத்தகைய சூழலில் சிரியாவின் இராணுவ ஆற்றலை தாக்கியழிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்திருக்கிறது. இது உலகின் கவனத்தை ஈர்த்த விடயமாகியுள்ளது.
மர்லின் மரிக்கார்