எமது நாட்டு மக்கள் உண்ணும் சோற்றில் வருடத்திற்கு ஒருமுறை மண்ணைப் போடும் அரிசி மாபியா செயல்படுவது இரகசியமான ஒன்றல்ல. பிரச்சினையாக இருப்பது இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை வழங்க அதிகாரத்தில் இருந்த எந்த அரசாங்கத்தாலும் இதுவரை முடியாமல் போயிருப்பதேயாகும்.
இந்நாட்டில் உள்ள பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் செயற்கையாக விலையை உயர்த்தியமையே இதற்கு முக்கிய காரணம் என்பது பல விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில், அரிசியின் விலை அதிகரித்த போது, சில வாரங்களுக்கு முன்னர் இந்நாட்டின் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களாகக் கருதப்படும் டட்லி சிறிசேன, நிபுன கம்லத், மித்ரபால லங்கேஸ்வர, ஜெயசிறி குணதிலக்க, மேனக கம்லத் உள்ளிட்ட வர்த்தகர்கள், மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்போது கண்டிப்பாகக் கட்டுப்பாட்டு விலைக்கே அரிசியை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. பெரிய அளவிலான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அதற்கு சம்மதித்தாலும், அரிசியை சந்தைக்கு விடும்போது நிலைமை மாறியது.சில்லறை விற்பனையாளர்கள் பெரிய அளவிலான ஆலைகள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் அரிசியைப் பெறுகின்றனர். சில சமயம் ரஜரட்டவில் இருந்து கொண்டு வரப்படும் அரிசி வேறொருவர் மூலமாக கிடைப்பதற்கு இடமுள்ளது.
இந்நிலைமையின் அடிப்படையில் இடைத்தரகர்கள் மத்தியில் அரிசி விற்பனையின் விலை அதிகரிப்புச் செய்யப்படுவதற்கும் இடமுள்ளது.
கடந்த நாட்களில் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி சந்தையில் போதுமானளவில் இருந்த போதும் நாடு மற்றும் பச்சை அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறியது, கடந்த ஆண்டு ஒரு கிலோ கீரி சம்பா அரிசியின் 400 ரூபாவுக்கு மேல் அதிகரித்ததன் காரணமாக கடந்த சிறுபோகத்தில் விவசாயிகள் அதிகளவில் கீரி சம்பா செய்கையில் ஈடுபட்டார்கள் என்பதாகும். நாட்டரிசி நெல் குறைந்தளவிலேயே செய்கை பண்ணப்பட்டதால் நாட்டினுள் நாட்டரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் அரிசி மொத்த வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்தியாவிலிருந்து 70 ஆயிரம் மெட்ரிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்யத் தீர்மானித்ததாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
இறக்குமதிக்கான வரித் திருத்தம்
இதற்கமைய, அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை திருத்தியமைத்து, அரிசியை இறக்குமதி செய்வதற்கு டிசம்பர் 20ஆம் திகதி வரை அனுமதி வழங்கி அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டது.
சதொச மற்றும் இலங்கை அரசாங்க வர்த்தக (இதர) கூட்டுத்தாபனத்தின் ஊடாக இலங்கைக்கு நாட்டரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தது. சில்லறை விற்பனைக் கடைகளில் நுகர்வோர் அதிகார சபை சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு அபராதம் விதித்தாலும், பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முறை அவர்களிடம் இல்லை. இருந்தபோதிலும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஒரு கிலோ நாட்டரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகவும், சில்லறை விலை 230 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன், ஒரு கிலோ வெள்ளைப் பச்சை அரிசியின் மொத்த விலை 215 ரூபாவாகவும் சில்லறை விலை 220 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
அதேபோன்று, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டரிசியின் சில்லறை விலை 220 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பாவின் மொத்த விலை 235 ரூபாவாகவும், சில்லறை விலை 240 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. கீரி சம்பா ஒரு கிலோ மொத்த விற்பனை விலை ரூ.255 ஆகவும், சில்லறை விலை ரூ.260 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
என்றாலும் இந்த நிலவரப்படி கடந்த டிசம்பர் 09ஆம் திகதி வரைக்கும் பெரிய அரிசி ஆலைகளில் இருந்து அரிசி விநியோகிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கு தீர்வாக, அவ்வரிசி ஆலைகளுக்கு தலா இரண்டு அதிகாரிகள் வீதம் நியமிக்க அரசு முடிவு செய்தது.
அரிசி பிரச்சினை ஏன் இவ்வாறு நீண்டு செல்கிறது? நாமும் எப்போதும் ஊடகங்கள் மூலம் இதைப் பற்றி பேசி வருகின்றோம். எனினும் இதற்குத் தற்காலிக தீர்வுகள்தான் கிடைத்தனவே அன்றி நிரந்தர தீர்வுகள் எதுவும் கிடைப்பதில்லை.
இதனிடையே அவற்றுள் அரிசி தொடர்பான உண்மையான தரவுகளைப் பெறுவதற்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பணிப்புரை பாராட்டப்பட வேண்டியதாகும். அறுவடை செய்யப்பட்ட நெல் அல்லது உற்பத்தி செய்யப்பட்ட அரிசிக்கு என்ன ஆனது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
குறிப்பாக இந்நாட்டில் பாரம்பரிய நெல் மிகக் குறைந்த அளவே செய்கை பண்ணப்படுகின்றது. இது சதவீத அடிப்படையில் 0.5% க்கும் குறைவாக உள்ளது. இதில் சுவந்தெல், கலு ஹினெட்டி, பொக்காலி, சுது ஹினெட்டி, பச்சைப்பெருமாள், மடதவாலு, சீரக சம்பா, ஹேரத் பண்டா, பெஹெத் ஹீனெட்டி, குருளு துட மற்றும் சத்தல் போன்ற வகைகள் அந்த வகையினுள் உள்ளன.
சாதாரண மேம்படுத்தப்பட்ட அரிசி வகைகளில் 0.8% க்கும் குறைவாகவே பயிரிடப்படுகிறது. 98% க்கும் அதிகமான விவசாயிகள் பத்தலேகொட அரிசி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட நெல் வகைகளை பயிரிடுகின்றனர்.
இதன் ஊடாக இந்நாட்டில் அதிக நெல் விளைச்சலைப் பெறும் மாவட்டங்களாக இருப்பது அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, குருநாகல் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களாகும். அத்துடன் மஹாவலி உடவளவ வலயம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்தும் குறிப்பிடத்தக்க விளைச்சல் உள்ளது.
அரிசியின் விலையைக் கட்டுப்படுத்தவும், மறைத்து வைக்கப்பட்டுள்ள அரிசியை வெளிக்கொணரவும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியதுடன், கடந்த அரசாங்கத்தின் போது இவ்வாறான முறைகேடுகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் நினைவுகூர வேண்டும். அது அந்த முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்காக அன்றி, அவ்வாறு எவ்வாறான நடைமுறைகளையாவது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகும்.
இந்தச் சிறப்புத் திட்டத்திற்கு ‘சக்தி’ அரிசி என்று பெயரிடப்பட்டது. இது இந்நாட்டில் உள்ள பாரிய அரிசி ஆலைகளின் உரிமையாளர்களால் நடத்தப்படும் அரிசிச் சந்தையின் ஏகபோகத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது.
மூடப்படும் அபாயத்திற்கு முகங்கொடுத்திருந்த 200க்கும் மேற்பட்ட சிறு ஆலைகள் இதன்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
இவ்வேலைத்திட்டம் பொலன்னறுவை, அனுராதபுரம், புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை, கண்டி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய 08 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இதற்காக அரசாங்கம் 1000 மில்லியன் ரூபாவை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்திருந்தது. இது மிகவும் வெற்றிகரமான திட்டமாக இருந்ததால், பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களால் ஏகபோகத்தை பராமரிக்க முடியவில்லை.
பெரிய நெல் ஆலை உரிமையாளர்களிடமிருந்த அரிசி கையிருப்பு மற்றும் அதிக விலைக்கு அரிசி விற்கும் வியாபாரிகளைத் தேடி நுகர்வோர் அதிகார சபை தொடர்ச்சியான சோதனைகளை நடத்தி வருவதாக தெரிகிறது. எவ்வாறாயினும், நெல் சந்தைப்படுத்தல் சபை மீண்டும் நெல் மற்றும் அரிசி களஞ்சியசாலைகளை அமைத்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
இந்நாட்டுக்கு 100 மெட்ரிக் தொன் வெள்ளைப் பச்சை அரிசி
அண்மையில் எம்பிலிப்பிட்டிய பரவகும்புக பிரதேசத்தில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வர்த்தகர் ஒருவர் ஊடகங்களுக்கு உண்மைகளை வெளியிட்டு தான் ஒரு கிலோ சிவப்பு பச்சை அரிசியை 207 ரூபாவிற்கு வழங்கியதாக தெரிவித்தார். ஆனால் சந்தையில் அவை 240 ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி, இடைத்தரகர்களும் சில சில்லறை வியாபாரிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதைக் காண்கிறோம்.
இதற்கு ஸ்திரமான முறைமை தேவை என மரதகஹமுல அரிசி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அரிசியை இறக்குமதி செய்வது ஒருபோதும் தீர்வாகாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்த நெருக்கடிக்கு அரிசி இறக்குமதி ஒரு தற்காலிக நடவடிக்கையே என்றுதான் அரசாங்கமும் கூறுகிறது.
இதேவேளை, இறக்குமதியாளர் ஒருவரினால் கொண்டுவரப்பட்ட 100 மெற்றிக் தொன் வெள்ளைப் பச்சை அரிசியுடனான கப்பல் ஒன்று கடந்த 11ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அதேபோன்று லங்கா சதொசவும் 5200 மெற்றிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
அரசின் கட்டுப்பாட்டு விலையாக இருப்பது பச்சை அரிசி 210 ரூபாயும், நாடு 220 ரூபாயும், சம்பா 230 ரூபாயுமாகும். இந்த கட்டுப்பாட்டு விலையில் அரிசியை வழங்க வேண்டுமாயின், பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்கள், அதற்கேற்ப குறைந்த விலையில் மொத்த வியாபாரிகளுக்கு அரிசியை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இல்லையென்றால் அரசு தலையிட வேண்டும். நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் அரிசி விற்பனை நிலையங்களில் சோதனை நடத்துவதை விட, சில்லறை வியாபாரிகளுக்கு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யும் வகையில் பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை வழங்குகிறார்களா என்பதை தொடர்ச்சியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதற்கு சரியான தீர்வு கிடைக்காதவரை அரிசி நெருக்கடிக்கு தீர்வு காண்பது கடினம்.
தினந்தோறும் நுகர்வோர் அதிகார சபையினால் இந்தச் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்றாலும், சுற்றிவளைப்புக்களால் மாத்திரம் இந்தப் பிரச்சினையை ஒருபோது தீர்க்க முடியாது.
எம். எஸ். முஸப்பிர்