ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இந்தியா செல்கின்றார். ஜனாதிபதி தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று இன்று புதுடில்லி செல்கின்றது.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அநுர குமார திசாநாயக்க மேற்கொள்கின்ற முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணமாக அவர் இந்தியா செல்கின்றாரென்பது இங்கு கவனம் பெறுகின்றது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவுகள் வரலாற்று ரீதியானவை. இலங்கையின் வரலாற்று மூலாதாரங்களின்படி இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்தவை. மதம், கலை கலாசாரங்கள், நாகரிகம் என்றெல்லாம் பல்வேறு அம்சங்கள் இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்றுக் கொண்டவையாகும்.
இலங்கை மற்றும் இந்திய பண்டைய மன்னர்களுக்கிடையில் நிலவிய நெருங்கிய நட்புறவுகள், மன்னர்களின் குடும்பங்களுக்கிடையிலான திருமண சம்பந்தங்கள் குறித்தெல்லாம் எமது வரலாற்று மூலாதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருநாடுகளும் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றுக் கொண்ட பின்னரும் கூட நட்புறவுகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன. இலங்கைக்கு நெருக்கடி ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் பிரதிபலன் எதிர்பாராது ஓடோடி வந்து தோள் கொடுக்கின்ற நாடு இந்தியா ஆகும்.
கொவிட் பெருந்தொற்று வேளையிலும், இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சகட்டத்தை அடைந்த போதிலும் இந்திய தேசம் ஓடோடி வந்து தோள் கொடுத்ததை மறந்துவிட முடியாது. இந்தியாவின் மத்தியில் ஆட்சிகள் மாறி மாறி வந்த போதிலும், ‘அயல்நாட்டுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையில் இருந்து இந்தியா ஒருபோதுமே பின்வாங்கியதில்லை.
அதேசமயம் 1983 இலும், அதனைத் தொடர்ந்தும் இலங்கையில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் தலைதூக்கிய வேளையிலும் இந்தியா அக்கறை செலுத்தியது. இலங்கையின் வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்களை அரவணைத்து அடைக்கலம் கொடுத்த நாடு இந்தியா ஆகும்.
இலங்கையில் பிரிவினையை இந்தியா ஆதரிக்கவில்லை. இலங்கையில் பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களும் சமஉரிமைகளுடன் வாழ வேண்டுமென்பதே இந்தியாவின் மாறாத நிலைப்பாடு ஆகும். இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட போது, அது பிரிவினையை குறிப்பிடவில்லை. மாகாணசபை முறைமையையே வலியுறுத்தியது.
வரலாற்று நிகழ்வுகள் இவ்வாறிருக்கையில், தென்னிலங்கையில் இந்தியா தொடர்பாக மாறுபட்ட நிலைப்பாடே நீடித்து வருகின்றது. தென்னிலங்கை சமூகம் இந்தியாவின் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொள்ளவில்லையென்ற கருத்துகளும் இந்திய மக்கள் மத்தியில் இல்லாமலில்லை.
இவ்வாறானதொரு நிலையிலேயே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நட்புறவு அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதுடில்லிக்கு இன்று விஜயம் மேற்கொள்கின்றார்.
அநுர குமார திசாநாயக்க இந்தியப் பிரதமர் உட்பட முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருக்கின்றார்.
இந்திய தேசமானது இலங்கைத் தமிழர்கள் மீது மாத்திரம் அக்கறை கொண்டதல்ல. ஒட்டுமொத்த இலங்கைத் தேசத்தின் நலன் மீதும் இந்தியாவுக்கு கரிசனை உள்ளதென்பதை ஜனாதிபதி அநுர குமாரவின் புதுடில்லி விஜயத்தில் தென்னிலங்கை பெரும்பான்மை சமூகம் புரிந்து கொள்ள வேண்டுமென்பதே முக்கியமானதாகும்.