வீசா செயலாக்கம் மற்றும் கென்சியூலர் சேவையின் முன்னோடியாகவும், உலகில் உள்ள நவீன தொழில்நுட்பத்துடன் சர்வதேச நாடுகள் மற்றும் குடிமக்களுக்கு சேவையை வழங்குவதில் நம்பிக்கை பெற்ற நிறுவனமாகவும் திகழும் BLS இன்டர்நஷனல் நிறுவனம் இலங்கையில் ஸ்பெயின் வீசா நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக இன்று அறிவித்தது. இலங்கையிலுள்ளவர்களுக்கு உயர்ந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதிலும், வீசா வழங்கும் நடவடிக்கையை மேலும் இலகு படுத்துவதிலும் BLS இன்டர்நஷனல் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.
ஸ்பெயின் வீசா விண்ணப்பத்திற்கான கேள்வி அதிகரித்திருக்கும் நிலையில் இதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் புதிய ஸ்பெயின் வீசா மையம் கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் முழுமையான தேவைகளைப் பூர்த்திசெய்வது இந்த மையத்தினால் முன்னெடுக்கப்படும்.
BLS இன்டர்நஷனல் நிறுவனத்தின் பிரசன்னத்தை இலங்கைக்குள் உறுதிப்படுத்துவதன் மூலம் புதிய நிலையம் இலங்கையர்களுக்கு மாத்திரமன்றி மாலைதீவு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இன்டர்நஷனல் நிறுவனத்தின் இணை முகாமைத்துவப் பணிப்பாளர் ஷிக்கர் அகர்வால் குறிப்பிடுகையில், “இலங்கையில் ஸ்பெயின் நாட்டுக்கான வீசா நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதானது உலகளாவிய ரீதியில் BLS இன்டர்நஷனல் நிறுவனத்தை விரிவாக்குவதன் குறிப்பிடத்தக்க வெற்றியைக் குறிக்கின்றது. சேவைச் சிறப்பு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனமாக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விசா வழங்கும் வசதிகளை தொடர்ந்து மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.