இலங்கையில் பெண்கள் சுகாதாரம் தொடர்பில் முன்னிலை வகித்து வருகின்ற நாமமான Eva, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து, நாடளாவிய ரீதியில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளது. 2025ம் ஆண்டில் நாட்டிலுள்ள பாடசாலைகளை எட்டும் நோக்குடன், மாதவிடாய் குறித்த தப்பான அபிப்பிராயங்களுக்கு தீர்வு காணும் அதேவேளையில், இது குறித்த முக்கியமான அறிவை மாணவியர் மத்தியில் பரப்புகின்றது. மாற்றத்திற்கு வித்திடும் இந்த முயற்சியின் ஆரம்ப நிகழ்வானது டிசம்பர் 9 அன்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் இடம்பெற்றதுடன், அறிவூட்டல், புரிந்துணர்வு மற்றும் அரவணைப்பு உள்ளடக்கம் ஆகியவற்றை நோக்கிய நாடளாவிய பிரச்சாரத்திற்கு களம் அமைத்துள்ளது.
Eva-இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து முன்னெடுக்கின்ற மாதவிடாய் குறித்த சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வுத் திட்டமானது கல்வியமைச்சின் ஆதரவுடன் நடத்தப்படுவதுடன், மாதவிடாய் குறித்து சமூகத்திலுள்ள அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒன்றுபட்ட முயற்சியாகக் காணப்படுகின்றது. மாதவிடாய் என்பது வெட்கப்பட வேண்டிய ஒரு விடயமாக அன்றி, சுகாதாரம் மற்றும் உயிர்ச்சக்தியின் அடையாளமாகப் போற்றப்பட வேண்டிய ஒன்று என்ற கலாசாரத்தை வளர்ப்பதே இம்முயற்சியின் நோக்கமாக உள்ளது. பயன்மிக்க செயலமர்வுகள், இடைத்தொடர்பாடல் கொண்ட கலந்துரையாடல்கள் மற்றும் நம்பத்தகுந்த தகவல் விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறை ஆகியவற்றின் மூலமாக மாணவியருடன் செயற்பாடுகளைப் பேணி, தன்னம்பிக்கையுடனும், கண்ணியத்துடனும் மாதவிடாயை நோக்கும் வலுவை அவர்களுக்கு ஊட்டி, இது குறித்த புரிந்துணர்வு மற்றும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட புதிய தலைமுறையொன்றைத் தோற்றுவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.