இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த வருமானத்தை கொண்டு வரும் “அவியானா” ஏழு நட்சத்திர ஹோட்டல் அடுத்த வருடம் திறக்கப்படும் என அவியானா ஹோட்டல் குழுமத்தின் தலைவர் கலாநிதி திசர ஹேவாவசம் தெரிவித்தார்.
இலங்கையின் முதலாவது ஏழு நட்சத்திர ஹோட்டலான அவியானா ஹோட்டல் அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு கடந்த ஐந்தாம் திகதி கொழும்பில் இடம்பெற்றது.
வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இலங்கைக்கு கொண்டு வருவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
கண்டி தெல்தெனிய உடிஸ்பத்துவ பிரதேசத்தில் இருபத்தேழு ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய சூழலில் இந்த ஹோட்டல் வளாகம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இதுவரை 70 சதவீதமான நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இது இலங்கையின் முதலாவது ஏழு நட்சத்திர ஹோட்டலாகும்.
இலங்கையின் அபிவிருத்திக்கு இவ்வாறான செயற்றிட்டங்கள் பாரிய உறுதுணையாக அமைந்துள்ளதாக இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவியானா ஹோட்டல் குழுமத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி திசர ஹேவாவசம் தெரிவித்தார்.
தற்போது மொத்த உள்நாட்டு வருமானத்தில் 5 வீதம் மட்டுமே சுற்றுலாத் துறையிலிருந்து பெறப்படுகிறது. சில நாடுகளில் எம்மைப் போன்ற வசதிகள் இல்லை என்றாலும் அந்நாடுகள் எம்மைப் போன்ற இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமான வருமானத்தைப் பெறுகின்றன.
இதன் காரணமாக இலங்கையில் இவ்வாறான திட்டங்களை உருவாக்குவது உலகெங்கிலும் உள்ள பணக்கார சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க உதவும் என கலாநிதி திசர ஹேவாவசம் சுட்டிக்காட்டினார்.
சுமார் இருநூறு இலங்கை வர்த்தகர்கள் இந்த ஹோட்டலில் முதலீடு செய்துள்ளதாகவும், இன்னும் சிறியளவிலான இலங்கை தொழில் முயற்சியாளர்களுக்கு எமது நாட்டின் முதலாவது 7 நட்சத்திர ஹோட்டலில் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் திசர ஹேவாவசம் தெரிவித்தார்.
உலகில் தற்போது ஏழு நட்சத்திர ஹோட்டல்கள் ஏழு உள்ள நிலையில் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அவியானா ஹோட்டல் குழுமம் உலகின் 8 வது ஏழு நட்சத்திர ஹோட்டல் என்ற வரலாற்றை ஏற்படுத்தும்.
இத்திட்டம் தொடர்பில் இதன் போது உரையாற்றிய கலாநிதி திசர ஹேவாவசம் மேலும் கூறியதாவது,
அவியானா திட்டத்திற்காக முக்கியஸ்தர்கள் இங்கு வந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
உலகில் உள்ள 8 பில்லியன் மக்களில், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பில்லியன் மக்கள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார்கள். பல்வேறு நாடுகளுக்கு இடையே டிரில்லியன் கணக்கான டொலர்கள் பரிமாற்றம் செய்யப்படுவதோடு, இந்த நிகழ்வை எமது சிறிய நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக விளக்கலாம்.
ஒரு தொழிலாக, சுற்றுலாத் துறையானது உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பியுள்ள ஒரு பெரிய மரமாக இருப்பதோடு, பல நாடுகள் அதிலிருந்து வெற்றிகரமான முடிவுகளை அறுவடை செய்கின்றன.
உதாரணமாக, இந்தத் தொழில்துறையானது இலங்கைக்கு எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் 2018ஆம் ஆண்டில், இது மொத்த உள்நாட்டு வருமானத்தில் ஐந்து வீதமானளவில் நாம் மேலே குறிப்பிட்டதைப் போன்று உலகின் பணக்காரர்களும் சக்திவாய்ந்தவர்களும் தங்கள் செல்வத்தையும் அதிகாரத்தையும் காட்ட பில்லியன் கணக்கான டொலர்களை செலவிடும் போது ஒரு சதத்தையும் கூட செலவழிக்காது இலங்கை உலகில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளக்கூடிய நாடுகளிடையே முதலாமிடத்திற்கு வந்திருக்கின்றது.
இலங்கையராக நாம் பிறந்த நாட்டிற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனை எனது வாழ்க்கையை மாற்றிய சிந்தனை எனக் கூற வேண்டும். இதற்காக நான் தெரிவு செய்தது சுற்றுலாத்துறை என்பது வெளிப்படையானது. காலியில் பிறந்த நான் சிறு வயதிலிருந்து காலி கோட்டை, ஹிக்கடுவை, வெலிகம போன்ற பிரதேசங்களில் எனது பாடசாலைக் காலத்தினுள் போதுமானளவு வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளைப் பார்த்திருப்பதும் எனது இந்த சிந்தனை வலுவடைவதற்கு முக்கிய காரணியாக அமைந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
அவியானா திட்டத்தை உருவாக்க பல வருடங்கள் ஆனபோதும் அது எந்தளவுக்கு நீண்டது என்று கூட எனக்கு விளங்கவில்லை. எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வாழ்க்கையை எந்தளவுக்கு புரட்டிப் போட்டது என்றால் அது இறுதியில் இலங்கையில் முதலாவது ஏழு நட்சத்திர ஹோட்டலை உருவாக்கவும், உலகின் எட்டாவது ஏழு நட்சத்திர ஹோட்டலை உருவாக்கவும் உதவியது.
1946ல் அழகிய மவுண்ட் லெவினியா, கோல் ஒரியண்டல், கண்டி குயின்ஸ் போன்ற ஹோட்டல்கள் தமது பெருமையை உலகிற்கு எடுத்துச் சென்ற போது அண்மையில் உருவான கேப் வெலிகம, wild coast Tented Lodg, Anantara, Amanwella, Santani, போன்ற நிர்மாணங்கள் இலங்கைக்கு பாரியளவிலான வெளிநாட்டுச் செலாவணியைக் கொண்டு வருகின்றது என்பது இரகசியமானதல்ல.
நான் தேடிச் சென்ற சுற்றுலாத் துறையின் மாற்றத்தினுள் நான் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டது டுபாய் Burj Al Arab, Emirate Palace போன்ற பாரியளவில் கவனத்தை வென்ற நிர்மாணங்களாகும். ஆரம்பத்தில் எனக்கு இவை அனைத்தும் ஒரு கனவாக இருந்தாலும் பல வருடங்களாக மேற்கொண்ட தேடல்களின் பின்னர் இவை அனைத்தையும் தாண்டிச் செல்ல எம்மால் முடியும் என எனக்குத் தெரிந்தது.
2019ஆம் ஆண்டு சில சமயத் தலைவர்கள் உள்ளிட்ட நாம் பத்துப் பேர் இணைந்து இதற்கான அடிக்கல்லை நட்டி ஆரம்பித்து வைத்த அவியானா திட்டம் இன்று உலகின் எட்டாவது ஏழு நட்சத்திர ஹோட்டல் என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றது. 27 ஏக்கர் நிலப்பரப்பில், சகல வசதிகளுடன் கூடிய 60 வில்லாக்கள், பல ஆடம்பர வசதிகளுடனும், இலங்கையர்களின் பாரம்பரிய விருந்தோம்பல், நீண்ட வரலாற்றைக் கொண்ட நமது நாட்டின் உணவு வகைகள், ஜோதிடம், பௌத்தம் மற்றும் தியானத்தை மையமாகக் கொண்ட நமது கலாசாரம் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு முதல் இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்கள் வருமானத்தைக் கொண்டு வரும் என்பதை பணிவுடன் கூற வேண்டும்.