ஹமாஸ் பிடித்துச் சென்ற பணயக் கைதிகளை மீட்பதற்காகவெனக் கூறி இஸ்ரேல் காஸா மீது முன்னெடுத்து வரும் யுத்தம் கடந்த 14 மாதங்களாக நீடித்து வருகின்றது. இஸ்ரேல்-ஹமாஸ் யுத்த நிறுத்தத்தில் விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகளைத் தவிர ஒரு சிலர் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 100 பேரளவில் இன்னும் பணயக் கைதிகளாக இருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.
அதனால் எஞ்சியுள்ள பணயக் கைதிகளை யுத்தத்தின் ஊடாக மீட்பதற்கான முயற்சிகளை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு காஸா மீது முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்தம் காரணமாக அங்குள்ள மக்கள் சொல்லொணா துன்பங்களுக்கும் பாதிப்புக்களுக்கும் முகம்கொடுத்துள்ளனர். இருப்பிடம், உணவு மற்றும் தூய குடிநீர் வசதிகள் அவற்றில் முக்கிய பிரச்சினைகளாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தொடரான குண்டுத்தாக்குதல்கள் மற்றும் ஒயாத யுத்தம் என்பன காரணமாக மனிதாபிமான உதவிகளை காஸாவுக்கு கொண்டு செல்வதே சவால்மிக்க காரியமாகியுள்ளது. இதன் விளைவாக காஸாவில் பசி, பட்டினி தீவிரமடைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையும் அதன் தொண்டர் நிறுவனங்களும் மாத்திரமல்லாமல் உலகின் பல நாடுகளும் காஸா மீதான யுத்தத்தை உடனடியாக நிறுத்தி காஸாவுக்கு தங்குதடையின்றி மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழி செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றன. குண்டு வீச்சுக்கள் மற்றும் யுத்தத்திற்கு மத்தியில் பசி, பட்டினியில் இருந்து காஸாவிலுள்ள பலஸ்தீன மக்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஐ.நா. நிறுவனங்கள் உள்ளிட்ட மனிதாபிமான நிறுவனங்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றன.
இப்போர் ஆரம்பிக்கப்பட முன்னர் காஸாவானது மரக்கறி வகைகள், முட்டைகள், பால், கோழி மற்றும் மீன் ஆகியவற்றில் தன்னிறைவு அடைந்திருந்தது. அத்தோடு சிவப்பு இறைச்சி, ஒலிவ் எண்ணெய் மற்றும் பழங்களை அதிகளவில் உற்பத்தி செய்யக்கூடியதாகவும் விளங்கியது காஸா என்று தெரிவித்துள்ள உணவு மற்றும் விவசாய அமைப்பு, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்படும் யுத்தத்தினால் காஸாவின் விவசாய நடவடிக்கைகள் அழிக்கப்பட்டு உள்ளூர் உணவு உற்பத்தியும் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த கோர யுத்தத்தின் ஊடாக உணவுக் கடைகள், சந்தைகள், உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகள், பண்ணைகள் மற்றும் மீன்பிடி படகுகளை அழிக்கப்பட்டுள்ளன.
புதிய மரக்கறிகள், பழங்கள், முட்டைகள், இறைச்சி மற்றும் மீன்களுடன் தம் மக்களுக்கான உணவைத் தாமே உற்பத்தி செய்து, உணவளிக்கக்கூடிய இடமாக இருந்த காஸா இன்று பசி, பட்டினியின் இடமாக மாறியுள்ளது. மனிதாபிமான உணவு உதவியை முழுமையாக நம்பி இருக்கிறது காஸா. மனிதாபிமான உதவிகள் மற்றும் அதன் விநியோகத்தை பாதுகாக்கும் பொலிஸ் படை அகற்றப்பட்டுள்ளது.
இதன் விளைவாக காஸாவில் அனைவரையும் பசி பாதித்துள்ளது. மக்கள் பார்வைக்கு மெலிந்தவர்களாகவும் அவர்கள் கண்களில் வெற்றுப் பார்வையுடன் சுற்றித் திரிகிறார்கள். உணவுக்காக பிச்சை எடுக்கும் குழந்தைகள் மற்றும் முதியோரால் தெருக்கள் நிரம்பிக் காணப்படுகின்றன. எங்கு திரும்பினாலும் துன்பத்தையும் பசியையும் சர்வசாதாரணமாக அவதானிக்க முடிகிறது. அதனால் காலாவதியான உணவைக்கூட பசிக்காக உண்ணும் நிலை காஸாவில் ஏற்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான ட்ரக்குகள் மனிதாபிமான உதவிகளுடன் காஸாவுக்கு வெளியே காத்து நிற்கின்ற போதிலும் அதனை அனுமதிப்பதில் இஸ்ரேலிய படையினர் இறுக்கமான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
அதனால் யுத்தத்திற்கு முன்னர் தினமும் 700-800 ட்ரக் மனிதாபிமான உதவிகள் சென்ற காஸாவுக்குள் இப்போது நாளொன்றுக்கு சராசரியாக 36 மனிதாபிமான உதவி ட்ரக்குகள் தான் அனுமதிக்கப்படுகின்றன.
இந்தப் பின்னணியில் 365 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட காஸாவில் 23 இலட்சம் மக்கள் கடும் உணவு நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர். பசியையும் பட்டினியையும் ஒரு ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக ஐ.நா. உட்பட பல நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
குறிப்பாக வடக்கு காஸாவிலும் சுமார் 04 இலட்சம் மக்கள் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஐ.நா. தொண்டர் நிறுவனங்கள் விடுத்துள்ள புதிய அறிக்கையில், முற்றுகைக்கு உள்ளாகியுள்ள வடக்கு காஸாவில் வீடுகள் மற்றும் தங்குமிடங்களில் சிக்கியுள்ள மக்கள் உணவு மற்றும் குடிநீரின்றி கடும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளனர். அதனால் அவர்கள் அப்பிரதேசங்களை விட்டு வேறுபகுதிகளுக்கு இடம்பெயர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு செயல்படும் பேக்கரிகள் கூட இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை உணவுப் பாதுகாப்பின்மையின் பேரழிவு நிலைகளை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை எதிர்வரும் மாதங்களில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அதே வேளையில், பஞ்சம் உடனடியாக ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பும் காணப்படுகிறது. தெற்கு காஸாவிலும் உணவுப் பற்றாக்குறையால் அனைத்து பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழலில் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனிய பிரதேசத்தில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைவர் அஜித் சுங்காய், மத்திய காஸா பகுதியின் பட்டினி அளவு குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
காஸாவில் 2.15 மில்லியன் அதாவது 96 வீதமான மக்கள் உயர்மட்ட உணவு பாதுகாப்பின்மைக்கு முகம்கொடுத்துள்ளனர். ஐந்து பலஸ்தீனியருக்கு ஒருவர் அல்லது 04 இலட்சத்து 95 ஆயிரம் பேர் பட்டினியை எதிர்கொண்டுள்ளனர் என்று ஒருங்கிணைக்கப்பட்ட தொண்டர் நிறுவனங்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சுமார் ஒரு இலட்சத்து 33 ஆயிரம் பேர் போருக்கு முன்பிருந்ததை விட 10 மடங்கு அதிகமான ஊட்டச்சத்து குறைபாடுடன் பேரழிவு உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய காஸா பகுதியிலுள்ள பேக்கரியொன்றில் பானைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் முண்டியடித்ததில் மூன்று பேர் நசுங்குண்டு உயிரிழந்துள்ளனர். அவர்களில் இருவர் 13, 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளாவர் என்று யூ.என்.ஆர்.டப்ளியூ.ஏ குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் உலக உணவுத் திட்டம், தன் கடமையை மேற்கொள்ளவும் மிகவும் தேவையான மாவு விநியோகத்தை மீண்டும் தொடங்கவும் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள காஸா அரச ஊடக அலுவலகம், காஸாவில் கோதுமை மா மற்றும் மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க ஏற்பாடு செய்யுமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் ஐ.நா. முகவரகம், பான், ரொட்டிதான் காஸாவின் பெரும்பாலான குடும்பங்களுக்கு உயிர்நாடியாகும். பெரும்பாலும் அவர்கள் அணுகக்கூடிய ஒரே உணவு அது. இப்போது, அதுவும் கைக்கு எட்டாமல் போயுள்ளது. அதனால் அவற்றை முற்றுகையிடப்பட்ட காஸாவுக்கு சென்றடைய இடமளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போது காஸா பகுதியில் உணவு மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கப்பெறாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர். அங்கு உணவுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. பஞ்சம் நெருங்கிவிட்டது. அங்குள்ள பெரும்பாலான நீர் விநியோகம் பருகுவதற்கு எங்கும் செல்ல முடியாத நிலையில், குடும்பங்கள் கைவிடப்பட்ட வீடுகளிலோ அல்லது திறந்த வெளியிலோ தங்கியுள்ளனர்’ என்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் தரவுகளில், காஸாவில் 50 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளனர், அவர்களில் 4,000 கர்ப்பிணிகள் இம்மாதம் குழந்தைகளைப் பிரவேசிப்பர். என்றாலும் அந்தக் கர்ப்பிணி பெண்களில் சுமார்’ 15,000 பேர் பஞ்சத்தின் விளிம்பில் காணப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே காஸா மக்கள் முகம்கொடுத்துள்ள பசி, பட்டினியை முடிவுக்கு கொண்டுவர உழைக்க வேண்டியது மனித நேயத்தை நேசிக்கும் அனைத்து தரப்பினரதும் உடனடிப் பொறுப்பாகும்.
மர்லின் மரிக்கார்