ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ணத்தில் இலங்கை இளையோர் அணியால் இறுதிப் போட்டிவரை முன்னேற முடியவில்லை. ஆரம்ப சுற்றில் தோல்வியுறாத அணியாக அரையிறுதிக்கு முன்னேறியபோதும் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்த முடியாமல் போனது.
இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாததற்கு என்ன இந்தத் தொடரில் பங்கேற்ற இலங்கை அணியில் சாதகமான புள்ளிகள் பலதையும் பார்க்க முடிகிறது. அதில் பிரதானமானது அணியின் உப தலைவரும் விக்கெட் காப்பளரும் இடது கை துடுப்பாட்ட வீரருமான ஷருஜன் சண்முகநாதன்.
நேபாளத்திற்கு எதிரான முதல் சுற்றின் ஆரம்பப் போட்டியில் 62 ஓட்டங்களைப் பெற்ற ஷருஜன் தொடர்ந்து ஆப்கானிஸ்தனுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் சேர்த்தார். பங்களாதேஷுக்கு எதிரான கடைசி குழுநிலைப் போட்டியில் அவரால் துடுப்பாட்டத்தில் சோபிக்க முடியாதபோதும் (4 ஓட்டங்கள்) இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் இலங்கையின் இரண்டாவது அதிகட்ச ஓட்டங்களாக 42 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன்மூலம் அவர் தொடரில் மொத்தமாக 210 ஓட்டங்களைப் பெற்று தொடர் முழுவதுமே அதிக ஓட்டங்கள் பெற்ற வரிசையில் நான்காவது இடம் வரை முன்னேறினார். அவரது துடுப்பாட்டத்தில் ஒரு நேர்த்தி இருக்கும். இசகுபிசகாக ஆட மாட்டார். தொழில்நுட்ப ரீதியில் சொல்வதென்றால் ஒரு தேர்ந்த துடுப்பாட்ட வீரருக்கான பாணி அவரிடம் தெரிகிறது.
கொட்டஞ்சேனை புதிய பெனடிக்ட் கல்லூரியைச் சேர்ந்த 18 வயதான ஷருஜன் இலங்கை இளையோர் மட்டக் கிரிக்கெட்டில் அதிகம் அவதானிக்கப்பட்ட வீரராக இருக்கிறார். அண்மைக் காலமாக இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் தவிர்க்க முடியாத ஒருவராக மாறி இருக்கும் அவர் கடந்த ஆண்டு நடந்த இளையோர் ஆசிய கிண்ணம், இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடந்த இளையோர் உலகக் கிண்ண போட்டிகளிலும் இலங்கை அணிக்காக ஆடி இருந்ததார்.
என்றாலும் கிரிக்கெட் உலகில் ஷரூஜன் அவதானத்தைப் பெற்றது இன்று நேற்றல்ல. 2011இல் தனது ஐந்து வயதிலேயே ஷருஜனை உலகமே திரும்பிப் பார்த்தது. அது ஒரு செப்டெம்பர் மாதம் எஸ்.எஸ்.சி. மைதானத்திற்கு ஷருஜன் தனது தந்தையுடன் வந்திருந்தார். அப்போது இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை பார்க்கவே அவர் வந்தார்.
இருந்து நின்று பந்துவீசும் மைக்கல் ஹசே, குமார் சங்கக்காரவுக்கு பந்தை வீசிக்கொண்டிருந்தார். அரங்கில் உள்ள புல்வெளியில் தனது தந்தை பந்துவீச ஷருஜன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார். அப்போது சரியாக சங்கக்கார கவர் ட்ரைவ் ஒன்றை அடிக்க அதே பாணியில் ஷருஜனும் துடுப்பெடுத்தாடுவது கெமராவில் பட்டது.
தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஷருஜனை மைதானத்தின் ஓரத்தில் பார்க்க முடிந்தது. அப்போதும் கூட சங்கக்கார துடுப்பெடுத்தாடும்போது தான் அவர் கெமராவில் பட்டார்.
‘அவர் சங்கக்காரவின் பாணியிலேயே துடுப்பெடுத்தாடுகிறார்’ என்று அப்போது நேர்முக வர்ணனை செய்துகொண்டிருந்த இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கள் குறிப்பிட்டார். அவரை ‘குட்டி சங்கக்காரவென்று அழைக்கலாம்’ என்கிறார் மற்றொரு வர்ணனையாளர் ரமீஸ் ராஜா. இதுவெல்லாம் அன்றைய தினத்தில் ஓர் இரண்டு மூன்று நிமிடங்கள் இயல்பாக நிகழ்ந்தவை. ஆனால் அது ஷருஜனின் வாழ்வை புரட்டிப்போட்டது.
அதற்குப் பின்னர் அவரது தந்தை சண்முகநாதன் அவரை கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே சி.சி.சி. ஸ்கூல் ஒப் கிரிக்கெட்டில் ஷருஜன் இணைந்தார். அந்த கிரிக்கெட் அகடமியை பயிற்சியாளர் நெல்சன் மெண்டிஸ் நடத்துகிறார். அவர் ஒரு கண்டிப்பான பயிற்சியாளர். அசங்க குருசிங்க, ரொஷான் மஹானாம, பந்துல வர்ணபுர போன்ற வீரர்களை தேசிய அணிக்கு அழைத்து வந்ததில் நெல்சன் மெண்டிஸின் பயிற்சிக்கு முக்கிய இடமுண்டு.
எனவே ஷருஜனின் கிரிக்கெட் அடித்தளம் உறுதியாகப் போடப்பட்டது. இந்தக் காலத்தில் குறிப்பாக குமார் சங்கக்காரவின் அவதானத்தையும் அவர் பெற்றார். ‘ஷருஜன் தன்னைப் போன்று ஆடுவது சங்கக்காரவுக்குத் தெரியும்’ என்கிறார் அவரது தந்தை சண்முகநாதன்.
பின்னர் பாடசாலை கிரிக்கெட்டில் அவர் சோபிக்க ஆரம்பித்தார். 2023இல் பிக் மெட்ச் போட்டியில் கொழும்பு வெஸ்லி கல்லுரிக்கு எதிராக புனித பெனடிக்ட் கல்லூரி சார்பில் முதல் வரிசையில் வந்து 98 ஓட்டங்களைப் பெற்றார். அந்தப் பருவத்தில் அவர் பாடசாலை கிரிக்கெட்டில் 14 போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் ஆறு அரைச் சதங்களுடன் 1002 ஓட்டங்களை பெற்றதோடு ஓட்ட சராசரியும் 55.66 ஆக உச்சத்தில் இருந்தது.
பாடசாலை கிரிக்கெட்டில் சோபித்ததை அடுத்தே அவர் இலங்கை இளையோர் தேசிய அணிக்கு அழைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு முதல்தர கிரிக்கெட்டுக்கு அறிமுகம் பெற்றார். அது இன்னும் கூறும்படியான சாதனையில்லை. அது 3 போட்டிகளில் 16 ஓட்டங்கள் மாத்திரமே. என்றாலும் இதனை வைத்து அவரின் எதிர்காலத்தை மதிப்பிட முடியாது.
ஷருஜனின் இதுவரையான கிரிக்கெட் பயணத்தில் முக்கியமான பங்கு வகிப்பவர் அவரது தந்தை. அவரது கிரிக்கெட் தேவையை முழுமையாக நிறைவேற்றுபவராக தந்தை இருப்பதாலேயே ஷருஜனுக்கு இத்தனை தூரம் வர முடிந்திருக்கிறது.
என்றாலும் ஷருஜன் பயணிக்க வேண்டிய தூரம் நெடியது. குட்டி சங்காக்கார என்ற பெயரை வைத்திருப்பதை கொண்டு மாத்திரம் அவரால் அந்தத் தூரத்தை கடக்க முடியாது. வயது சென்று கொண்டிருப்பதால் ஷருஜனுக்கு 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட்டில் இன்னும் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. அவர் அடுத்த கட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இலங்கையின் பாடசாலை கிரிக்கெட்டுக்கும் கழக மட்ட கிரிக்கெட்டுக்கும் இடையிலே பெரிய இடைவெளி இருக்கிறது. கழக மட்ட கிரிக்கெட் அதிக சவால் மிக்கது. அதனை எதிர்கொள்வதற்கு ஷருஜன் தயாராக இருந்தாலே அவரால் தேசிய அணி வரை முன்னேற முடியும். அவரது பாதை தெளிவானது என்றபோது அதே அளவுக்கு நெடியது… சவால் மிக்கது….