Home » மாகாணசபை விவகாரம் உருவாக்கியுள்ள சர்ச்சை!

மாகாணசபை விவகாரம் உருவாக்கியுள்ள சர்ச்சை!

by Damith Pushpika
December 8, 2024 6:41 am 0 comment

1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் தற்போதை அரசியலமைப்பில் மாகாண சபைகள் உருவாக்கப்படக் காரணமாகவிருந்த 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஆரம்பம் முதலே அவ்வப்போது பேசுபொருளாகக் காணப்படுகின்றது.

புதிய அரசாங்கத்தின் வெற்றியில் முக்கிய காரணமாக விளங்குபவரும், ஜே.வி.பியின் பொதுச்செயலாளருமான ரில்வின் சில்வா அண்மையில் கூறிய கருத்து மாகாணசபைகள் குறித்த விவகாரத்தை மீண்டும் ஒருமுறை பேசுபொருளாக்கியுள்ளது.

தமிழ் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் ரில்வின் கூறிய கருத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்விவகாரம் மீண்டும் அரசியல் தளத்தை சூடாக்கியுள்ளது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டு வந்து, புதிய அரசியலமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரில்வின் சில்வா குறித்த செவ்வியில் குறிப்பிட்டிருப்பதாக அறிக்கையிடப்பட்டிருந்தது.

சுமார் 37 வருடங்களாக நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையால் இதுவரை நாட்டுக்கோ தமிழ் மக்களுக்கோ எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. மாறாக, இலங்கையில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் நிலையே காணப்படுகின்றது. சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தாத அரசியல் தீர்வை எமது அரசாங்கம் முன்வைக்கும் என அவர் கூறியிருப்பதாக அந்தச் செவ்வியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ரில்வின் சில்வாவின் இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தமிழ் அரசியல்வாதிகளும் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். சம உரிமை என்பது வேறு, அதிகாரப் பகிர்வு என்பது வேறு எனத் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.

“மாகாண சபை என்பதை நாம் ஏற்க மாட்டோம். ஆனால், இன்றைய மாகாண சபை முறைமை என்பது தமிழ் மக்களின் போராட்டங்களால் கிடைக்கப் பெற்றது. ஆகவே, அதை நாம் எதிர்க்கவும் போவதில்லை” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த தேர்தல்களுக்கு முன்னர் தன்னிடம் நேரடியாகக் கூறியிருந்ததாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டிருந்தார்.

சம உரிமை வருவது நல்லதே. ஆனால், சுலபமான காரியம் அல்ல. இன, மத, மொழி ரீதியாக சம உரிமைகள் இந்நாட்டில் உறுதிப்படுத்த இன்னமும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்பது மனோ கணேசனின் கருத்தாக இருந்தது.

இது விடயத்தில் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தக் கோரியிருந்தார். இதற்குப் பதிலளித்த சபை முதல்வர், அமைச்சர் பிமல் ரத்னாயக்க, ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு சிறிதரன் எம்.பி நேரம் கோரியிருப்பதாகவும், அச்சந்திப்பின் போது மாகாணசபை விவகாரம் பற்றிக் கலந்துரையாட முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதியைச் சந்தித்து மாகாணசபை குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வார்கள்.

மறுபக்கத்தில், தான் கூறிய கருத்து பிழையான வகையில் அர்த்தப்படுத்தப்பட்டிருப்பதாக ரில்வின் சில்வா தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

‘2024 நவம்பர் 30ஆம் திகதி என்னுடன் நடத்திய நேர்காணலைச் சார்ந்ததாக பிரசுரித்துள்ள பிரதான செய்தி மற்றும் அதற்காக இடப்பட்டுள்ள தலைப்பு ஊடாக நான் வெளியிட்ட கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. இந்தச் செய்தி மற்றும் தலைப்பு காரணமாக வாசகர் மத்தியில் தவறான கருத்துத் தோன்றுவதால், அதனைச் சரிசெய்ய வேண்டியுள்ளது. வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க 1987 இல் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தம் தவறியுள்ளதெனவும் அதனால் வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க மிகவும் நடைமுறைச்சாத்தியமானதும் சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளதெனவும், அத்தகைய மிகச்சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும்வரை 13 ஆவது திருத்தத்தையும் மாகாணசபைகளையும் ஒழிக்கப்போவதில்லை எனவுமே அதன்போது நான் கூறினேன்’ என ரில்வின் சில்வாவின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரில்வின் சில்வா மாகாண சபை நீக்கம் பற்றி பேசிய கருத்தை வைத்து தேசிய மக்கள் சக்தி அரசு மீதான தமது எதிர்ப்பு அரசியலை தமிழ்தேசிய தரப்பு பதிவு செய்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

‘மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவே இல்லை. அதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபடவும் இல்லை. ஆனால், மாகாண சபையையும் விட ஒரு வலிமையான சபை – அனைத்து மக்களுக்கும் சமனான அந்தஸ்தை வழங்கக்கூடிய ஓர் அரசமைப்புதேவை. அதில் மாகாண சபை இருக்குமா, இல்லையா என்பதே விடயம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அதன் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமை என்பது அவ்வப்போது தீவிரமாக ஆராயப்படும் விடயமாகவே இருந்து வந்துள்ளது. இது தொடர்பான வரலாற்றை நோக்குவோமாயின், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக உள்ளடக்கப்பட்ட மாகாண சபை முறையை வலியுறுத்துவதே அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தமாகும்.

1987ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நோக்கில் அரசியலமைப்புக்கு 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவின் அழுத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு அதிகரங்களைப் பகிர்வதற்கு இலங்கையின் மத்திய அரசு உடன்பட்டிருந்தாலும், முழுமையான அதிகாரங்கள் எதுவும் இதுவரை பகிரப்படவில்லை.

குறிப்பாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் உள்ளிட்ட அதிகாரங்களை முழுமையாகப் பகிர்ந்தளிக்கவில்லை என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த விடயம்.

அதேநேரம், 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஆரம்பம் தொட்டு தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவந்துள்ளன. ஆயுதப் போராட்டம் வலுப்பெற்றிருந்த காலப்பகுதியில் எல்.ரி.ரி.ஈ உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் மாகாணசபை முறையில் பெரிதாக நாட்டம் கொண்டிருக்கவில்லை.

ஆயுதக் குழுக்கள் மாத்திரமன்றி அப்போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளும் அதில் பெரிதாக அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. இருந்தபோதும் பின்னைய நாட்களில் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டியிருந்தன.

13 ஆவது திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாணங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஆரம்பத்தில் இணைந்தே காணப்பட்டன. 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் பணியாற்றினார். 1990ஆம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும் படையினர் நாட்டைவிட்டு வெளியேறும் நேரத்தில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழீழப் பிரகடனத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல வருடங்களாக வடகிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் பல வருடங்களாக நடத்தப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்தபோது விமல் வீரவன்ச உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கிற்கு அமைய இரு மாகாணங்களும் 2006ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டன. இதன் பின்னர் 2013ஆம் ஆண்டிலேயே வடமாகாணத்துக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதுவே பிரிக்கப்பட்ட வடமாகாணசபைக்கு நடத்தப்பட்ட ஒரேயொரு தேர்தலாகும். அதன் பின்னர் இதுவரை தேர்தல் நடைபெறவில்லை.

இது இவ்விதமிருக்க, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் பேசப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் 13 ஆவது திருத்தத்திற்கு அமைய அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பம் முதல் மாகாணசபைகளுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்தில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகின்றது.

இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு இந்தியா இது பற்றிய தனது நிலைப்பாட்டைத் தொடர்ந்தும் தெரிவித்து வந்திருந்தது. இலங்கையின் கடந்த ஆட்சியாளர்களும் தமிழ்த் தரப்பினரின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவும், இந்தியாவின் நட்பை நீடிப்பதற்கும் மாகாண சபையின் அதிகாரப் பகிர்வு குறித்து தொடர்ந்தும் ஆதரவான கருத்துக்களைக் கூறிவந்தனர். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது பதவிக்காலத்தில் மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வை வழங்குவது குறித்து ஆராய்வதாக தமிழ் மக்களை ஏமாற்றி வந்தனர்.

மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு அப்பால் மாகாண சபைகளினால் வினைத்திறான சேவை வழங்கப்படுகின்றதா என்ற விமர்சனமும் காணப்படுகின்றது. அதிகரித்துள்ள அரச செலவுகளுக்கு அப்பால் மாகாண சபைகளுக்கான செலவுகளும் மக்களுக்கே பாரத்தை அதிகரிக்கின்றன.

எனவே, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் பட்சத்தில் மாகாண சபைகள் பற்றிய விடயத்தை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division