Home » தேசிய மக்கள் சக்தி அரசை பலப்படுத்த ஊடகங்களின் பொறுப்பும் பங்களிப்பும்

தேசிய மக்கள் சக்தி அரசை பலப்படுத்த ஊடகங்களின் பொறுப்பும் பங்களிப்பும்

by Damith Pushpika
December 8, 2024 6:39 am 0 comment

ஆட்டம் தொடங்க முன்பே அதைப் பற்றிய விமர்சனங்களை வைப்போருண்டு. இவர்கள், ‘ஆட்ட வீரர்கள் சரியில்லை. ஆடும் அணி சரியில்லை’ என்று தொடங்கி ஒரு பெரிய குற்றப்பட்டியலைத் தயாரித்து விடுவர். இவர்களே, ‘தமக்கு வேண்டாதவர் தொட்டாலும் குற்றம். தொடாது விட்டாலும் குற்றம்‘ என்று சொல்லும் வகையினர்.

அதைப்போல ஆட்ட வீரர்களைப் பற்றியும் ஆடும் அணியைப் பற்றியும் மிகையாகப் புகழ்ந்துரைப்போருமுண்டு. இவர்களுக்குத் தொட்டதெல்லாம் பொன். கடித்ததெல்லாம் கரும்பு. தாம் விரும்புகின்ற அல்லது தாம் ஏற்றுக் கொண்ட தரப்பினர் மெய்யாகவே தவறிழைத்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். எப்படியாவது அதை நியாயப்படுத்தித் தமது தரப்பைப் புனித்தப்படுத்துவதற்கே முயற்சிப்பர்.

இவ்வாறான குறைகாண் அல்லது மிகை புகழுரை விமர்சனங்கள் (அபிப்பிராயங்கள்) ஒருபோதும் பயனுடையவையாக இருப்பதில்லை. இரண்டுமே உண்மையைச் சிரமப்பட்டு மறைக்க முற்படுகின்றவை. இதற்குக் காரணம், இவற்றுக்குப் பின்னாலிருக்கும் மோசமான உள நிலையே ஆகும்.

இவ்வாறான உளநிலையின் அடிப்படையில் ஒரு தரப்பு, கண்மூடித்தனமாக எதிர்க்கும். அப்படிக் கண்மூடித்தனமாக எதிர்க்கும்போது அதனுடைய கண்களில் எந்த நல்ல விடயங்களும் படவே படாது. வெறுப்பு மனநிலையோடு பார்க்கும்போது எந்த நன்மைகளும் நன்மைகளாகத் தோன்றாது. என்பதால்தான் வேண்டாதவர் தொட்டாலும் குற்றம். தொடாது விட்டாலும் குற்றம்‘ என்று சொல்லப்படுவதுண்டு.

இந்த இரண்டு தரப்பிலும் நேர்மையான அணுகுமுறை – ஆராய்வு – மதிப்பீடு – விமர்சனம் கிடையாது. என்பதால் இவை முன்வைப்பவை ஒரு போதுமே விமர்சனமாக இருப்பதில்லை. பதிலாக எந்த அடிப்படையுமில்லாத வெறும் அபிப்பிராயங்களாகி விடுகின்றன. உண்மையில் அவையெல்லாம் நஞ்சுக்கு நிகரான ஒன்றேயாகும்.

ஆனால் இரண்டு தரப்புமே ஊடகத்துறையையும் பொது வெளியையும் அநேகமாக நிரப்பிக் கொண்டிருக்கும். ஒன்று, தனது வசைகளாலும் குறைகளாலும். மற்றது, தனது புகழுரைகளாலும் பாராட்டினாலும். இணையவெளி தொடக்கம் ஊடகங்கள் வரையில் இதனைக் காண முடியும். இதனால்தான் நமது பொதுவெளி அபிப்பிராயம் என்பது பெரும்பாலும் நச்சுச் சூழலாக உள்ளது.

ஏறக்குறைய இதுதான் இன்றைய இலங்கை அரசியலிலும் காணப்படுகிறது. தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள NPP அரசாங்கத்தைப் பற்றியும் இவ்வாறு இரண்டு வகையான (ஆதரவான – எதிரான) அபிப்பிராயங்களும் உண்டு. NPP ஆதரவாளர்கள் சொல்கிறார்கள், ‘முன்னைய ஆட்சிகளைப்போல இந்த ஆட்சி இருக்காது. அனைத்திலும் மாற்றங்கள் நிகழப்போகின்றன. நாட்டில் இனிமேல் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இருக்காது. அனைவரும் சமம் என்ற நிலையே பேணப்படும். ஊழலும் முறைகேடுகளும் சமாதி செய்யப்படும். முழுமையான கட்டமைப்பு மாற்றம் நிகழ்ந்தே தீரும். புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் இப்போதே அதை நோக்கிய பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன என்று.

இதையும் விட மேலான திட்டங்களும் விருப்பங்களும் NPP யிடம் இருக்கக் கூடும். ஆனால், அவற்றையெல்லாம் செய்யக் கூடிய சூழலும் வளமும் உடனடியாக உள்ளதா என்பது கேள்வியே. நாடு ஏற்கனவே பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. கடன்சுமை பெரிதாக அழுத்துகிறது. அதை விட நாட்டின் இயங்கு திறன் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதைச் சரியாக்குவதற்கே கடுமையாகப் பாடுபட வேண்டும்.

இப்படிச் சொல்வதன் மூலம் NPP யின் பொறுப்புகளைக் குறைப்பதாகவோ அதைப் பாதுகாப்பதாகவே யாரும் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. ஏற்கனவே உள்ள பிரச்சினைகள் அனைத்தையும் தெரிந்து கொண்டே, அதையெல்லாம் சீராக்கம் செய்யும் உத்தரவாதத்துடனேயே NPP அதிகாரத்துக்கு வந்திருக்கிறது. ஆகவே அதைக் குறைக்கவோ திசைதிருப்பவோ இங்கே முயற்சிக்கவில்லை. ஆனால், நடைமுறைப் பிரச்சினைகள் பல உள்ளன. அவற்றைப் பேசியே ஆக வேண்டும்.

அரசாங்கத்தின் உயர் பீடத்திலிருந்து அடிமட்டம் வரையிலும் ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் பொறுப்பின்மையும் சோம்பேறித்தனமும் புரையோடிப்போயுள்ளன. தங்களுடைய தவறுகளை மறைப்பதற்காக அரசாங்கத்தின் மீது சுலபமாகப் பழியைப் போட்டுத் தப்பி விடும் போக்கு நாடுமுழுவதிலும் உண்டு. இதற்கு எப்போதும் வாய்ப்பாக இருப்பது அரசாங்கத்தை எதிர்த்து விமர்சித்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளாகும். ஆகவே எதிர்க்கட்சிகளின் அபிப்பிராயத் திரைக்குப் பின்னே – அரச எதிர்ப்புக்குப் பின்னே – தங்களுடைய தவறுகளையும் குற்றங்களையும் பொறுப்பின்மைகளையும் மறைத்துக் கொள்கிறது நிர்வாகத் தரப்பு.

தமிழில் இது இன்னும் மோசமாகும். ‘அரசாங்கம் தமிழ் மக்களின் மீதும் தமிழ்ப் பிரதேசங்களின் மீதும் பாரபட்சம் காட்டுகிறது‘ என்று சொல்லிச் சொல்லியே அரச எதிர்ப்பு மனநிலையை வளர்த்து விட்டிருக்கின்றது. தமிழ் அரசியற் தரப்பினர். இதை அப்படியே எந்தக் கேள்வியும் இல்லாமல் வழிமொழிந்து வளர்த்து விட்டிருக்கின்றன ஊடகங்களும். இந்தப் பின்னணியில் அதிகாரிகள் தொடக்கம் சிற்றூழியர் வரையில் விடுகின்ற தவறுகளையெல்லாம் அரசாங்கத்தின் தவறுகளாகவே கருதுகின்ற போக்கு – பொது மனநிலை தமிழ்ச்சூழலில் உள்ளது. தமிழ் நிர்வாகத் தரப்பு இதைத் தனக்கு மிக வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

இதையெல்லாம் கடந்து செல்லவேண்டிய பொறுப்பு NPP அரசாங்கத்துக்குண்டு. ஆகவே அது தனது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னேற்பாடாக நிர்வாக இயந்திரத்தைச் சுத்தம் செய்து சீராக இயங்க வைக்க வேண்டியுள்ளது. இதைச் செய்ய வேண்டியதும் இதற்கான வழிகளைச் சொல்ல வேண்டியதுமே NPP ஆதரவாளர்களின் பணியாகும்.

அவ்வாறே பிராந்திய – சர்வதேசச் சூழலும். ஏற்ற இறக்கங்களோடு உள்ளது. அது சீராக அமைவதற்கு குறைந்தது ஒரு ஆண்டாவது செல்லும்.

தவிர, எத்தகைய சிறப்பான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி, அவற்றின் நல்விளைவுகள் மக்களைச் சென்றடைவதற்கு குறைந்தது ஓராண்டாவது வேண்டும். விலைக்குறைப்புகள், நிர்வாக ஊழல் தடுப்புகள், நிவாரணமளித்தல்கள் போன்றவற்றை உடனடியாகச் செய்யலாம். அடிப்படையான மாற்றங்களை உருவாக்கக் கூடிய பொருளாதார மறுசீரமைப்பு அல்லது பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள், இனப்பிரச்சினைக்கான தீர்வு, அரசியல் அமைப்பு மாற்றம் போன்றவற்றுக்குக் குறைந்த பட்சம் ஒரு ஆண்டாவது வேண்டும். அதை தொடக்குவதற்கு.

ஆகவே இதொன்றும் இலகுவானதல்ல. மிகக் கடினமானதாகும். ஆனால், செய்தே ஆகவேண்டியவை. முடிந்தவரையில் இதை இன்னும் குறுகிய கால எல்லைக்குள் (கால அட்டவணைக்குள்) செயற்படுத்தத் தொடங்கினால் அது வெற்றியே. இவை தாமதமாகத் தாமதமாக ஏற்கனவே தோற்றுப்போயிருக்கும் எதிர்க்கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் அவர்களுக்கு இசைவான ஊடகங்களும் NPP க்கு எதிரான பரப்புரையைச் செய்து கொண்டேயிருக்கப்போகின்றன. எங்கேனும் சிறு தவறுகளோ, குறைபாடுகளோ காணப்பட்டால், அதைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்கே கடுமையாக முயற்சிக்கும்.

ஏனெனில் கடந்த 75 ஆண்டுகளாக எந்தக் கேள்வியுமில்லாமல் பெரிய பட்டறையில் தின்று கொளுத்த தரப்புகளல்லவா இவை. அதை விட்டுச் சுலபமாக அடங்கி விடுவது அவற்றுக்குக் கடினமாகவே இருக்கும்.

ஆகவே குறைந்த பட்சம் தங்களுடைய வயிற்றெரிச்சலைக் கொட்டியே தீரும். ஆனால், NPP மீதான மக்கள் ஆதரவு சற்றுக் கூடுலாக இருப்பதால் இவை எளிதில் வாலாட்டுவது உடனடியாகக் கடினம் என்பதும் உண்மை. இருந்தாலும் அதை மீறி எழுவே இவை முயற்சிக்கும் என்பதையும் மறக்க முடியாது.

NPP ஆட்சிக்கு வந்து இன்னமும் ஒரு மாதம் நிறைவடையவில்லை. இதற்குள்ளேயே அதன் மீதான விமர்சனத்தைத் தமிழ் ஊடகங்களும் அரசியற் பத்தியாளர்களும் எழுப்பத் தொடங்கி விட்டனர். இதற்காக NPP யைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து, JVP ஐ உள்ளிழுத்துப் பேச முற்படுகின்றனர். ஆனால், JVP, NPP யாகப் பரிமாணம் அடைந்தைப் பற்றி இவர்களில் பலரும் புரிந்து கொள்ளத் தவறுகின்றனர். இந்தப் போக்கு – இந்த நிலை சிங்களத் தரப்பிலும் காணப்படுகிறது.

இவர்கள் NPP யை எந்தக் கோணத்தால் தோற்கடிக்கலாம் என்றே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். என்பதால்தான் ‘இந்த (NPP) அரசாங்கம் ஒரு L போர்ட் அரசாங்கமாகும். குறைந்த பட்சம் இது ஆறுமாதத்துக்குத்தான் நின்று பிடிக்கும். அதற்குப் பின்னர் தன்னிடம்தான் வருவார்கள்’ என ரணில் விக்கிரமசிங்க கூறியது இதே மனநிலையின் பாற்பட்டதே. இது எவ்வளவு மோசனமான கூற்று. எவ்ளவவு மோசமான உளநிலை. NPP யின் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையின் வெளிப்பாடு. இவ்வாறு சொன்னதன் மூலம் NPP க்கு வாக்களித்த – புதிய ஆட்சியொன்றை விரும்பிய – மக்களின் உணர்வையும் ஜனநாயக நிலைப்பாட்டையும் முன்னாள் ஜனாதிபதி உதாசீனப்படுத்தியிருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்கவைப்போலவே எதிர்க்கருத்துகளைப் பரப்புவோர் உள்ளனர். அவர்களைக் குறித்து எச்சரிக்கையோடிருக்க வேண்டியது அவசியமாகும். அவர்களுடைய எதிர்ப்பரப்புரைகளை முறியடிப்பது அவசியம். அதேவேளை NPP யின் பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கும் அவர்கள் நேர்மையான முறையில் முயற்சிக்க வேண்டும். அதற்கான ஆதரவையும் அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும். ஒரு மக்களாட்சியை வலுப்படுத்துவதும் வளப்படுத்துவதும் நமது அத்தியாவசியமான கடமையாகும்.

எவ்வாறு அதீதமாகப் புகழ்ந்துரைப்போரும் அளவுக்கதிகமான நம்பிக்கையைக் கொடுப்போரும் உள்ளனரோ, அதைப்போல எழுந்தமானமாக எதிர்ப்போரும் விமர்சனங்களை முன்வைப்போரும் உள்ளனர்.

இவர்களால் நற்பயன்கள் ஏதும் உண்டாவதில்லை. வேண்டுமானால் அவ்வப்போது ஊடகப் பரபரப்போ உளவியற் சுவாரசியமோ கிடைக்குமே தவிர, ஆக்கபூர்வமாக ஏதும் நிகழாது.

ஆகவே இதைப் புரிந்து கொண்டு இந்தச் சூதாட்டத்தை முறியடிக்கும் பொறுப்பு NPP ஆதரவாளருக்கும் நாட்டில் நல்லன நிகழ வேண்டும் எனக் கருதுவோருக்கும் உள்ளது. ஏற்கனவே NPP ஆதரவாளர்களும் மக்களும் தமது ஆதரவின் மூலம் அவர்கள் NPP யை வெற்றியடைய வைத்துள்ளனர். இந்த வெற்றி முதற்கட்ட வெற்றிதான். அதாவது, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வெற்றி. அந்த வெற்றியை அவர்கள் அடைந்துள்ளனர்.

ஆனால், அந்த அதிகாரத்தின் மூலம் சிறப்பான ஆட்சியொன்றை வழங்குவதே இரண்டாவது வெற்றியாகும். அதுவே உண்மையான வெற்றி. அந்த வெற்றிக்காகவே மக்கள் முதலாவது வெற்றியை NPP க்கு வழங்கினர். ஆகவே அடுத்த கட்டமான இரண்டாவது வெற்றியை – சிறப்பான ஆட்சியை மக்களுக்குக் கொடுத்து ஆக வேண்டும்.

இதற்குச் செய்ய வேண்டிய பல பணிகள் உள்ளன. முக்கியமாக மக்களுக்கு உண்மையையும் யதார்த்த நிலையையும் சொல்ல வேண்டும். ஏனென்றால், ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவின் மீதும் NPP மீதும் மக்களுக்கு மிகப் பெரிய மதிப்பும் நம்பிக்கையும் உண்டு. அதேயளவுக்கு அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளும் அவர் மீதும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் மீதும் உண்டு.

ஆனால், அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் அரசாங்கத்தினால் உடனடியாகச் செய்ய முடியாது. ஏன் ஆட்சி முழுவதிலும் கூட முழுமையாக நிறைவேற்ற முடியாது. கட்டம் கட்டமாகவே அதைச் செய்ய முடியும். இதைக்குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. முக்கியமாக NPP ஆதரவாளர்களுக்கு. இதில் அவர்கள் எந்தத் தயக்கமும் கொள்ளத் தேவையில்லை. உண்மையைச் சொல்வதற்கு எதற்காகத் தயங்க வேண்டும்? உண்மையை மறைப்பதே பேராபத்தாகும்.

உதாரணமாக NPP ஆட்சிக்கு வந்த பிறகும் IMF உடன் தொடர்ந்து பேச வேண்டியுள்ளது. பேசிக் கொண்டிருக்கிறது. அதைப்போல ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள், நடந்து கொண்டிருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக எல்லாம் அதிரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், அவற்றின் மீதான பரிசீலனைகளைச் செய்யலாம். அவற்றை மேலும் தொடர்வதாயின் எந்த அடிப்படையில் தொடர்வது? அவற்றை இடைநிறுத்த வேண்டுமாயின் எந்த அடிப்படையில் இடைநிறுத்துவது என்ற பரிசீலனைகள் – மீளாய்வுகளைச் செய்யலாம். அவற்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இதற்கான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு விடுத்துள்ளார். இவ்வாறே ஏனைய ஒவ்வொரு விடயங்களிலும் பொருத்தமான அணுகுமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அதாவது, ஒவ்வொன்றும் சட்டரீதியான முறையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டத்தை – விதிமுறைகளை மீறி எல்லாவற்றிலும் கை வைக்க முடியாது. உதாரணமாக கடந்த ஆட்சியின்போது ஊழலுடன் சம்மந்தப்பட்ட அரசியற் தலைவர்களின் மீது கை வைப்பதாயின் உரிய வகையில் சட்டபூர்வமான ஆதரத் தரவுகளோடுதான் அதைச் செய்ய முடியும். இல்லையேல் அது தனியே அரசியல் பழிவாங்கல் என்றே ஆகிவிடும்.

ஆகவே ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய கால அவகாசம் வேண்டும். இல்லையென்றால், அரசாங்கம் கடுமையான சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும். அது தேவையற்ற விமர்சனங்களை அரசாங்கத்தின் மீது உருவாக்கி விடும் என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அப்பொழுதான் மக்கள் யதார்த்த நிலையை – உண்மையான பிரச்சினையைப் புரிந்து கொள்வர். மக்களுடைய எதிர்பார்ப்புகளும் நம்பிக்கையும் பெரியது என்பதை மீளமீள வலியுறுத்துகிறோம். உதாரணமாக NPP ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல்வாதிகள் எல்லாம் சிறையில் தள்ளப்படுவார்கள். பொருளாதாரம் சடுதியாக வளர்ச்சியடையும். நெருக்கடிகள் குறையும். நாட்டில் தட்டுப்பாடுகள் என்பதே இருக்காது. அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணமே – நம்பிக்கையே பலரிடத்திலும் உள்ளது. இதை ஒரே நாளில் முதல்வன் படத்தில் வரும் அருச்சுனைப் போல செயற்படுத்திவிட முடியாது. ன்பதால் அரசாங்கத்துக்கு ஒரு குறிப்பிட்டளவு கால அவகாசம் வேண்டும். ஆனால், அந்தக் கால அவகாசம் பொறுப்புடன் வேலைகளைச் செய்வதற்கே தவிர, கால அவகாசத்தைக் கோரிப் பொறுப்புகளை – நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தக் கூடாது. கடந்த ஆட்சிகளில் பல விடயங்களில் அவ்வாறான தாமத உத்தி பயன்படுத்தப்பட்டது. இதையும் NPP யின் ஆதரவாளர்களும் ஊடகங்களும் கவனத்திற் கொண்டு உரிய நெறிப்படுத்தலைச் செய்வது அவசியமாகும். அதாவது அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கான வெறும் புகழுரைகளை விட, அது சிறப்பான முறையில் இயங்குவதற்கான அறிவுரைகளும் ஆதரவுமே முக்கியமானது.

கருணாகரன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division