மடிக்கணினி வந்த பின்னர்
மணிக்கணக்காக
நீண்ட வாசிப்புக்கள்
கணப்பொழுதில்
விடைபெற்றது
துரதிர்ஷ்டம் தான்
இல்லையா
அகராதியை அலசி
அர்த்தம் அறிந்த
ஆனந்தமும்
புத்தகத்தைப் புரட்டி
புதையல்
கண்டெடுத்த பூரிப்பும்
பக்கம் பக்கமாக
பத்திரிகையை
பதம் பார்த்த பரவசமும்
இதழ்கள் விரித்து
வாரிதழ்களில்
மூழ்கிய இன்பமும்
சஞ்சிகைகளினூடே
சஞ்சரித்த
சந்தோசமும்
நூலகங்களின் மடியில்
தவம் கிடந்த சுகமும்
இயந்திர உலகில்
இயந்திர வேகத்தில்
இயங்கும் இளைய
தலைமுறையினர்
அறியா
இரகசியமாகிப் போனது
கையில் ஏந்தி
வாசனையை நுகர்ந்தும்
எழுத்துக்களில் மூழ்கி
உணர்வுகளில் கரைந்தும்
அறிவைப் பெருக்கி
ஆழ்மனதில் அமரும்
ஒரு வாசிப்பின் மகிழ்ச்சி
அப்படி வேறு எதில் தான்
கிடைத்து விடப்
போகின்றது
அதிலும்
ஒரு மழை நாளில்
ஒற்றைத் தேநீர்
கோப்பையுடன்
ஒரு சில்லென்ற வாசிப்பு
உள்ளங்களின் மட்டுமல்ல
கண்களினதும் சுவாசிப்பு
அறிவோடு வாழ்வையும்
அர்த்தப்படுத்தும் வனப்பு