இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்து மீன்பிடிப்பதனால் உருவாகியுள்ள பிரச்சினை கடந்த திங்களன்று இந்திய ராஜ்யசபாவில் எதிரொலித்தது. ராஜ்யசபாவில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இந்திய மீனவர் விவகாரம் குறித்து காரசாரமாகப் பேசியிருந்தார்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மொத்தம் 141 பேர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது 198 மீன்பிடிப் படகுகளும் இலங்கை அரசின் பொறுப்பில் உள்ளதாகவும் இந்திய மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் ராஜ்யசபாவில் விளக்கமளித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கொழும்பிலுள்ள இந்தி உயர்ஸ்தானிகர் சந்தோஷ் யா கடந்த புதனன்று கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
அதேசமயம் இம்மீனவர்களை விடுவிப்பதற்கு இந்திய மத்திய அரசாங்க மட்டத்திலும் இராஜதந்திர ரீதியில் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்திய மீனவர் விவகாரம் இலங்கை_ இந்திய நாடுகளுக்கிடையில் நட்புரீதியில் தீர்த்து வைக்கப்பட வேண்டுமென்பதே இருநாடுகளினதும் எதிர்பார்ப்பு ஆகும். இவ்விவகாரமானது இலங்கையின் வடபகுதி மீனவர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் சம்பந்தப்பட்டதாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இருதரப்பு மீனவர்களும் தமிழர்கள் என்பதால் மனக்கசப்புகள் இன்றி இப்பிரச்சினை தீர்க்கப்படுவது அவசியம்.
இலங்கையில் 1983 வன்செயல்களைத் தொடர்ந்து வடக்கிலிருந்து வகைதொகையின்றி தமிழகத்துக்கு இடம்பெயர்ந்த தமிழர்களை அன்புடன் வரவேற்று, அரவணைத்து வாழ்வளித்தவர்கள் தமிழக மக்களென்பதை மறந்து விடலாகாது. அதற்கான நன்றியுணர்வும் ‘தொப்புள் கொடி’ உறவும் என்றும் தொடர வேண்டுமென்பதே இருநாடுகளின் தமிழர்களது விருப்பமாக உள்ளது.
எனினும், வடமாகாண மீனவர்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கும், வடபகுதி கடல் வளங்கள் அழிக்கப்படுவதற்கும் இடமளிப்பது முறையல்ல என்பதை தமிழக அரசியல்வாதிகள் புரிந்து கொள்வது அவசியம்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசிக்கும் எந்தவொரு படகையும் கைப்பற்றுவது கடற்படையினரின் கடமையாகும். கடற்படையினர் தமது கடமையையே செய்கின்றனர்.
ஆனால் தமிழக மீனவர்களின் கருத்து வேறுவிதமாக உள்ளது. இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவி மீன்பிடிப்பது சட்டரீதியானது என்ற தொனியில் தமிழக அரசியல்வாதிகள் பகிரங்கமாகக் கூறுகின்றனர். எல்லை தாண்டும் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது அநீதியென்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசியல்வாதிகளின் இவ்வாறான கருத்து விசித்திரமாகவே உள்ளது. மற்றொரு நாட்டு எல்லைக்குள் அத்துமீறுவது நீதியென்றுதான் அவர்கள் வாதிடுகின்றனர். அவர்களது இத்தகைய அபத்தமான கருத்துகளால்தான் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் துணிச்சலாக ஊடுருவுகின்றனர் என்பதுதான் உண்மை.
நிலைமை இவ்வாறிருக்ைகயில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமான விஜயம் மேற்கொள்ளவிருக்கின்றார். அவரது விஜயத்தின் போது இந்திய மீனவர் பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் அங்கு விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிநேகபூர்வ அடிப்படையிலான தீர்வுதான் இங்கு அவசியமாகின்றது.