தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 42 ஓட்டங்களுக்கு சுருண்டதை அடுத்து பெற்ற மோசமான சாதனைகள் வருமாறு,
இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்களாக இந்த 42 ஓட்டங்களும் மோசமான சாதனைப் பட்டியலில் இடம்பெற்றது. முன்னர் 1994 இல் கண்டியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 71 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்ததே மோசமாக இருந்தது. அதேபோன்று உலக டெஸ்ட் சம்பியன்சிப்பில் அணி ஒன்று பெற்ற இரண்டாவது மிகக் குறைந்த ஓட்டங்களாகவும் இது பதிவானது. 2020 இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 36 ஓட்டங்களுக்கு சுருண்டது இதன் முதலிடத்தில் உள்ளது.
இலங்கை அணி 42 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தபோது அந்த அணி 13.5 ஓவர்களே துடுப்பெடுத்தாடியது. இது டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது குறுகிய இன்னிங்ஸாக பதிவானது. 1924 இல் பெர்மிங்ஹாம் டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு எதிராக தென்னாபிரிக்க அணி 30 ஓட்டங்களுக்கு சுருண்டபோது அந்த அணி 12.3 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டது இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளது.
இதன்போது எழு விக்கெடிட்டுகளை வீழ்த்திய மக்ரோ ஜான்சன் 41 பந்துகளை வீசியே இத்தனை விக்கெட்டுகளையும் சாய்த்தார். அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளை வீசி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியவர் வரிசையில் அவர் முதல் இடத்தை பகிர்ந்துகொண்டார். 1904 மெல்பேர்ன் டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர் ஹியுஜ் டம்பிளும் சரியாக 41 பந்துகளை வீசி 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை அணி 42 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்காவுக்கு எதிராக அணி ஒன்று பெற்ற மிகக் குறைந்த ஓட்டமாகவும் இருந்தது. முன்னர் 2013 கேப் டவுன் டெஸ்டில் நியூசிலாந்து 45 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது குறைவாக இருந்தது. அதேபோன்று தென்னாபிக்க மண்ணில் பெறப்பட்ட மூன்றாவது மிகக் குறைந்த ஓட்டமாகவும் இது இருந்தது. 1896 இல் கிபர்ஹா டெஸ்டில் தென்னாபிரிக்க அணி 30 ஓட்டங்களுக்கு சுருண்டது முதலிடத்திலும் 1899 கேப் டவுன் டெஸ்டில் தென்னாபிரிக்க அணி மீண்டும் ஒருமுறை 35 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றவையாகும்.
ஜான்சன் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்த 13 ஓட்டங்களையே விட்டுக்கொடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு வீரர்கள் மாத்திரமே 7 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு இதனை விடவும் குறைந்தது ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளனர். மிகக் குறைந் ஓட்டங்களை விட்டுக்கொடுத்தவராக இங்கிலாந்தின் ஜோர்ஸ் லோமன் 1896 இல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜான்சன் வீழ்த்திய எழு விக்கெட்டுகளும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடனேயே வீழ்த்தப்பட்டன. இவ்வாறு டெஸ்ட் வரலாற்றில் ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் வீழ்த்தப்பட்ட இரண்டு சந்தர்ப்பங்களே இதற்கு முன்னர் பதிவாகியுள்ளன. 2013 லோட்ஸ் டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிராக ஸ்டுவட் பிரோட் வீழ்த்திய ஏழு விக்கெட்டுகளிலும் எதிரணி வீரர் ஒற்றை இலக்கத்துடனேயே வெளியேறினர். இங்கிலாந்துக்கு எதிராக 2013 அடிலெயிட் டெஸ்டில் மிட்சல் ஜோன்சலும் இவ்வாறு செய்தார்.
டர்பன் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இலங்கையின் ஐந்து வீரர்கள் டக் அவுட் ஆகினர். இலங்கை டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக வீரர்கள் டக் அவுட் ஆன பட்டியலில் இது முதல் இடத்தில் இணைந்தது. இந்தியாவுக்கு எதிரான 1990 சண்டிகர் டெஸ்ட் இன்னிங்ஸிலும், நியூசிலாந்துக்கு எதிரான 2006 வெலிங்டன் டெஸ்ட் இன்னிங்ஸிலும் இலங்கையின் ஐந்து வீரர்கள் டக் அவுட் ஆகினர்.
தென்னாபிரிக்க அணி டர்பன் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையிலும் அந்த அணியால் முதல் இன்னிங்ஸில் 149 ஓட்டங்களால் முன்னிலை பெற முடிந்தது. அதாவது முதல் இன்னிங்ஸில் 200க்கும் குறைவான ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் அணி ஒன்று முன்னிலை பெற்ற அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும். முந்தைய அதிகபட்ச ஓட்டங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக 1981 வக்கா டெஸ்டில் ஆஸி. அணி முன்னிலை பெற்ற 118 ஓட்டங்கள் இருந்தன. இதன்போது முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணி 180 ஓட்டங்களுக்கு சுருண்ட நிலையில் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் 62 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
17 டெஸ்ட் போட்டிகளில் ஆடும் பிரபாத் ஜயசூரிய 100ஆவது டெஸ்ட் விக்கெட்டை பூர்த்தி செய்தார். இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய இரண்டாவது வீரராக அவர் இடம்பிடித்தார். 1896 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஜோர் லோமன் 16 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியது இன்று வரை சாதனையாக உள்ளது. எனினும் பிரபாத் ஜயசூரியவுடன் சார்லி டியுனர், சிட்னி பர்ன்ஸ், கிளாரி கிரிம்மட் மற்றும் யாசிர் ஷா ஆகியோரும் 17 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.