பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் கடந்த 21ஆம் திகதி நடைபெற்றன. பொதுத்தேர்தலின் பின்னர் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில் சபாநாயகர் தெரிவு, பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் தவிசாளர் தெரிவு, சபாநாயகர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் என்பன பாராளுமன்ற பாரம்பரியத்திற்கு அமைய இடம்பெறுபவை ஆகும்.
பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில் அதன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பு, நிலையியற் கட்டளைகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதும், சில விடயங்கள் பாரம்பரியமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிகழ்வுகளாகும்.
பிரித்தானியர்களின் ஆட்சியில் இருந்தபோதே இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு, பிரதிநிதித்துவ ஜனநாயக முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை நமது பாராளுமன்றத்தில் பின்பற்றப்படும் விடயங்களுக்கு முன்னோடி பிரித்தானியப் பாராளுமன்றமாகும்.
இந்த அடிப்படையில் பொதுத்தேர்தலின் பின்னர் கூடும் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாளில் சபாநாயகர் தெரிவு, பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புக்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறும்.
இதற்கு அமைய பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கலாநிதி அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டார். பிரதிச் சபாநாயகராக வைத்திய கலாநிதி ரிஸ்வி சாலியும், குழுக்களின் பிரதித் தவிசாளராக ஹேமாலி வீரகேரவும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
சபாநாயகரின் தெரிவைத் தொடர்ந்து அவர் குறித்த பதவியில் உறுதியுரை எடுத்துக் கொள்வார். இதன் பின்னர் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் உறுதியுரை எடுத்துக் கொள்ளும் சம்பிரதாயம் பின்பற்றப்படுகின்றது.
இலங்கை அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்துடன் அமைந்த பாராளுமன்றமாக பத்தாவது பாராளுமன்றம் அமைந்துள்ளது. விகிதாசார தேர்தல் முறையில் எந்தவொரு தனிக்கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது சாத்தியமாகாது என்ற நிலைப்பாட்டை மாற்றியமை இதற்கு விசேட காரணமாகும்.
தேசிய மக்கள் சக்தி என்ற தனிக்கட்சி மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களுடன் ஆட்சியமைத்தது. பாரிய எதிர்பார்ப்புகளுடன் பத்தாவது பாராளுமன்றத்தின் முதல்நாள் அமர்வுகள் இடம்பெற்றன. இதில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயற்பாடு பேசுபொருளாகியிருந்தது.
யாழ் மாவட்டத்திலிருந்த சுயேச்சையாகப் போட்டியிட்டுப் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் என்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்திருந்த விவகாரமே இவ்வாறு பேசுபொருளாகியிருந்தது.
பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில் அரசியலமைப்பு, நிலையியற் கட்டளை போன்ற எழுதப்பட்ட விதிகளுக்கு அப்பால் பாரிம்பரியமாகப் பின்பற்றப்பட்டுவரும் சம்பிரதாயமும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இலங்கைப் பாராளுமன்றம் பிரித்தானியப் பாராளுமன்றத்தின் சம்பிரதாயங்களைப் பின்பற்றி வருகின்றது. பொதுத்தேர்தலின் பின்னர் கூடும் முதல்நாள் பாராளுமன்ற அமர்வில் அதாவது, உறுப்பினர்கள் பதவிச் சத்தியம் செய்யும் நாளன்று எந்தவொரு உறுப்பினரும் தமக்கு விரும்பிய ஆசனத்தில் அமர முடியும் என்ற நடைமுறை உள்ளது.
இருந்தபோதும், பாராளுமன்றத்தில் ஆசன ஒதுக்கீடு பொதுவாகக் காணப்படும் ஒன்றாகும். எனினும், முதல்நாள் ஆசன ஒதுக்கீடு இருக்காது. பாராளுமன்ற ஆசன ஒதுக்கீடு பற்றிப் பார்ப்பதாயின், எதிர்க்கட்சியின் பக்கத்தில் சபாநாயகரின் பக்கத்திலிருந்து முதலாவது வரிசையில் எட்டாவது ஆசனம் எதிர்க்கட்சித் தலைவருக்குரியதாகும்.
அதற்கு நேரெதிரே ஆளும் கட்சியின் பக்கத்தில் ஜனாதிபதி மற்றும் அதற்கு அருகில் பிரதமருக்கு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். இவ்வாறான நிலையில் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற முதலாவது நாள் அமர்வில் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
பாராளுமன்ற சம்பிரதாயத்தின்படி முதல்நாள் எவரும் எந்த ஆசனத்திலும் அமரலாம் என்று இருந்தாலும், குறிப்பிட்ட ஆசனங்களில் அதாவது, ஜனாதிபதி, பிரதமர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் போன்றோரின் ஆசனங்களில் அதற்குரிய நபர்கள் தவிர வேறு நபர்கள் அமர்வதில்லையென்பது பாராளுமன்றத்தின் சம்பிரதாயமாகும். எனினும், இந்த சம்பிரதாயத்தை மீறி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமர்ந்திருந்தார்.
இது குறித்து சபையின் உதவியாளர் பாராளுமன்ற உறுப்பினருக்குத் தெரியப்படுத்தியிருந்தார். அன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவிச்சத்தியம் செய்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச அவர்களை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.
அதன் பின்னர் சபை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு பின்னர் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை முன்வைப்பதற்காக மீண்டும் கூடியபோதும் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் குறித்த யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அமர்ந்திருந்தார். அந்த ஆசனத்திலிருந்து அவர் எழுந்திருக்கவில்லை.
இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பிறிதொரு ஆசனத்தில் அமர்ந்திருந்தார். இந்த விடயம் ஊடங்களில் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியது. முதற்தடவையாகப் பாராளுமன்றம் தெரிவாகியிருந்தாலும் பாராளுமன்றத்தின் சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும் என்ற தர்க்கம் பலராலும் முன்வைக்கப்பட்டிருந்தது.
முதல் தடவை தவறுதலாக அமர்ந்திருந்தாலும், சபை இடைநிறுத்தப்பட்டு மீண்டும் கூடியபோதும், அதேமாதிரி நடந்துகொண்டமை தொடர்பிலேயே பலரும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்கள். மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் வாக்களித்து புதியவர்களைத் தெரிவு செய்துள்ள நிலையில், மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு ஏற்ற வகையில் தமது பிரதிநிதிகள் நடந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
அது மாத்திரமன்றி பாரம்பரியங்களுக்கும், மரபுகளுக்கும் மதிப்பளித்துச் செயற்படுவதே பாராளுமன்றம் குறித்து மக்கள் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்த உதவியாகவிருக்கும்.
இம்முறை பாராளுமன்றத்தில் 162 புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதாவது முதல் தடவையாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர். இவர்கள் பாராளுமன்றத்தின் பாரம்பரியம் மற்றும் சிறப்பை உணர்ந்து அதன் முழுமையான பயனையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
இதனை விடுத்து, பாரம்பரியத்தை மீறும் வகையில் நடந்து கொள்வது பாராளுமன்றம் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்குவதாக அமைந்துவிடும்.
பி.ஹர்ஷன்