அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்படாதது குறித்து முஸ்லிம் சமூகம் வருந்தத் தேவையில்லை. அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படலாம். அரசின் 5 வருட காலப்பகுதியில் முஸ்லிம் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்கிறார் தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த ஒருவர் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்பது முஸ்லிம் சமூகத்தினது விருப்பமாக இருந்திருக்கின்றது. சுதந்திரத்தின் பின்னரான முதலாவது அமைச்சரவையிலிருந்து முஸ்லிம் பிரதிநிதியொருவர் அமைச்சவையில் அங்கம் வகித்திருக்கிறார். அதுவொரு சமூக மனநிலை. அரசாங்கம் ஒரு கூட்டணி அரசாக அமைகின்ற போது அதில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் கட்சிகள் தமக்கான அமைச்சுப் பதவிகளைக் கோரியே அதரவு வழங்குவர்.
அவர்களுக்கு தாம் பிதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுவதுண்டு. தேசிய மக்கள் சக்தி இவ்விடயத்தில் தனது நிலைப்பாட்டைத் தௌிவாகக் கொண்டிருக்கின்றது, துறைசார்ந்து திறமையானவர்கள் எந்த மதத்தவராயினும், இனத்தவராயினும் தேசிய மக்கள் சக்தி அதன் அமைச்சரவையில் அவர்களை உள்ளீரக்கும். அப்படியாயின் முஸ்லிம் சமூகத்தில் பொருத்தமானவர்கள் இல்லையா? என்ற கேள்வி எழலாம். ஆனால் அதில் முஸ்லிம், தமிழ் என்ற வேறுபாடு பாராமல் மக்களுக்கு பணியாற்ற துறைசார்ந்த சிறந்தவர் என்பதே பொருத்தமானதாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். அதுமாத்திரமல்ல அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு என்பதும் 05 வருடங்களுக்கும் ஒரேமாதிரியானதாவும் இருக்காது.
இடையில் மாற்றங்கள் வரலாம். அதில் முஸ்லிம் ஒருவர் அமைச்சராககூட நியமிக்கப்படலாம். எனவே முஸ்லிம் சமூகம் பொறுமை காக்க வேண்டும். அரசாங்கம் முழு இலங்கைக்காகவும் அர்ப்பணிப்போடு செயற்படுகையில் அதற்கு இன, மதம் பேதம் பாராது ஆதரவு வழங்க வேண்டும். மாறாக அரசு இன ரீதியாக, மொழி ரீதியாக அடக்க முற்பட்டால் அதனை எதிர்ப்பதில் தவறில்லை என்றார்.
வாசுகி சிவகுமார்