தமிழ் மக்களின் மனதுக்குள்ளிருக்கும் வலி சுமந்த நாளை நினைவுகூரும் நினைவேந்தல் தினத்துக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனுமதியை வழங்கியமைக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 29 ஆம் திகதி மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, இதனை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
எவ்வித இடையூறுகளும் இல்லாமல், மக்களின் மனதுக்குள்ளிருக்கும் சோகங்களை நினைவுகூருவதற்கு அனுமதியை வழங்கிய ஜனாதிபதிக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்தக் கால நினைவேந்தல்களின்போது பொலிஸார் மற்றும் இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணம் காணப்பட்டன. இம்முறை நினைவேந்தலின்போது ஒரு சில இடங்களில் பொலிஸாரினால் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டன.
எனினும், இம்முறை ஒரு நிறைவான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனாதிபதிக்கும், தற்போதைய அரசுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.