Home » தடைகளை தகர்த்து தனித்துவமான

தடைகளை தகர்த்து தனித்துவமான

ஏழாண்டில் கெப்பிட்டல் எப்.எம்

by Damith Pushpika
December 1, 2024 6:06 am 0 comment

தனிமையிலிருக்கும் மனிதனின் தோளில் கைவைத்துத் துணையாக அமரும் நண்பனைபோன்றது வானொலி.

வீட்டில், வேலைத்தளத்தில், வயற்காட்டில் என்று மட்டும் இல்லாமல், போகும் இடமெல்லாம் தனிமையைப் போக்குவது வானொலி.

தொலைக்காட்சி வருவதற்கு முன்பு மக்கள் மனத்தில் இடம்பிடித்த இந்த வானொலி, இன்று நவீன தொழினுட்ப வருகையுடன் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு மக்களின் கரங்களில் தவழ்ந்துகொண்டிருக்கிறது. இப்படி இலட்சக் கணக்கான வானொலிகள் உலகில் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அதில் தமிழ் மொழி பேசும் மக்கள் மத்தியில் இன்று தனக்கெனத் தனியான ஓரிடத்தைப் பிடித்துக்கொண்டிருப்பது கெப்பிட்டல் எப்.எம் வானொலி. எப்.எம் (அதிர்வுச் சீர் அலைவரிசை) ஊடாக மாத்திரமன்றி, செயலிகள் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நேரலையாகக் கெப்பிட்டல் வானொலி ஒலிபரப்பாகி வருகிறது.

இற்றைக்கு ஏழாண்டுகளுக்கு முன்னர், அனைவருக்கும் புதுவிதமான மாற்றத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கை அடிப்படையாகக் கொண்டு “இது நம்ம ரேடியோ” எனும் மகுடவாசகத்தோடு Trymass Media Network (ட்றைமாஸ் ஊடக வலையமைப்பு) நிறுவனத்தால் 2017 டிசம்பர் மாதம் முதலாம் திகதி 94.0 மற்றும் 103.1 அலைவரிசை வாயிலாக வானலையில் தன் கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது. இந்த அமர்க்களமான ஆரம்பம் அகில இலங்கை ரீதியாகவும், www.Capitalfm.lk எனும் இணையத்தளம் வாயிலாகவும், உலகளவில் ஒலிப்பரப்பாகிய முதல் தனியார் வானொலி என்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது.

நிறுவனத்தலைவர் வின்சேந்திரராஜன் அவர்களின் ஆலோசனையில், பணிப்பாளர்களான திருமதி சுமதி வின்சேந்திரராஜன், நிதர்சன் வின்சேந்திரராஜன், விதுர்சன் வின்சேந்திரராஜன், பொது முகாமையாளர் ஷியாவுல் ஹசன் ஆகியோர் தலைமையில் முகாமையாளர்களின் மிகச்சிறந்த வழிகாட்டலின் கீழ் இன்று 07வது ஆண்டு என்ற இமாலய இலக்கை எட்டிப்பிடித்திருக்கின்றது.

ட்றைமாஸ் நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர்களின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்ப்ட இந்த வானொலியின் நிகழ்ச்சி வடிவமைப்பு, ஒருங்கிணைப்பு, வழிகாட்டல், தலைமைத்துவம் எனப் பன்முக வகிபாகத்தை வழங்கி வருபவர் ட்றைமாஸ் ஊடக வலையமைப்பின் பொது முகாமையாளர் ஜனாப் ஷியா உல் ஹசன். கெப்பிட்டல் எப்.எம்மின் ஸ்தாபகர்களில் ஒருவர்தான் ஷியா உல் ஹசன்.

“வானொலி என்பது என் உயிருடன் கலந்தது; மூச்சுடன் நிறைந்தது. கெப்பிட்டல் இந்த ஏழாண்டில் அடைந்திருக்கும் வளர்ச்சி, நான் என்னில் ஏற்பட்டிருக்கும் உள, நல வளர்ச்சி. அகத்திலும் புறத்திலும் ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்கிறார் ஷியா உல் ஹசன்.

பாடல் ஒலிபரப்பு மாத்திரமன்றி இளைய தலைமுறையினரின் ஆக்கத்திறனுக்கு ஊக்கமளிப்பதில் முன்னின்று செயற்பட்டிருக்கிறது கெப்பிட்டல் எப்எம். அறிவிப்பாளர் அதிதி என்ற மகுடத்தில் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளித்து அறிமுகம் செய்தோம்.

அவ்வாறு அறிவிப்பாளர் அதிதி நிகழ்ச்சியை ஒரு பயிற்சிக் களமாகப் பயன்படுத்திக்கொண்ட பலர் இன்று பல்வேறு தனியார் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றுவது மனத்துக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதுதான் எமது இலக்கு. அந்த இலக்கின் ஓர் அங்கமாகப் பல தடவை அரச வானொலி விருதையும் பெற்றிருக்கிறது கெப்பிட்டல் எப்.எம். காற்றலை கதைகள் என்ற தொனிப்பொருளில் 200 இற்கும் அதிகமான வானொலி நாடகங்களைத் தயாரித்தளித்திருக்கின்றது.

அதன் மூலம் சுமார் 100 உள்ளூர் கலைஞர்களை உருவாகியிருக்கிறார்கள்.

உள்ளூர் பிரபலங்களைப் பற்றிய அறிமுகத்தை கெப்பிட்டல் செலிபிரிட்டி என்ற நிகழ்ச்சி வாயிலாக இளம் அறிவிப்பாளர்களையும் குழந்தைகளுக்கு வாய்ப்பு வழங்குவதற்காகக் கெப்பிட்டல் ஜூனியர் நிகழ்ச்சியையும் ஒலிபரப்பி வருகிறது. அரசியல் விவாதங்களுக்குக் களம் கொடுக்கும் வகையில் அதிகாரம் நிகழ்ச்சியையும் நடத்தப்படுகிறது. செய்திகள், விமர்சனங்கள், சினிமாத் தகவல்கள், அறிவூட்டல் நிகழ்ச்சிகள், நடப்பு விவகாரத் தகவல்கள் எனப் பல விடயதானங்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குகிறது. இதனால், மக்கள் மத்தியில் கெப்பிட்டல் வானொலிக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. தேர்தல் காலங்களில் பெறுபெறுகளை உடனுக்குடன் வழங்குவதில் முன்னணி ஊடகமாகச் செயற்பட்டமை தாம் அடைந்த முக்கிய இலக்காகும் என்கிறார்கள் கெப்பிட்டல் குடும்பத்தினர்.

உள்நாட்டுக் கவிஞர்களுக்கு வாய்ப்பையும் அவர்களின் கவிதைகளுக்கான அங்கீகாரத்தையும் “தீராநதி” நிகழ்ச்சி மூலமாகப் பெற்று கொடுத்ததோடு, இலங்கையில் நடைபெறும் புத்தகவெளியீடுகளையும் வெளியுலகிற்கு அறியப்படுத்தியது.

குறுகிய காலத்திற்குள் அதிகளவிலான பிரதேசங்களுக்கு ஊடக அனுசரணைகளைத் தந்து, அதிகமாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் அனுசரணை வழங்கி நேரலைகளையும் வழங்கியது. நல்லூர் உற்சவத்தின்போது பிரமாண்டமான வளாகம் அமைத்து அனைவரையும் கவர்ந்தது. மேலும், கடந்த வருடங்களில் நல்லூர் உற்சவ காலத்தில் அதிகளவிலான பக்தி இசைப்பாடல்களையும் வெளியிட்டு தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியது.

இப்படியான பயணத்தில் இவ்வருடம் சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் மண்ணில் சிறுவர்களுக்கான பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி பரிசு பொருள்களை அள்ளி வழங்கி, முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தினையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுத்தது. வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து நாடு முழுவதும் ஊக்குவிப்பு நிகழ்க்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்.

இதன் மூலம் அமைந்த வெற்றியால், நாட்டில் பல முன்னணி வர்த்தக நிறுவனங்கள் எம்முடன் கைகோத்து வருகின்றன.

ட்றைமாஸ் ஊடக வலையமைப்பு கெப்பிட்டல் எப்.எம்., கெப்பிட்டல் தொலைக்காட்சி, 24 மணித்தியால ஒளிபரப்பாகத் தரிசனம் தொலைக்காட்சி எனத் தனது ஒலி, ஒளிபரப்பை விசாலப்படுத்தி வருகிறது.

சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் மக்களுக்குத் தேவையான தகவல்களை உடனுக்குடன் வழங்கியும் வருகிறோம் என்று விளக்கும் கெப்பிட்டல் குடும்பத்தினர் எதிர்காலத்தில் இன்னும் இலங்கை ஊடகப் பரப்பில் அகலக் கால் வைக்க எதிர்பார்த்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

ஆரம்பிக்கப்படும்போதே திறமைமிக்க தொழில் வல்லுநர்களோடு களத்தில் இறங்கிய கெப்பிட்டல் வானொலி, முதலாவது பிறந்த நாளின் முன்பதாகவே, எண்ணிலடங்கா ரசிகர் பட்டாளத்தைச் சுவீகரித்து கொண்டதுடன், நிகழ்ச்சிப்பிரிவு, செய்திப்பிரிவு, தொழினுட்ப பிரிவு, சந்தைப்படுத்தல் பிரிவு, திட்டமிடல் விரிவாக்கல் பிரிவு என்று திறம்பட கெப்பிட்டலின் வளர்ச்சிக்காக உழைக்கும் அனைவரது உழைப்பிலும் இன்று இலங்கை வானொலிகளில் தனி சாம்ராஜ்ஜியத்தை கெப்பிட்டல் உருவாக்கியிருக்கிறது என்கிறார்கள்.

பாடல்தெரிவுகளையும் நிகழ்ச்சிகளையும் நேயர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தரம்பிரித்து தொகுத்து வழங்குவதில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான ஏ. எல். ஜபீர் அவர்களின் தலைமையிலான இளம் வானொலிப்படையைக் கொண்ட கெப்பிட்டலுக்கு என்றுமே தனியிடம் உண்டு. நேயர்களின் ரசனையறிந்து, காலத்திற்கேற்ற வகையில் புதுமைகளைப் புகுத்தி, வானொலிகளில் வித்தியாசமான படைப்புகளை வழங்கிக்கொண்டிருக்கின்றோம் என்பதில் பெருமிதம் கொள்வதாகவும் சொல்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் நம்பகமாக வழங்குவதில் கெப்பிட்டல் என்றுமே பின் நின்றதில்லை, அந்தவகையில் capital செய்திகள் “மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற மகுடவாசகத்தோடு, செய்திப் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌஷாத் மொகிதீன், செய்திப் பிரிவின் முகாமையாளர் சிரேஷ்ட ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான விசு கருணாநிதி ஆகியோரின் தலைமையில் இளம் செய்திப்படையொடு திறம்பட இயங்கிக்கொண்டிருக்கின்றது

Capital FM மற்றும் கெப்பிடல் செய்திகளுக்காக சமூக வலைதளங்களை பராமரித்தல் காணொலிகளைப் பதிவேற்றுதல் போன்ற விடயங்களுக்கு டிஜிட்டல் குழுவினரின் பங்களிப்பு இன்றியமையாதது. அத்தோடு வானொலியையும் Capital தொலைக்காட்சியையும் சமூக வலைத்தளங்களையும் Graphics வேலைகளால் அழகுபடுத்தி மக்களிடம் இன்னும் அழகாகக் கொண்டு சேர்ப்பதற்கு முகாமையாளர் இசுருவின் பணிகளும் அளப்பரியன.

வானலை கடந்து கெப்பிட்டலை நேரடியாக நேயர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், மக்களோடு ஒன்றித்து பயணிப்பதிலும், திட்டமிடல் விரிவாக்கல் பிரிவுக்கு தனியிடமுண்டு. களத்திற்கே சென்று ஊடக அனுசரணைகளை வழங்குவதில் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவு கெப்பிட்டலின் வளர்ச்சிக்கு உறுதுணையாயிருக்கிறது.

இவற்றைத்தவிர, சந்தைப்படுத்தல் பிரிவினரும் தொழினுட்பப் பிரிவினரும் மனிதவளப் பிரிவினரும் நம்ம ரேடியோவின் வளர்ச்சிக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றனர் எனலாம். இவ்வாறு பலரது கனவுகளோடும் உழைப்பிலும் உச்சத்தை தொட்டிருக்கின்ற கெப்பிட்டல் எப்.எம் கடந்து வந்த இந்த 07 வருடத்தில் கண்ட சாதனைகள் ஏராளம்.

ஏழாண்டு நிறைவைக் கொண்டாடும் இந்தப் பொன்னா சந்தர்ப்பத்தில், “கெப்பிட்டல் காருண்யம்” நிகழ்ச்சித் திட்டத்தின் மூலமாக ஏழு பேருக்கு சக்கர நாற்காலிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி, டிசம்பர் முதலாம் திகதி பிறந்தநாள் கொண்டாடக்கூடிய உறவுகளைக் கலையகத்திற்கே அழைத்து, அவர்களையும் கெப்பிட்டலோடு பிறந்தநாள் கொண்டாடவைத்து அழகுபார்க்கவுள்ளது.

இப்படியான பயணத்தில் மக்களொடு மக்களாக, தோள்கொடுக்கும் தோழனாக இன்று Capital FM இனம், மத ,மொழி கடந்தும் ஒவ்வோர் இல்லத்திலும் செல்லக்குழந்தையாக மாறியிருக்கின்றது. இத்தனை சாதனைகளுக்கும் நேயர்கள் உங்களது அன்பும் ஒத்துழைப்புமே காரணமாக அமைந்திருக்கின்றது.

இத்தனை காலமும் கெப்பிட்டலின் வளர்ச்சிப்பாதையில் உறுதுணையாக நின்று தோள்கொடுத்த நேயர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் இந்த பிரமாண்ட வெற்றிக்குக் காரணமாக அமைந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைச் சொல்லி மகிழ்கிறது கெப்பிட்டல் எப்எம்.

சஞ்சய்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division