காசா மீதான யுத்தத்தை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முற்பகுதியில் ஆரம்பித்த இஸ்ரேல், லெபனான் வரையும் அதனை விரிவுபடுத்தியுள்ளது. இந்த யுத்தத்தில் இஸ்ரேல் பயன்படுத்தும் ஆயுதங்களும் அதன் விளைவான பாதிப்புக்களும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதன் விளைவாக யுத்தத்தை நிறுத்தி காசாவுக்கு மனிதாபிமானத்தை தங்குதடையின்றி அனுப்பி வைக்க இடமளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் இற்றைவரை யுத்தம் நிறுத்தப்பட்டதாக இல்லை.
இப்போர் காரணமாக காசாவில் மாத்திரம் இதுவரை 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காசாவிலுள்ள தனியார் மற்றும் பொதுக்கட்டடங்கள், குடியிருப்புக்கள், முகாம்கள், ஐ.நா. நிறுவனங்களின் கட்டடங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் சேதமடைந்தும் அழிவடைந்தும் உருக்குலைந்தும் போயுள்ளன. காசா சாம்பல் மேடாகக் காட்சியளிக்கிறது.
காசாவில் இத்தகைய நிலைமையை ஏற்படுத்த இஸ்ரேலுக்கு ஆயுத தளவாடங்களே பக்கத்துணையாக இருக்கின்றன. ஆயுதங்கள் தங்குதடையின்றி கிடைக்கப்பெறுவதால் யுத்தநிறுத்தத்தில் ஆர்வமற்ற போக்கை இஸ்ரேல் கையாளுகிறது என்ற குற்றச்சாட்டை மனித உரிமை குழுக்கள் முன்வைத்துள்ளன.
குறிப்பாக 2023 ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி காசா மீது போரை ஆரம்பித்த இஸ்ரேல், அதேயாண்டு நவம்பர் 24 ஆம் திகதி முதல் யுத்தநிறுத்தத்திற்கு இணங்கியது. அந்த யுத்தநிறுத்தம் மூன்று தடவை நீடிக்கப்பட்டு 31 ஆம் திகதி வரை தொடர்ந்தது. ஆனாலும் யுத்தநிறுத்த காலம் நிறைவடைய முன்னரே மீண்டும் போரை இஸ்ரேல் ஆரம்பித்தது. மீண்டும் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்படுவதாக இல்லை. ஒரு வருடத்திற்கு மேலாகியும் யுத்தம் தொடர்ந்த வண்ணமுள்ளது.
இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கு கடும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விடயத்தில் அமெரிக்கா, கட்டார், எகிப்து போன்ற நாடுகள் அயராது உழைத்து வருகின்றன. இருந்தும் யுத்தநிறுத்தம் ஏற்பட்டதாக இல்லை.
அதனால் பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்கள் காசாவில் பயன்படுத்தப்படுவதற்கு இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் எதிர்ப்புக்கள் கிளம்பின. இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாமென ஐ.நா. அடங்கலாக பல நாடுகளும் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன. பேரழிவுமிக்க ஆயுதங்கள் எவ்வித தங்குதடைகளும் இன்றி கிடைக்கப்பெற்று வருவதன் பின்புலத்தில்தான் இஸ்ரேல் யுத்தநிறுத்தத்தில் ஆர்வமற்ற முறையில் நடந்து கொள்வதால் அதற்கான பொறுப்பை இஸ்ரேலுக்கு ஆயுத தளவாடங்களை வழங்கும் நாடுகளும் ஏற்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளும் கூட யுத்தத்தை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்தலாயின. ஆனால் இஸ்ரேல் அவை எதனையும் கருத்தில் கொள்ளாது யுத்தத்தை தொடர்கிறது.
இந்நிலையில் பிரித்தானியா, இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் 350 நிறுவனங்களில் 30 நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை கடந்த செப்டெம்பரில் இரத்து செய்தது. இதேவேளை இஸ்ரேலுக்கு ஆயுத உதவி வழங்கும் மூன்றாவது பெரிய நாடான இத்தாலி கடந்த ஜனவரி முதல் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தியது. அதேபோன்று ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து, கனடா போன்ற நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ளன.
ஆனால் அமெரிக்காவும் ஜேர்மனியும் இஸ்ரேலுக்கு அதிகளவில் ஆயுத தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருவதாக டெலிகிராப் குறிப்பிட்டுள்ளது. இராணுவ தளவாட ரீதியாக இஸ்ரேலுக்கு உதவியளிக்கும் முக்கிய நாடான அமெரிக்கா 69 சதவீதமான ஆயுதங்களை வழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை இஸ்ரேலுக்கான உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் 30 சதவீதம் ஜெர்மனியில் இருந்து கிடைக்கப்பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தம் குடிமக்களதும் உலகின் பல நாடுகளதும் கோரிக்கைகளையும் கருத்தில் கொள்ளாத அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தொடர்ந்தும் இஸ்ரேலுக்கு ஆயுத தளவாட உதவிகளை வழங்கி வருவதால் இஸ்ரேல் பிரதமர் யுத்தத்தில் முனைப்பு காட்டி வருகின்றார் என்ற விமர்சனங்களும் நிலவுகின்றன. இந்நிலையில் துருக்கி தலைமையில் 52 நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதத்தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு அவசரக் கடிதமொன்றையும் அந்நாடுகள் எழுதியுள்ளன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை கூட மதித்து செயற்படத் தவறும் இஸ்ரேல் மீது ஆயுதத் தடை விதிக்கப்படுவது அவசியம் என்று அந்நாடுகள் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளன. இக்கடிதத்தில் துருக்கி, சீனா, ரஷ்யா, ஈரான், சவுதி அரேபியா, கட்டார், பலஸ்தீன், பிரேசில், அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியனவும் கையெழுத்திட்டுள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்திற்கு அமைய ஏற்கனவே கொங்கோ, ஹைட்டி, ஈராக், லிபியா, வட கொரியா, லெபனான், சூடான், தெற்கு சூடான் மற்றும் யேமன் ஜனநாயக குடியரசு ஆகிய ஒன்பது நாடுகளுக்கு ஆயுதத் தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்தச் சூழலில்தான் துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் மீது ஆயுதத் தடையை விதிக்கக் கோரியுள்ளன.
இதேவேளை இக்கோரிக்கைக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள 52 நாடுகளும் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடையை இஸ்ரேல் மீது விதிக்க முடிவு செய்துள்ளன. இருந்தும் கூட இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகளில் இது சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு 20 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
காசாவின் மனிதாபிமான நெருக்கடியை தீர்க்கும் வகையில் உதவிகளை விரிவுபடுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்தி அமெரிக்கா விதித்திருந்த காலக்கெடு கடந்த 13 ஆம் திகதி நிறைவடைந்தது. அமெரிக்காவின் வலியுறுத்தலை நிறைவேற்றத் தவறும் நாடுகளுக்கு இராணுவ உதவி வழங்குவதை இராஜாங்கத் திணைக்கள சட்டம் தடை செய்கிறது.
அப்படியிருந்தும் காலக்கெடு மீறப்பட்டுள்ள சில தினங்களுக்குள் 20 பில்லியன் அமெரிக்க டொலருக்கு இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை செய்யும் நடவடிக்கையை அமெரிக்க முன்னெடுத்திருக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தின் கீழ் எப் 15 யுத்த விமானங்கள், தாங்கிகள், மோட்டார் குண்டுகள், நேரடித்தாக்குதல் குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுத தளவாடங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
அதற்கான ஒப்பந்தத்திற்கு அமெரிக்க செனட் சபை அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த ஆயுத விற்பனையைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு செனட் சபைக்கு கொண்டுவரப்பட்ட மசோதா கடந்த 20 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து செயல்படும் முற்போக்கான சுயேச்சை உறுப்பினரான செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் இந்த ஆயுத விற்பனை ஒப்பந்தத்தை தடுக்கும் நோக்கில் இம்முயற்சியை முன்னெடுத்தார். இவரது முயற்சிக்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் பலர் ஆதரவு தெரிவித்திருந்தனர். மனித உரிமை அமைப்புக்களும் இந்நடவடிக்கையை வரவேற்றன. ஆனால் இந்த மசோதா 79 இற்கு 18 வாக்குகளால் தோல்வியுற்றுள்ளது.
செனட் சபை உறுப்பிரான பெர்னி சாண்டர்ஸ் கடந்த வருட இறுதிப்பகுதி முதல் இஸ்ரேலுக்கு ஆயுத தளவாடங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மசோதாவில் பெர்னி சாண்டர்ஸுடன் செனட்டர்களான பீட்டர் வெல்ச், ஜெஃப் மெர்க்லி, கிறிஸ் வான் ஹோலன், டிம் கெய்ன் மற்றும் பிரையன் ஷாட்ஸ் உள்ளிட்டோரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இருந்த போதிலும் இஸ்ரேலுக்கு 20 பில்லியன் அமெரிக்க டொலருக்கு ஆயுத தளவாடங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை முன்னெடுக்க அமெரிக்க செனட் சபை அங்கீகாரமளித்துள்ளமைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காசாவிலும் லெபனானிலும் பேரழிவை ஏற்படுத்தும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே இன்றைய தேவை எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மர்லின் மரிக்கார்